Published : 24 Jun 2018 10:29 AM
Last Updated : 24 Jun 2018 10:29 AM

பின்னிலையிலிருந்து மீண்டெழுந்த ஜெர்மனி: டோனி குரூஸின் திகைக்க வைத்த கடைசி நிமிட கோலினால் ஸ்வீடனை வீழ்த்தியது

உலகக்கோப்பைக் கால்பந்து 2018-லிருந்து ஜெர்மனி முதல் சுற்றிலேயே வெளியேறும் என்ற பலரது ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் வீணாகின. மெக்சிகோவுடன் தோல்விக்கு அடுத்து நேற்று முதல் பாதியில் ஸ்வீடன் 1-0 என்று முன்னிலை பெற்றவுடனேயே வர்ணனையாளர்கள் கடைசியாக ஜெர்மனி முதல் சுற்றில் வெளியேறியது எப்போது (1938) என்று ஜெர்மனியின் தோல்வி வரலாற்றை இரங்கற்பா பாடத்தொடங்கினர்.

80 ஆண்டுகள் ஒரு அணி முதல் சுற்றில் வெளியேறவில்லை என்பதே அந்த அணியின் கால்பந்து பாரம்பரியத்தை அறிவுறுத்துகிறது, ஆனால் சாம்பியன் அணிகள் தோற்க வேண்டும், சிறந்த அணிகள் தோற்க வேண்டும் என்பது பொதுவாக சிலருக்கு ஏற்படும் வக்கிர எண்ணமாகும். ஆனால் ஸ்வீடன் அணி ஜெர்மனியை கடைசியாக வீழ்த்தியது 1978-ல் தான். இந்தப் புள்ளி விவரங்களை அறியாத பத்திரிகையாளர்தான் அன்று ஜெர்மனிக்கு பிளைட் டிக்கெட் எடுத்துக் கொடுத்தார்.

ஆனால் நடந்தது என்ன? பலரது எதிர்பார்ப்புகளையும் மீறி ஜெர்மனி மார்கோ ரியூஸின் 48வது நிமிட கோலினாலும் டோனி குரூஸ் 90 நிமிடங்கள் கடந்து 4 நிமிடங்கள் கழித்து அடித்த மிகச்சிறப்பான கோலினாலும் ஜெர்மனி 2-1 என்று வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை சாம்பியன் அணிகள் பல அடுத்த உலகக்கோப்பையிலேயே முதல் சுற்றில் வெளியேறிய கதைகள் பேசப்பட்டன, பிரான்ஸ் 2002லும் இத்தாலி 2010-லும், ஸ்பெயின் 2014-லும் இப்படித்தான் வெளியேறின, அடுத்ததாக ஜெர்மனி என்று ஹேஷ்யங்கள் முன் வைக்கப்பட்டன.

ஸ்வீடன் அணி மிகவும் கடினமான அணி, அதிலும் அவர்கள் கோல் கீப்பர் ராபின் ஆல்சன் கடந்த அக்டோபர் முதல் கோல் விடாத ஒரு சாதனையில் ஆடவந்துள்ளார். ஆனால் ஜெர்மனி அணி மெக்சிகோவிடம் தோற்றதனாலோ என்னவோ கொஞ்சம் கட்டுக்கோப்பு இழந்து ஆடியது, அந்த அணியின் ஜெரோமி போட்டெங், ஸ்வீடன் வீரர் மார்கஸ் பெர்கை தடுக்க முனைந்து 2வது மஞ்சள் அட்டை வாங்கி ஜெர்மனி 10 வீரர்களுடன் ஆட நேரிட்டது, அதிலும் கடைசியில் கோல் வாங்காமல் கோல் அடித்தது சாம்பியன் அணிக்கான தருணம்.

அந்தக் கடைசி 4 நிமிடங்கள்:

ஏற்கெனவே போட்டெங் செய்த மடத்தனமான ஃபவுலினால் அவர் வெளியேற்றப்பட 10 வீரர்களுக்கு ஜெர்மனி குறுக்கப்பட்டது.

92வது நிமிடத்தில் வெர்னருக்கு இடது புறம் கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் லாங் பாஸ் செய்யாமல் ஷார்ட் பாஸ் மேற்கொண்டனர், குண்டோகன் சர்க்கிளின் முனையிலிருந்து பிராண்ட்டிடம் அனுப்பினார், பந்து பவுன்ஸ் ஆனது அதனை 20 அடியிலிருந்து இடது காலால் ஒரே குத்துக் குத்தினார், ஸ்வீடன் கோல் கீப்பர் ஆல்சனைக் கடந்து வலது போஸ்ட்டில் அடித்தது. பட்ட பந்து மீண்டும் வெர்னரிடம் வர அவர் அடிக்கும் முன் ஆஃப் சைடு விசில் ஊதப்பட்டது.

