Published : 20 Jun 2018 10:06 AM
Last Updated : 20 Jun 2018 10:06 AM

481 ரன்கள் குவித்து ஆஸி.யை ஓடஓட விரட்டிய இங்கிலாந்தின் உலகசாதனை: ஆஸி.க்கு வரலாறு காணாத தோல்வி; தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 481 ரன்கள் குவித்து இங்கிலாந்து புதிய உலகசாதனையை நிகழ்த்தியதோடு, ஆஸ்திரேலியாவை 239 ரன்களுக்கு வீட்டுக்கு அனுப்பி வரலாறு காணாத வெற்றியை ஈட்டியதோடு ஒருநாள் தொடரையும் 3-0 என்று கைப்பற்றியது.

அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் 242 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா முதல் முறையாக வரலாறு காணாத உதை வாங்கியுள்ளது.

நாட்டிங்கமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டிம் பெய்ன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்த போது நேரம் எப்படிப்பட்டது என்பதை யாராவது நல்ல ஜோதிடரிடம் கேட்டிருக்கலாம், பாவம் எந்த நேரத்தில் பீல்டிங் என்றாரோ பீல்டர்கள் மைதானம் நெடுக ஓடி ஒடி களைத்து விட்டனர், மைதானத்தில் ஓடிய ஓட்டத்தை சாலையில் ஓடியிருந்தால் ஆஸ்திரேலியாவுக்காவது போய்ச் சேர்ந்திருக்கலாம். பந்துகள் போய் விழுந்த தூரத்துக்கு ஆஸி.வீரர்களுக்கு போய் எடுத்துவர வீசா தேவைப்பட்டாலும் தேவைப்பட்டிருக்கும் என்ற அளவுக்கு இருந்தது இங்கிலாந்தின் அடி.

அடின்னா அடி... 8 பவுலர்கள் வீசியும் பயனில்லை, மாயமான பந்துகள்:

ஸ்டேடியத்தில் உட்கார்ந்திருந்த ரசிகர்களுக்கும் பவுண்டரியில் அமர்ந்திருந்த இளம் வீரர்களுக்கும், வளரும் வீரர்களுக்கும் பால் பாய்களுக்கும் ஏகப்பட்ட வேலை. ஏனெனில் மொத்தம் 21 சிக்சர்கள் 41 பவுண்டரிகளை விளாசித்தள்ளியது இங்கிலாந்து.

முதலில் ஜேசன் ராய் 61 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் ஜேசன் ராய் 82 ரன்களை வெளுக்க அலெக்ஸ் ஹேல்ஸ் 92 பந்துகளில் 16 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 147 ரன்கள் குவிக்க, ஜானி பேர்ஸ்டோ 92 பந்துகளில் 16 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 139 ரன்கள் விளாசினார். இயன் மோர்கன் தன் பங்குக்கு 30 பந்துகளில் 3 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என்று கையை நனைக்க 67 ரன்களை விளாசி ஆஸி.யின் வெந்த புண்ணில் வேலை விட்டு ஆட்டினார்.

ஆஸ்திரேலியாவின் ஷார்ட் பிட்ச் பந்துகளை வெளுத்துக்கட்டினார் ஜேசன் ராய். இவரும் பேர்ஸ்டோவும் இணைந்து 19.3 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக 159 ரன்களைச் சேர்த்தனர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10வது சிறந்த தொடக்கக் கூட்டணி ரன்களாகும். ராய்க்கு ஒரு இன்சைடு எட்ஜ் முறையீடு தப்பினார், பேர்ஸ்டோவுக்கு 30 ரன்களில் ஸ்டாய்னிஸ் கேட்சை விட்டார், அதன் பலன் 481. ஜேசன் ராய் 2வது ரன்னுக்காக ஓடி ரன் அவுட் ஆகவில்லை எனில் ஆஸ்திரேலிய வலியை அதிகரித்திருப்பார். ஆனால் ஹேல்ஸ் வந்தார், பந்துகள் அவருக்கு வாகாக வீசப்பட்டன, இந்தப் பிட்ச் பவுலர்களுக்கு ஒரு சுடுகாடு, 62 பந்துகளில் சதம் கண்டார். இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 6வது அதிவேக ஒருநாள் சதமாகும்.

500 ரன்கள் என்பது சர்வசாதாரணம் என்ற நிலையில் ஒருநாள் போட்டியில் கூட ஆஸி. இன்னிங்ஸ் தோல்வியடையுமா என்ற ஐயம் நமக்கு எழ ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்தனர், ஜானி பேர்ஸ்டோ தனது கடந்த 6 ஒருநாள் இன்னிங்ஸ்களில் நேற்று எடுத்தது 4வது சதமாகும். மோர்கன் ஒரு காட்டடி பேட்ஸ்மென் அவர் உதவியுடன் ஸ்கோர் இந்த அளவுக்கு உயர்ந்தது.

ஐபிஎல் புகழ் ஆண்ட்ரூ டை 9 ஓவர்களில் 100 ரன்களை கொடுத்தார், இது ஒரு சாதனையாக இருக்க வாய்ப்புண்டு. இத்தனைக்கும் 107 பந்துகள் டாட் பால், ரன்கள் இல்லை, மொத்தம் 300 பந்துகளில் 107 பந்துகளில் ரன்கள் இல்லை, மீதமுள்ள 193 பந்துகளில் இங்கிலாந்து 481 ரன்கள், இது என்ன ஸ்மார்ட் ஸ்ட்ரைக் ரேட்?! பிரமிக்க வைக்கும் காட்டடியாகவல்லவா உள்ளது. அந்த டாட்பால்கள் எண்ணிக்கையை 50 ஆக குறைத்திருந்தால் இங்கிலாந்து எடுத்த ரன் விகிதமான 9.62 என்பதை இன்னும் 57 ரன் உள்ள பந்துகளுக்குக் கணக்கிட்டால் இன்னொரு 80-90 ரன்கள் என்று 560-70 ரன்களையல்லவா இங்கிலாந்து எட்டியிருக்கும்?!

