Last Updated : 10 Jul, 2018 06:13 PM

 

Published : 10 Jul 2018 06:13 PM
Last Updated : 10 Jul 2018 06:13 PM

‘விராட் கோலியை சதம் அடிக்க விட்டுவிடுவோமா?’- ஆஸி. வீரர் பாட் கம்மின்ஸ், மெக்ரா சவால்

 ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆண்டு இறுதியில் டெஸ்ட் தொடருக்காக வரும் இந்திய அணிக்கு நெருக்கடி அளிப்போம். கேப்டன் விராட் கோலியை சதம் அடிக்கவிடாமல் பார்த்துக்கொள்வோம் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் சவால் விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராவும் கம்மின்ஸ் சவாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாட உள்ளது. பந்தைசேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கி ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாத நிலையில், ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

ஆதலால், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இது சரியான தருணமாகும்.

ஆஸ்திரேலியாவுக்கு 12 முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடருக்காக பயணிக்கிறது.11 முயற்சிகளில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லவில்லை. 1981, 1985-86, 2003-2004 தொடர்களில் மட்டும் டெஸ்ட் தொடரை சமன் செய்தது. இதுவரை ஆஸ்திரேலியாவில் 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 5 போட்டிகளில் மட்டும் வென்றுள்ளது.

இந்நிலையில், சிட்னியில் உள்ள சேனல் 7 தொலைக்காட்சிக்கு ஆஸ்திரேலய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ், முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ரா ஆகியோர் பேட்டி அளித்தனர்.

அப்போது கம்மின்ஸ் கூறியதாவது:

''என்னுடைய துணிச்சலான, வீரமான கணிப்பு என்னவென்றால், ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆண்டு இறுதியில் டெஸ்ட் போட்டித் தொடர் விளையாட வரும் இந்திய அணியை வீழ்த்துவோம், அந்த அணியின் கேப்டன் விராட் கோலியை சதம் கூட அடிக்கவிடாமல் பார்த்துக்கொள்வோம்'' எனத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 62 ரன்கள் சராசரி வைத்துள்ளார். இது அவரின் டெஸ்ட் சராசரியான 53.40யைக் காட்டிலும் அதிகமாகும். ஆஸ்திரேலிய மண்ணில் கோலி 5 சதங்கள் அடித்துள்ளார்.

அப்போது அங்கிருந்த கிளென் மெக்ரா கூறுகையில், “இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் அதிகமான அழுத்தம், நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், எப்படி செயல்படப் போகிறார்கள் என்று பார்க்கலாம். இந்த டெஸ்ட் தொடர் மிகவும் சவால் நிறைந்ததாக, கடினமானதாக, சுவாரஸ்யம் மிகுந்ததாக அமையும். விராட் கோலி மற்ற வீரர்களைக் காட்டிலும் சிறிது ஆக்ரோஷமாகவே களத்தில் விளையாடுவார். ஆதலால், அவரை சரியாகத் திட்டமிட்டு சமாளிக்க வேண்டும்.

கடந்த 1970-ம் ஆண்டுகளிலும், 1980-ம் ஆண்டுகளிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணி யாராலும் வீழ்த்த முடியாத அணியாக இருந்தது. அவர்கள் எதிரணியின் கேப்டனை குறிவைத்துதான் விளையாடுவார்கள். அந்தத் திட்டம், மிகப்பெரிய தாக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது. நான் விளையாடிய காலத்திலும், யாரை இலக்காக வைத்து விளையாட வேண்டும் என்று நிர்ணயித்து அவர்களை இலக்காக்கி விளையாடுவோம்.

அதிலும் முதலிடத்தில் இருக்கும் வீரரோ அல்லது அணியின் கேப்டனையோ வீழ்த்தினால் மற்ற பணிகள் எளிதாகும். கோலியை விரைவாக ஆட்டமிழக்கச் செய்துவிட்டால், அடுத்து அணி வீரர்களை பேட்டிங்கில் குலைப்பது எளிதாகிவிடும்’’ என கிளென் மெக்ராத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x