

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய பேட்டிங் வரிசையில் மிகப்பிராமாதமாக ஆடி வருபவர் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி.
பெர்த் வெற்றியில் இவரது பங்கு அபரிமிதமானது. ஏனெனில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்கள் வரை சென்றதற்கு இவரது கடைசி நேர அதிரடியே காரணம். பிங்க் பந்து அடிலெய்டு டெஸ்ட்டிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாகச் சொல்லப்படுபவர்கள் திணறிய அதே வேளையில் நிதிஷ் குமார் இரண்டு இன்னிங்ஸ்களிலும் வெளுத்து வாங்கினார்.
ஆனால் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சைப் பலப்படுத்துவதற்காக நிதிஷ் குமார் ரெட்டியை உட்கார வைத்து விட்டு ஆகாஷ் தீப்பை கொண்டு வரலாம் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. பேட்டிங்கில் அவர் தனித்துவமான திறமைசாலி, அஸ்வினை உட்கார வைத்து விட்டுத்தான் ஆகாஷ் தீப்பை எடுக்க வேண்டுமே தவிர நிதிஷ் குமார் ரெட்டியை உட்கார வைத்தால் இந்திய அணி கடைசியில் கொஞ்சம் 30-40 ரன்கள் தேவை என்னும் சமயத்தில் தள்ளாடி மடிந்து விடும்.
இப்போதைக்கு ரோஹித் சர்மாவுக்குக் ‘காயம்’ என்று சொல்லி ஆகாஷ் தீப்பை உள்ளே கொண்டு வந்து நிதிஷ்குமாரை ரோஹித் டவுனில் இறக்க வேண்டியதுதான். முதலில் இந்திய அணி கவலைப்பட வேண்டியது பவுலிங் துறை அல்ல. மாறாக பேட்டிங் துறைதான். ஏனெனில், தரையோடு தரையாக பவுண்டரி அடிக்க வேண்டிய பந்துகளில் எல்.பி.யும் பவுல்டும் ஆகின்றனர்.
ரோஹித் சர்மா மட்டையில் வெறும் எட்ஜ் மட்டும்தான் இருக்கிறது போலும். இவரை இந்த லட்சணத்தில் ஓப்பனிங் வர வேண்டும் என்று ரவி சாஸ்திரியும், சுனில் கவாஸ்கரும் சொம்பு தூக்கி வருகின்றனர்.
கவாஸ்கர் சொன்ன இன்னொரு கருத்து அவர் பிசிசிஐ-க்கு எவ்வளவு சாதகமாகப் பேசுகிறார் என்பதற்கு சிறு அத்தாட்சி. அதாவது அடிலெய்டு டெஸ்ட்டில் இந்திய பேட்டர்கள் அவுட் ஆனது அனைத்தும் கிரேட் டெலிவரிகளாம்! எங்கு போய் சொல்ல இந்த அபத்தக் கருத்தை? ஜெய்ஸ்வால் ஆஃப் வாலி பந்தில் எல்.பி., ஷுப்மன் கில், ரோஹித் சர்மா ஆஃப் வாலி பந்தில் அவுட். விராட் கோலி தேவையில்லாமல் லீவ் செய்ய வேண்டிய பந்துகளை ஈகோயிஸ்டாக போய் ஆடி அவுட் ஆகிறார். இதையெல்லாம் பேச முடியாத கவாஸ்கர் எல்லாம் நல்ல பந்துகளில் அவுட் ஆவதாகக் கூறுவது விந்தையிலும் விந்தை.
நடப்பு பார்டர் கவாஸ்கர் டிராபியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு பெரிய சதத்துடன் 185 ரன்களை இதுவரை எடுக்க நிதிஷ் குமார் ரெட்டி இரண்டாம் இடத்தில் 163 ரன்களை 54.33 என்ற சராசரியில் எடுத்து அசத்தி வருகிறார்.
சஞ்சய் மஞ்சுரேக்கரும் நிதிஷ் குமார் ரெட்டியைத் தூக்கி விடுவார்கள் என்றுதான் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி பேட்டிங் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது, அதோடு பந்து வீச்சையும் கொஞ்சம் பலம் கூட்ட வேண்டியுள்ளது. அதற்காக சோபிக்காத சீனியர் வீரர்கள் பார்முக்கு வரவேண்டும் என்று அணியில் நீடிப்பார்கள். இளம் வீரர் 54 ரன்கள் சராசரியை வைத்திருப்பவரை அணியில் இருந்து நீக்குவதா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. இருந்தாலும் பிரிஸ்பன் டெஸ்ட் தொடங்கும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.