எந்த அணி வெற்றி பெறவும் 2 நிமிடங்கள் இருந்தன. 1-1 என்ற நிலையில் கடும் சவால். இருதரப்பினரும் மோதிக்கொண்டனர், ஆனால் ஜெர்மனி வசமே பந்து அதிகம் இருந்தது. அவர்கள் கால்களில் புதிய வேகத்தையும் அவசரத்தையும் காண முடிந்தது.

அப்படிப்பட்ட தருணத்தில்தான் டுர்மாஸைக் கடந்து ஜெர்மனி வீரர் வெர்னர் பந்தை விறுவிறுவென ஸ்வீடன் கோல் எல்லைக்குள் கொண்டு வந்தார், ஆனால் வெர்னரைக் கீழே தள்ளி ஒரு வேஸ்ட் ஃபவுலைச் செய்தது ஸ்வீடன். ஃப்ரீ கிக் வழங்கப்பட்டது.

டொனி குரூஸ் ஃப்ரீ கிக்கிற்கு இடது புறத்திலிருந்து தயாரானார், கோல் வலை அந்தக் கோணத்திலிருந்து சற்றே கடினமானது, பாஸ் செய்து கோலடிக்கலாமே தவிர, அந்தக் கடினமான கோணத்திலிருந்து ஃப்ரீ கிக்கை நேரடியாக கோலுக்குள் அடிப்பது கடினம். டோனி குரூஸ் பந்தை சும்மா லேசாக மிக அருகில் இருந்த ரியூஸுக்குத் தட்டி விட்டார், அவர் பந்தை நிச்சலனமாக நிறுத்த டோனி குரூஸ் அடித்த ஷாட் இந்த உலகக்கோப்பையின் மிகச்சிறந்த கோல்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்பான கோல். வலது காலால் அவர் தூக்கி அடித்த ஷாட் வளைந்து கோலுக்குள் சென்றது, சாத்தியமில்லாத கோணம், சாத்தியமில்லாத ஷாட், ஜெர்மனி ஷாட்களையெல்லாம் தடுத்து வெறுப்பேற்றிய ஸ்வீடன் கோல் கீப்பர் ஆல்சனும் ஆச்சரியமடைந்த கோல்!! ஜெர்மனி 2-1 என்று கடினமான ஒரு வெற்றியை முயன்று பெற்றது.

ஜோக்கிம் லோ-வின் தைரியமான அணித்தேர்வு:

மெக்சிகோவுடனான தோல்விக்குப் பிறகு ஜெர்மனி மேலாளர் ஜோக்கிம் லோ தைரியமாக 4 வீரர்களை உட்கார வைத்தார், அதில் குறிப்பாக சேமி கேதிரா, மெசூட் ஓஸில் ஆகியோர் மிக முக்கியமானவர்கள். இடைவேளைக்கு முன்பாக செபாஸ்டியன் ரூடி, ஸ்வீடனின் ஒரே கோலை அடித்த டாய்வோனென் கைவரிசையில் மூக்குடைபட்டு பெஞ்சுக்குத் திரும்பினார்.

87வது நிமிடத்திலும் ஜோக்கிம் லோ மேற்கொண்ட அபார மாற்றமும் கைகொடுத்தது. ஹெக்டரை திரும்ப அழைத்து, தாக்குதல் நடுக்கள வீரர் ஜூலியன் பிராண்ட்டை களத்துக்கு அனுப்ப்பினார், அவர் வந்தவுடனேயே வெறித்தனமாக அடித்த ஷாட்தான் கோல் கீப்பர் ஜூலியன் டைவையும் மீறி கோல் போஸ்ட்டைத் தாக்கியது, ஸ்வீடன் அரண்டு போனது.

