Last Updated : 26 Jun, 2018 11:04 AM

 

Published : 26 Jun 2018 11:04 AM
Last Updated : 26 Jun 2018 11:04 AM

பெனால்டியை கோலாக்கத் தவறிய ரொனால்டோ: ஈரானின் நாடகீய நெருக்கடிகளில் மீண்ட போர்ச்சுகல் ட்ரா

உணர்ச்சி மோதல்கள், கோபாவேசங்கள், சர்ச்சைகள் என்று அனைத்து விதமான விறுவிறுப்புடனும் நடந்த உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியில் ஈரானுக்கு எதிராக தோல்வியடையாமல் இருக்க போர்ச்சுகல் போராடி கடைசியில் 1-1 என்று ட்ரா ஆனது. இறுதி 16 சுற்றுக்கு போர்ச்சுகல் நுழைய கடும் கடுப்புடன் ஈரான் வெளியேறியது.

ஆட்டத்தில் வீடியோ ரெஃபரலை அதிகம் பயன்படுத்தினர், ஈரான் வீரர்கள் எதற்கெடுத்தாலும் வீடியோ ரெஃபரல் கேட்டனர், இப்படியே போயிருந்தால் ரெஃப்ரீ வெறும் வீடியோவைத்தான் பார்த்துக் கொண்டிருக்க நேரிட்டிருக்கும், கொஞ்சம் விட்டால் ஆட்டத்தின் ஹைலைட்சைக் காட்டுமாறு கூட ஈரான் வீரர்கள் ரெஃப்ரியை வலியுறுத்தியிருப்பார்களென்ற என்ற நிலைதான் தோன்றியது. கிரிக்கெட்டில் பங்களாதேஷ் போல் இந்த உலகக்கோப்பையில் ஈரான். தங்களைப் பற்றி அதீதமான ஒரு சிந்தனை.

சர்ச்சைகளும் வீடியோ ரெஃபரல்களும்!

ஈரானின் போர்த்துக்கீசிய பயிற்சியாளர் கார்லோஸ் குய்ரோஸ் வீடியோ மேல்முறையீட்டுத் திட்டத்தை திட்டித் தீர்த்தார், காரணம் ஈரான் வீரர் மோர்டீசா பவ்ராலிகனியை போர்ச்சுக்கல் நட்சத்திரம் கிரிஸ்டியானோ ரொனால்டோ முழங்கையால் இடித்துத் தள்ளிவிட்டாராம். இதற்கு ரொனால்டோவுக்கு சிகப்பு அட்டை அளித்திருக்க வேண்டும் என்று கூச்சலிட்டனர். ஆனால் விஏஆர் ரெஃபரலுக்குப் பிறகு பராகுவே ரெஃப்ரி என்ரிக் சாசெரெஸ் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு மஞ்சள் அட்டைக் காட்டினார்.

ஆட்டத்தின் வேறு முக்கியத் தருணங்களிலும் வீடியோ ஆதாரச் சுட்டி கேட்கப்பட்டது. ரொனால்டோவுக்கு இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் வீடியோ சுட்டி மூலம்தான் பெனால்டி கிக் வழங்கப்பட்டது ஆனால் ரொனால்டோ அதனை அதிர்ச்சிகரமாக விரயம் செய்தார்.

ஆனால் ஈரானுக்குக் கடைசி தருணத்தில் ஏகப்பட்ட கோஷங்கள், அதிருப்திகளுக்குப் பிறகு அளிக்கப்பட்ட பெனால்டி கிக்கை ஈரான் வீரர் கரீம் அன்சாரிஃபார்ட் கோலாக மாற்றினார். இதனால் 45வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ரிக்கார்டோ குரேஸ்மா அடித்த கோலுக்கும் இதற்கும் சமம் ஆனது. 1-1.

சமன் ஆனவுடனேயே ஈரான் உடலுக்குள் பூதம் புகுந்தது போல் ஒரு வேகம் இதில் ஈரான் 2வது கோலுக்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. அப்படி அந்த 2வது கோல் வாய்த்திருந்தால் ஈரான் இறுதி 16க்குக் தகுதி பெற்றிருக்கும். ஈரான் முன்னேறி விடும் என்று அந்நாட்டு ரசிகர்கள் நினைக்கும் வேளையும் வந்தது, அந்த அணியின் மெஹதி தரேமியின் ஒரு சீரிய முயற்சி பக்கவாட்டு கோல்வலையைத் தாக்கியது, ஈரானுக்கு முன்னிலை கிடைக்கவில்லை.

போர்ச்சுகலுக்கு இந்த ஆட்டத்தில் முக்கியக் கணம் கிறிஸ்டியானோ ரொனால்டோவினால் வரவில்லை, மாறாக அந்த அணியின் குரேஸ்மா மூலம்தான் வந்தது, ஆஃப் டைமுக்கு சற்று முன் 45வது நிமிடத்தில் வலது புறத்திலிருந்து மிக வேகாமாக குறுக்காக ஈரான் கோல் எல்லைக்குள் புகுந்தார், நெருக்கடியான அந்த நிலையிலும் மிக அருமையாக ஒரு புல்லட் ஷாட்டில் கோலாக மாற்றினார்.

