Published : 24 Jun 2018 10:05 AM
Last Updated : 24 Jun 2018 10:05 AM

துனீசியாவை துவம்சம் செய்தது பெல்ஜியம்: 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ஜி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் துனீசியாவை வீழ்த்தியது. இதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொண்டது.

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள ஸ்பார்டக் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பெல்ஜியம் 3-4-3 என்ற பார்மட்டிலும், 21-வது இடத்தில் உள்ள துனீசியா 4-3-3 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. 3-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் ஈடன் ஹஸார்டு உதவியுடன், பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து தாமஸ் மெனியர் அடித்த பந்தை துனீசியா கோல்கீப்பர் பென் முஸ்தபா வலது ஓரத்தில் பிடித்தார். 5-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ஈடன் ஹஸார்டை, பெனால்டி பகுதியில் வைத்து துனீசியா வீரர் பென் யூசெப் பவுல் செய்தார். இதனால் பெல்ஜியம் அணிக்கு பெனால்டி கிக் வழங்கப்பட்டது.

இதைப் பயன்படுத்தி ஈடன் ஹஸார்டு, கோல்கம்பத்தின் இடது ஓரத்தில் பந்தை திணிக்க பெல்ஜியம் அணி 1-0 என முன்னிலை பெற்றது. 13-வது நிமிடத்தில் ரோமெலு லுகாகுவிடம் இருந்து கிராஸை பெற்ற ஈடன் ஹஸார்டு, பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்தை துனீசியா கோல்கீப்பர் தடுத்தார். 15-வது நிமிடத்தில் யானிக் கார்ரஸ்கோவின் கோல் அடிக்கும் முயற்சியும் தடுக்கப்பட்டது. 16-வது நிமிடத்தில் டிரைஸ் மெர்டென்ஸ் பந்தை ரோமெலு லுகாகுவிடம் வழங்க, அவர் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து கோல்கம்பத்தின் வலது ஓரத்தை நோக்கி அடித்து கோலாக மாற்றினார். இதனால் பெல்ஜியம் 2-0 என முன்னிலை பெற்றது.

அடுத்த 2-வது நிமிடத்தில் துனீசியா தனது முதல் கோலை அடித்தது. ஃப்ரீ கிக்கில் வஹ்பி கஸ்ரி அடித்த பந்தை பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து டிலான் பிரோன், தலையால் முட்டி கோல் அடித்தார். 19-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் யானிக் கார்ரஸ்கோ, பாக்ஸின் மையப்பகுதியில் இருந்த அடித்த பந்து கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது. 33-வது நிமிடத்தில் துனீசியா வீரர் எலிஸ் ஸ்கிரி உதவியுடன் பந்தை பெற்ற வஹ்பி கஸ்ரி, பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்தை கோல்கம்பத்தின் மையப்பகுதியில் வைத்து கோல்கீப்பர் கோர்ட்டோயிஸ் மடக்கினார். 39-வது நிமிடத்தில் பென் யூசெப் அடித்த பந்து கோல்கம்பத்துக்கு வலது புறம் விலகிச் சென்றது.

முதல் பாதியில் காயங்களுக்கு இழப்பீடாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்ட நிலையில் இதன் கடைசி நிமிடத்தில் தாமஸ் மெனியர், எதிரணியின் இரு டிபன்டர்களை லாவகமாக ஏமாற்றி பந்தை ரோமெலு லுகாகுவுக்கு அனுப்பினார். அவர், கோல்கீப்பர் பென் முஸ்தபாவுக்கு போக்குக் காட்டி கோல் அடிக்க முதல் பாதியின் முடிவில் பெல்ஜியம் அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்து.

2-வது பாதியிலும் பெல்ஜியம் அணியின் கோல் வேட்டை தொடர்ந்தது. 51-வது நிமிடத்தில் கெவின் டி புரூனே தொலைவில் இருந்து அடித்த பந்தை ஈடன் ஹஸார்டு நெஞ்சால் கட்டுப்படுத்திய நிலையில் பந்தை வேகமாக கடத்தியபடி இலக்கை நோக்கி விரைந்தார். இதைக் கண்ட துனீசியா கோல்கீப்பர் பென் முஸ்தபா முன்னோக்கி வந்து தடுக்க முயன்றார். ஆனால் அவரை லாவகமாக ஏமாற்றி பந்தை கடத்திய ஈடன் ஹஸார்டு, எதிரணியின் இரு டிபன்டர்களின் ஊடாக கோல் அடித்து அசத்தினார். இதனால் பெல்ஜியம் அணி 4-1 என்ற வலுவான முன்னிலையை அடைந்தது.

67-வது நிமிடத்தில் துனீசியாவின் அனிஸ் பத்ரி, பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்தை பெல்ஜியம் கோல்கீப்பர் கோர்ட்டோயிஸ் தடுத்தார். 81-வது நிமிடத்திலும் மைக்கி பாட்சுயின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் இல்லாமல் போனது. 70-வது நிமிடத்தில் துனீசியாவின் சைஃப்-எடின் கயோய், பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்து கோல்கம்பத்துக்கு மேலாகச் சென்றது. 79-வது நிமிடத்தில் கெவின் டி புரூனே உதவியுடன் பந்தை பெற்ற யானிக் கார்ரஸ்கோ, அடித்த பந்தை கோல்கீப்பர் பென் முஸ்தபா அற்புதமாக தடுத்தார். அடுத்த நொடியில் பெல்ஜியத்தின் மைக்கி பாட்சுயி அடித்த பந்து கோல்கம்பத்தின் கம்பியில் பட்டு விலகிச் சென்றது. 81-வது நிமிடத்திலும் மைக்கி பாட்சுயின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் இல்லாமல் போனது.

90-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் யூரி டைலேமன்ஸிடம் இருந்து கிராஸை பெற்ற மைக்கி பாட்சுயி, பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து கோல்கம்பத்தின் வலது ஓரத்தில் பந்தை திணிக்க பெல்ஜியம் அணி 5-1 என முன்னிலை வகித்தது. காயங்களுக்கு இழப்பீடாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்ட நிலையில் இதன் கடைசி நிமிடத்தில் துனீசியாவின் வஹ்பி கஸ்ரி கோல் அடித்தார். ஆனால் அது எந்த வகையிலும் அந்த அணிக்கு உதவவில்லை.

முடிவில் 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் பெல்ஜியம், பனாமாவை வென்றிருந்தது. இரு வெற்றிகளின் மூலம் 6 புள்ளிகள் பெற்ற பெல்ஜியம் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொண்டது. இரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த துனீசியா தொடரில் இருந்து வெளியேறியது.

ரொனால்டோவுடன் இணைந்த லுகாகு

பனாமா அணிக்கு எதிராக 2 கோல்கள் அடித்த பெல்ஜியத்தின் ரோமெலு லுகாகு நேற்று துனீசியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் இரு கோல்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஏற்கெனவே 4 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதை வெல்வதற்கான பட்டியலில் முன்னணியில் இருக்கும் போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணைந்துள்ளார் ரோமெலு லுகாகு. இவர்களுக்கு அடுத்த்படியாக ரஷ்யாவின் டெனிஸ் செரிஷேவ், ஸ்பெயினின் டிகோ கோஸ்டா ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x