இந்த அடியில் கதி கலங்கிய ஆஸ்திரேலியா பிற்பாடு அடில் ரஷீத்திடம் 4 விக்கெட்டுகளைக் கொடுத்து 239 ரன்களுக்குச் சுருண்டு வரலாறு காணாத ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் உணர்வுகளை அழிக்கும் தோல்வியைச் சந்தித்தது.

இதே டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பாக பாகிஸ்தானுக்கு எதிராக 444 ரன்கள் குவித்த இங்கிலாந்து நேற்று அதனைக் கடந்து சென்றது. முதன் முதலாக ஒருநாள் போட்டிகளில் 450 ரன்களைக் கடந்த அணியானது மோர்கனின் இங்கிலாந்து. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சரே அணி 496/6 என்று எடுத்ததே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோராகும். நேற்று இந்தியா ஏவும் 458 ரன்களை லீஷயர் அணிக்கு எதிராக எடுத்தது, அனைத்தையும் உடைத்தது இங்கிலாந்தின் பிரமிப்பூட்டும் அதிரடி.

இந்தத் தோல்வி மூலம் ஆஸ்திரேலியா 5 ஒருநாள் தொடர்களைத் தொடர்ச்சியாக இழந்தது. இன்னும் சொல்லப்போனால் கடந்த 16 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா 2-ல் மட்டுமே வென்றுள்ளது. இயன் மோர்கன் இங்கிலாந்தின் அதிவேக ஒருநாள் அரைசதத்தை 21 பந்துகளில் எட்டினார். ஜானி பேர்ஸ்டோ, அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் அடித்த சதம் நம் ஐபிஎல் ஆட்டங்கள் போல் அல்ல உண்மையில் உயர்தரமான இன்னிங்ஸ்களாகும். டியார்க்கி ஷார்ட் பந்தை இன்சைடு அவுட் சிக்ஸ் அடித்து இங்கி.யின் 200 ரன்களைக் கொண்டு வந்த பேர்ஸ்டோ மீண்டும் ஒரு சிக்ஸ் மூலம் தனது சதத்தை 69 பந்துகளில் எட்டினார். மோர்கன், இயன் பெல்லின் 5416 ஒருநாள் ரன்கள் சாதனையைக் கடந்தார். இனி மோர்கன் தான் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் அதிக ரன் எடுத்த வீரராவார்.

ஆஸ்திரேலியா 8 பவுலர்களைப் பயன்படுத்தியும் ஒன்றும் பயனில்லை. ஆண்ட்ரூ டை, ஐபிஎல் போன்ற தரமற்ற கிரிக்கெட்டில் ஆடி அதன் வெற்றிகளை ஊதிப்பெருக்கும் போக்குக்கு உதாரணமாக ஒருநாள் போட்டிகளில் 100 ரன்கள் கொடுத்த 11வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

அடில் ரஷீத்திடம் மடிந்த ஆஸ்திரேலியா

 

rashidjpg100 

டிராவிஸ் ஹெட் மட்டுமே 51 ரன்களை அதிகபட்சமாக எடுக்க அடில் ரஷீத் 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 37 ஓவர்களில் ஆஸி, மடிந்தது.

டி ஆர்க்கி ஷார்ட், டேவிட் வில்லேயின் முதல் பந்தை சிக்ஸருக்குத்தூக்கினார், 2வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் மர்க் உட் பவுன்சரில் டிராவிய்ஸ் ஹெட் அடி வாங்கினார். ஷார்ட் உடனடியாக மிட் ஆனில் கேட்ச் கொடுக்க மொயின் அலியிடன் ஹெட் வீழ்ந்தார். ஷான் மார்ஷ் லாங் ஆனில் கேட்ச் ஆனார். ஏரோன் பின்ச் தனது முதல் சிக்ஸரை மீண்டும் அடிக்கும் முயற்சியில் அடில் ரஷீத்தின் சாதுரியத்துக்கு இரையானார். ஸ்டாயின்ஸ் இல்லாத 2வது ரன்னுக்கு ஓடி பேர்ஸ்டோவின் மிட்விக்கெட் த்ரோவுக்கு வீழ்ந்தார். கிளென் மேக்ஸ்வெல், பவுண்டரியில் லியாம் பிளெங்கெட்டின் எம்பிப்பிடித்த கேட்சுக்கு அவுட் ஆக, இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட்டில் இவ்வளவு பெரிய 242 ரன் வெற்றியைப் பெற்றது.

பலவீனமான பந்து வீச்சு குறுகிய பவுண்டரிகளும் ஒரு காரணம் என்றாலும் ஆஸ்திரேலிய அணி டிம் பெய்ன் போன்ற உத்வேகமற்ற ஒரு கேப்டனின் கீழ் மறுக்கட்டுமானம் செய்யும் முடிவு இத்தகைய பெரிய பெரிய தோல்விகளைத்தான் சந்திக்க வைக்கும் என்பதற்கு நேற்றைய போட்டி ஓர் உதாரணம். அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x