Published : 14 Jun 2018 09:50 AM
Last Updated : 14 Jun 2018 09:50 AM

இந்தியா - ஆப்கன். இன்று மோதல்

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தத் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஐசிசி-யின் டெஸ்ட் அந்தஸ்தை பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி தனது அறிமுக டெஸ்ட் போட்டியை நம்பர் ஒன் அணியான இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக அஜிங்க்ய ரஹானே செயல்பட உள்ளார். இந்திய அணியில் காயம் காரணமாக விராட் கோலி, விருத்திமான் சாஹா ஆகியோர் இந்த போட்டியில் விளையாடவில்லை.

மேலும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் யோ-யோ தேர்வில் தேர்ச்சி பெறாததால் முகமது ஷமி கடைசி நேரத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டு டெல்லியை சேர்ந்த நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார். 8 ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ள தினேஷ் கார்த்திக் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி அஸ்கார் ஸ்டானிக்ஸாய் தலைமையில் களமிறங்குகிறது. அந்த அணி சுழற்பந்து வீச்சை முக்கிய ஆயுதமாகக் கொண்டுள்ளது. ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியார் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும். இதில் ரஷித் கான் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அற்புதமான திறனை வெளிப்படுத்தியிருந்தார். எனினும் டெஸ்ட் போட்டி என்பது வெறும் 4 ஓவர்கள் மட்டுமே வீசும் டி 20 ஆட்டத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ரஷித் கானுக்கு 4 நாட்கள் ஆட்டம் கொண்ட டெஸ்ட் போட்டியில் ஆடிய அனுபவம் உள்ளது. ஆனால் முஜீப் குறுகிய வடிவிலான போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். எனினும் இவர்களை ஆப்கானிஸ்தான் பெரிதும் நம்பி உள்ளது. பேட்டிங்கில் அஸ்கார் ஸ்டானிக்ஸாய், முகம்மது ஷாஸாத், முகமது நபி ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x