Published : 26 Jun 2018 11:50 AM
Last Updated : 26 Jun 2018 11:50 AM

ரொனால்டோ ‘பெரிய ஆள்’ என்பதால் விட்டுவிடுவதா?: ஃபிபா மீதும் வீடியோ ரெஃபரல் மீதும் ஈரான் பயிற்சியாளர் கடும் தாக்கு

போர்ச்சுகலுக்கு எதிரான கடும் மோதல்கள் நிரம்பிய ஆட்டத்தில் ஈரான் அணி 1-1 என்று ட்ரா செய்ய போர்ச்சுகல் அடுத்தச் சுற்றுக்கு முன்னெறியது ஈரான் வெளியேறியது. இதில் கடும் ஆத்திரமடைந்தார் ஈரானுக்கு பயிற்சி அளிக்கும் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த  பயிற்சியாளர் கார்லோஸ் குய்ரோஸ்.

ஃபிபா அமைப்பையும் அதன் புதிய வீடியோ ரெஃபரல் முறையையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார். கிறிஸ்டியானோ ரொனால்டோ முழங்கையினால் ஈரான் வீரர் மோர்டீசா பவ்ராலிகனியை கீழே தள்ளினார் என்பதே சர்ச்சை.

“முழங்கையால் ரொனால்டோ இடிக்கிறார், அதற்காக ஆட்டம் நிறுத்தப்படுகிறது. நிச்சயம் முழங்கை வேலைகாட்டியது. விதிமுறைகளின் படி முழங்கையால் தடுத்தால், மறித்தால் அது சிகப்பு அட்டைக் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட வேண்டிய சந்தர்ப்பமாகும்.

விதிமுறைகள் மெஸ்சி, ரொனால்டோ என்று பாரபட்சம் பார்க்காது. ரொனால்டோ பெரிய ஆள் என்பதால் அவர் சார்பாக விட்டுக்கொடுக்கிறாரா நடுவர், அப்படிதானா அது? தெரியவில்லை, ஆனாலும் எங்களுக்கு என்னவென்று தெரிந்து கொள்ளும் உரிமை இருக்கிறது.

ரெஃப்ரீயா, அல்லது மேலே வீடியோ அறையில் இருப்பவர்கள் தீர்மானிக்கிறார்களா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இந்த ஆட்டம் மக்களுக்கானது, திரைக்குப் பின்னால் இருக்கும் ஓரு சிலருக்காக அல்ல. அவர்கள் விஏஆர் சரியாக ஒர்க் ஆகவில்லை, மன்னித்து விடுங்கள், அதை நிறுத்துகிறோம் என்று கூற வேண்டிய நேரம் வந்து விட்டது. அல்லது ரக்பி போல் தொடர்பு படுத்துதல் தெளிவாக இருக்க வேண்டும், வெளிப்படையாக இருக்க வேண்டும்.

எங்கள் வீரர்களுக்கு இன்னும் கொஞ்சம் மரியாதை அளிக்கலாம். ஈரானிய ரசிகர்களும் இன்னும் கொஞ்சம் கூடுதல் மரியாதைக்கு உகந்தவர்களே. இப்போது மனிதத் தவறுகளுக்கு இடமில்லை. முன்பு மனிதத் தவறுகள் நடந்தன, ஆனால் இப்போது அப்படியல்ல. இப்போது தொழில்நுட்பம் வந்து விட்டது, யார் தவறிழைத்தாலும் தெரிந்து விடும்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x