Published : 19 Jul 2018 12:32 PM
Last Updated : 19 Jul 2018 12:32 PM

நடுவரிடம் இருந்து தோனி எதற்காகப் பந்தை வாங்கினார்?- ரவி சாஸ்திரி வெளியிட்ட புதிய தகவல்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியின் முடிவில் நடுவரிடம் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி பந்தை வாங்கியது சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதப்பொருளாதார மாறிவருகிறது. இதற்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதின் சூசகமாக அவர் நடுவரிடம் பந்தை வாங்கினாரா என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவிக்கும் போது இதுமாதிரியான வித்தியாசமான செயலை தோனி செய்தார்.

ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடாமல், ரன்களும் எதிர்பார்த்த அளவுக்கு எடுக்காத காரணத்தால், கடும் விமர்சனங்களை தோனி எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது, டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் வீரர்கள் அனைவரும் மைதானத்தில் விட்டு வெளியேறும் போது, திடீரென தோனி ஸ்டெம்பை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

தோனியின் இந்த திடீர் செயல்பாடு சகவீரர்களுக்கு வியப்பை அளித்தது. ஆனால், யாரும் எதிர்பாராத சூழலில் ஊடகங்களை அழைத்து டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக அமைந்தது.

அதேபோன்று இப்போது நடுவரின் கையில் இருந்து பந்தை வாங்கியதால், தோனி ஓய்வு குறித்து ஏதும் அறிவிக்கப்போகிறாரா என்று பேசப்பட்டது.

இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் ஊடகத்தினர் கேள்வி எழுப்பினர். அதற்கு தோனி எதற்காகப் பந்தை வாங்கினார் என்பதற்கும், ஓய்வு குறித்தும் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போகிறார் என்ற பேச்சு உலவுவது முட்டாள்தனமானது. அதுமாதிரி தோனி செய்யமாட்டார், அவரிடம் அந்த எண்ணமும் இல்லை. தோனி நடுவரிடம் பந்தை வாங்கியதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

ஆடுகளத்தைக் குறித்து பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருணுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக தோனி பந்தை வாங்கினார். ஆடுகளத்தின் தன்மையைப் பொருத்து பந்தின் தேய்மானம் இருக்கும். ஆதலால், பந்தை கொண்டுபோய் பரத் அருணிடம் காண்பிதத்து பந்து எந்த அளவுக்கு தேய்ந்திருக்கிறது, கிழிந்திருக்கிறது என்பதைக் காண்பிப்பதற்காக பந்தை தோனி வாங்கினார்.

ஏனென்றால்,நாங்கள் 45 ஓவர்கள் வரை வீசிவிட்டோம் பந்து எந்த அளவுக்கு தேந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும், அப்போதுதான் இங்கிலாந்தில் உள்ள ஆடுகளத்தின் தன்மையை அறியமுடியும்.

அதற்குள் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிக்கப்போகிறார் என்றெல்லாம் முட்டாள்தனமாகச் சமூக ஊடகங்களில் பேசப்பட்டுவிட்டது. இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x