Published : 16 Jul 2018 08:08 PM
Last Updated : 16 Jul 2018 08:08 PM

புதிய விதி பாய்ந்தது: பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இலங்கை கேப்டனுக்கு ஐசிசி கடும் தண்டனை

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமாலுக்கு புதிய விதிகளின்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடும் தண்டனை விதித்துள்ளது.

தினேஷ் சந்திமால் மட்டுமல்லாது, அணியின் மேலாளர் அசாங்கா குருசிங்கே, பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கா ஆகியோரும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சமீபத்தில் புதிய விதிகளும் தண்டனையும் ஐசிசி கடுமையாக்கிய பின், இவர்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத்தீவுகளுக்கு சமீபத்தில் இலங்கை அணி சுற்றுப்பயணம் சென்றிருந்தது. அப்போது, செயின்ட் லூசியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது, 3-ம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணியின் கேப்டன் சந்திமால் பந்தை சேதப்படுத்தியதாக நடுவர்கள் குற்றம் சாட்டி, பந்தை மாற்றினார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சந்திமால், மைதானத்துக்குள் செல்லாமல், புறக்கணிப்பில் சிறிது நேரம் வீரர்களுடன் ஈடுபட்டார். அதன்பின் போட்டு நடுவர் சமாதானம் செய்தபின் விளையாடச் சம்மதித்தனர். இருப்பினும் இலங்கை அணிக்கு 5 ரன்கள் அபராதமாக நடுவர்கள் விதித்தனர்.

இந்நிலையில் ஐசிசி விசாரணையில், கேப்டன் சந்திமால், மேலாளர் அசாங்கா குருசிங்கே, பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கா லெவல் 3 குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டது. கிரிக்கெட் போட்டியின் மாண்பைக் குலைக்கும் வகையில் செயல்பட்டது உறுதியானது. இதையடுத்து, ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாட சந்திமாலுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 11-ம் தேதி ஐசிசி ஒழுங்கு நடவடிக்கைக் குழு வீடியோ கான்பிரன்சிங் முறையில் சந்திமால் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின் முடிவில் இவர்கள் 3 பேரும் லெவல் 3 குற்றத்தைச் செய்துள்ளது உறுதியானது.

இதையடுத்து சந்திமால், மேலாளர் அசாங்கா குருசிங்கே, பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கா ஆகியோர் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தடையும், 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாடத் தடையும் விதித்து ஐசிசி ஒழுங்கு நடவடிக்கைக்குழு உத்தரவிட்டது.

இதன்படி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை அணி மோதவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4 போட்டிகளிலும் சந்திமால் விளையாட முடியாது. மேலும், முதல்முறையாக வீரர்களுக்கு மட்டுமன்றி, பயிற்சியாளர், மேலாளருக்கும் சேர்த்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x