முதல் பாதியில் மிகவும் நெருக்கடியான முட்டுக்கட்டைகள், ஒரு சில தெளிவான கோல் வாய்ப்புகள் என்று சென்றது ஈரான் பதற்றத்தில் ஆடியதால் சிலபல தவறுகளை இழைத்தது அதிர்ஷ்டவசமாக அது அவர்களுக்கு எதிராக கோலாக மாறாவில்லை. 10வது நிமிடத்தில் இப்படிப்பட்ட தருணத்தில்தான் ஈரானின் பெய்ரன்வாண்ட், சயீத் ஈசாடொலாஹி இடையே சிறு குழப்பம் ஏற்பட பந்தைத் தள்ளி விட கோல் கீப்பர் முன்னேறி வர ஆனால் சரிவரத் தடுக்க முடியாததால் பந்து ஜோவோ மரியாவுக்கு வாகாக அமைந்தது. அவர் ஷாட்டை மேலே அடித்தார், இது முடிந்த சில நிமிடங்களிலேயே ஒரு சாதாரண கிராஸைத் தடுக்க பெய்ரன்வான்ட் தடுக்கும் போது பந்தைத் தவறவிட பந்து நல்ல வேளையாக ஈரான் வீரடிடமே சென்றது.

ஈரான் போர்ச்சுக்கல் வீரர்களை மிகவும் கடுமையாக எதிர்கொண்டு தடுத்தது, போர்ச்சுகலுக்கு வலதுபுறம் தொல்லையைக் கொடுத்தது அலிரேசா ஜகன்பக்‌ஷ் என்ற ஈரான் வீரர். ஒருமுறை இவரை கீழே தள்ளினார் போர்ச்சுகலின் ரஃபேல் கிரைரோ.

இடைவேளைக்குப் பிறகு ரொனால்டோவிற்குக் கால்தட்டுப் போட்டார் எசாடொலாஹி பெனால்டி பகுதிக்குள்தான் இது நடக்கிறது. ரொனால்டோ கீழே விழுந்து விட்டார், நடுவர் ஒன்றும் கொடுக்கவில்லை, ஆனால் வீடியோ அறையில் இருந்த நடுவர்கள் இந்தக் கால்தட்டைப் புறக்கணிக்க வேண்டாம், பார்க்கவும் என்று அறிவுறுத்த ரீப்ளேயில் போர்ச்சுகலுக்கு பெனால்டி கொடுப்பது தவிர நடுவருக்கு வேறு வழியில்லை. ஈரான் கடும் எதிர்ப்பு காட்டியது. எதிப்பு காட்டியதற்காக ஈஷான் ஹஜ்சாஃபிக்கு கார்டு காட்டியதில்தான் முடிந்தது.

ஈரான் கோல் கீப்பர் பெய்ரன்வாண்ட் ரொனால்டோவின் பெனால்டி கிக்கிற்குத் தயாரானார், ரொனால்டோ அடித்தார், ஈரான் கோல் கீப்பர் அதனை அதிர்ச்சிகரமாகத் தடுத்துவிட்டார், ஈரான் முகாமில் கடும் கொண்டாட்டம், குதூகலம்.

இதன் பிறகு உத்வேகம் கொண்டு ஈரான் தாக்கியது, ஆனால் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை, போர்ச்சுகல் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஆனால் பெனால்டி கொடுக்க முடியாததற்கெல்லாம் பெனால்டி கேட்டு தொல்லைக் கொடுத்தனர் ஈரானியர்கள். பயிற்சியாளர் குய்ரோஸ் டச் லைனில் நின்று கொண்டு வீடியோ, வீடியோ என்று கூக்குரலிட நடுவர் அவரை வேண்டுமானால் உள்ளே போய் வீடியோ பாரும் என்று எச்சரித்தார்.

போர்ச்சுகல் 1-0 என்று வென்று விடும் என்றே தெரிந்தது, ஆனால் நாடகம் முடியவில்லை. முதலில் ரொனால்டோ ஈரான் வீரரை முழங்கையால் தடுத்தார் என்று அவருக்கு சிகப்பு அட்டை அளித்தால்தான் ஆடுவோம் என்ற அளவுக்கு ஈரான் ஆர்பாட்டம், கடைசியில் மஞ்சள் அட்டைதான் கொடுக்க முடிந்த சாதாரண ஒரு தடுப்புதான் அது என்பது வீடியோ ரெபரலில் தெரியவந்தது.

 

மீண்டும் போர்ச்சுகல் வீரர் செட்ரிக் சோவாரேஸ் அவரே அறியாமல் பந்து கையில் பட, இதுவும் பெனால்டி கொடுக்கும் அளவுக்கு பெரிய ஹேண்ட் பால் எல்லாம் இல்லை. ஆனால் வீடியோ சுட்டிக்குச் சென்று அதன் மூலம் பெனால்டி கொடுக்கப்பட்டது. பதிலி வீரர் கரிம் அன்சாரிஃபார்ட் டாப் கார்னரில் வலைக்குள் தள்ளினார். ஆட்டம் 1-1 ட்ரா. கடைசியில் தரேமியின் ஷாட் ஒன்று இலக்கு பிறழ்ந்தது, இறுதி விசில் ஊதப்பட ஈரான் வீரர்கள் விரக்தியிலும் அதிருப்தியிலும் மைதானத்தில் சாய்ந்தனர். 1-1 டிரா என்பது இந்தப் பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஆடிய ஸ்பெயினுக்கு நல்லதாக முடிந்தது, இதனால் ஸ்பெயின் இந்தப் பிரிவில் முதலிடம் பிடித்து இறுதி 16-ல் ரஷ்யாவைச் சந்திக்கிறது,, இல்லையெனில் 2வதாக முடிந்திருந்தால் உருகுவேயைச் சந்திக்க நேரிட்டிருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x