Last Updated : 29 Jul, 2018 06:26 PM

 

Published : 29 Jul 2018 06:26 PM
Last Updated : 29 Jul 2018 06:26 PM

இலங்கையைப் பந்தாடியது தெ. ஆப்பிரிக்கா: ரபாடா, ஷம்சி பந்துவீச்சில் சிதைந்தது

ரபாடா, ஷம்சி ஆகியோரின் பந்துவீச்சில் தம்புலாவில் இன்று நடந்த இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்று முன்னிலையில் தென் ஆப்பிரிக்க அணி இருக்கிறது.

இலங்கை பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடிவருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை வென்றது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் இன்று தொடங்கியது.

முதல் போட்டி தம்புலா நகரில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. 34.3 ஓவர்களில் 193 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது. உள்நாட்டில் இலங்கை அணி எடுத்த 4-வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.

194 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 31 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர்  ரபாடா, சுழற்பந்துவீச்சாளர் ஷாம்சி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

ரபாடா, இங்கிடியின் வேகத்தில் இலங்கை அணி தொடக்கத்தில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. 9 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி தனது வெற்றியை உறுதி செய்துவிட்டது. 9 ஓவர்களில் இலங்கை அணி 35 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

முன்னணி பேட்ஸ்மேன்கள் டிக்வேலா(1), தரங்கா(10), மென்டிஸ்(5) மாத்யூஸ்(5), செயசூர்யா(0) என விக்கெட்டுகளை இழந்தனர். 6-வது விக்கெட்டுக்கு, கேஜே பெரேரா, டிசி பெரேரா ஆகியோர் சேர்ந்து அணியை மீட்டனர். 6-வது விக்கெட்டுக்கு இருவரும் 98 ரன்கள் சேர்த்தனர். டிசி பெரேரா 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முற்பகுதியில் விக்கெட் வீழ்ச்சிக்கு ரபாடா, காரணமாக இருந்தால், 2-வது பிற்பகுதியில் சுழற்பந்துவீச்சாளர் ஷாம்சி கையில் எடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடைசிநிலை வீரர்கள் தனஞ்சயா(11), லக்மால்(5), குமாரா(3) என விரைவாக வீழ்ந்தனர். நிலைத்து ஆடிய கே.ஜே பெரேரா 81 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். . 34.3 ஓவர்களில் 193 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ரபாடா, ஷாம்சி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

194 ரன்கள் சேர்த்தால்வெற்றி எனும் இலக்குடன் தென் ஆப்பிரிக்க வீரர்கள் அம்லா, டீ காக் களமிறங்கினார்கள். தனஞ்சயா வீசிய 5-வது ஓவரில் அம்லா 19 ரன்னிலும், அடுத்து வந்த மார்க்ரம் டக் அவுட்டிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

3-வது விக்கெட்டுக்கு வந்த டூப்பிளசி, டீகாக்குடன் சேர்ந்து விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். 47 ரன்கள் சேர்த்த நிலையில் டீ காக் ஆட்டமிழந்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தனர். அடுத்த சிறிதுநேரத்தில் டூப்பிளசியும் 47 ரன்களில் வெளியேறினார்.

4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய டுமினி அதிரடியாக பேட் செய்தார். 32 பந்துகளில் தனது 26-வது அரைசதம் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். முல்டர் 14 ரன்களிலும், டுமினி 53 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை தரப்பில் தனஞ்செயா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x