கடைசியில் வெற்றி கோலை திகைப்பூட்டும் விதத்தில் அரிய கோணத்தில் அடித்த டோனி குரூஸ்தான் முதல் பாதியில் பந்தை ஸ்வீடன் வீரர் பெர்கிற்கு விட்டுக் கொடுத்தார், ஆனால் அவர் முயற்சி வைடாக, விக்டர் கிளாசன் டாய்னவனுக்கு ஒரு அபார கிராஸ் செய்ய டாய்னவன் முதலில் மார்பில் பந்தைத் தாங்கி பிறகு மிக அருமையாக கோலுக்குள் தூக்கி விட்டார், இது ஷாட் அல்ல ஒரு டச்தான். ஜெர்மனி கோல் கீப்பர் மேனுயெல் நூயருக்கு ஒரு வாய்ப்பும் இல்லை. வேடிக்கைதான் பார்க்க முடிந்தது, ஸ்வீடன் அபாரமான முறையில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

முதல் பாதியில் ஸ்வீடன் கோல் அடித்தாலும் ஜெர்மனி முழுத்தாக்குதல் தொடுத்தது 70% பந்துகளை தங்கள் வசம் வைத்திருந்தது, ஆனால் போட்டெங், அனுபவ வீரர் க்லோஸ், வலது புறத்தில் முல்லர், டோனி குரூஸ் போன்றவர்கள் இருந்தும் கோல் மட்டும் வரவில்லை. ஸ்வீடன் கோல் கீப்பர் ஆல்சன் சாதாரணமானவர் கிடையாது, அசாதாரண கோல் கீப்பராவார். அவரது கணிப்புகள் எதுவும் தவறவில்லை, மிகத்துல்லியமாகக் கணித்து ஜெர்மனியின் ஷாட்களுக்குத் தக்கவாறு தன்னை நகர்த்திக் கொண்டார். அதே போல் அவரது கோல் கீக்கும் மிகத்துல்லியமானவை.

ஜெர்மனி தாக்குதல் ஆட்டம் ஆடினாலும் எதிர்த்தாக்குதலில் ஸ்வீடனும் சளைக்கவில்லை. ஸ்வீடன் மிகவும் ஒரு கடினமான அணி, தோற்கடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஜெர்மனி தடுப்பாட்டமே ஓரிரு கணங்களில் ஒன்றுமில்லாமல் போனது.

ஸ்வீடனின் அற்புத எதிர்த்தாக்குதலும் முதல் கோலும்

அப்படிப்பட்ட எதிர்த்தாக்குதலில்தான் ஜெர்மனி வீரரிடமிருந்து பந்தைத் தட்டிப்பறித்த ஸ்வீடன் பந்தை பெர்க் பெற, அவர் மிக அருமையாக பந்தை வேகமாக எடுத்து வந்தார், எமில் ஃபார்ஸ்பெர்க்குக்கு கொடுக்க ஜெர்மனி தடுப்பாட்ட வீரர்களே இல்லை, கிளாசன் நல்ல நிலையில் நிற்க ஃபார்ஸ்பெர்க் அவருக்குக் கொடுத்தார், ஆனால் கிளாசன் பந்து வந்தவுடனேயே கோலை நோக்கி அடித்திருக்க வேண்டும், ஆனால் அவர் பந்தை நிறுத்த ஹெக்டர் குறுக்கே புகுந்து கோல் முயற்சியை தடுத்தார், இது பெனால்டி பகுதியில் ஹெக்டர் இப்படி தடுத்ததால் பெனால்டி வேண்டும் என்று ஸ்வீடன் அடம்பிடித்தது, வீடியோ ரெஃபரல் செய்திருந்தால் ஒருவேளை பெனால்டி கிடைத்திருக்கலாம். பிறகு பெர்க் அடித்த தலை ஷாட் ஒன்று நூயரை சிக்கலுக்குள்ளாக்கியது.

ஆட்டத்தின் 28வது நிமிடத்திலிருந்தே ஸ்வீடன் அணி கொஞ்சம் தாக்குதல் ஆட்டத்தில் வேகம் காட்டியது. 26வது நிமிடத்தில்தான் ரூடியின் மூக்கை உடைத்து ரத்தம் வர அவர் வெளியேறினார். 28வது நிமிடத்தில் அகஸ்டின்சன் வலதுபுறம் பந்தை எடுத்துச் சென்று கிராஸ் செய்தார், ஹெக்டர் அதனை தலையால் முட்ட ஸ்வீடனுக்கு கார்னர் வாய்ப்பு. கார்னர் ஷாட்டை வெர்னர் தலையால் முட்டி வெளியே தள்ளினார்.

32வது நிமிடத்தில் ஜெர்மனிவசம் இருந்த பந்தை ஸ்வீடன் பிடுங்கியது, டோனி குரூஸ்தான் பந்தை ஸ்விடன் வசம் விட்டவர், பந்தை ஸ்வீடன் வலது புறம் வேகமாக எடுத்து சென்றது, கிளாசன் பார்த்தார், நடுவில் டாய்வோனென் இருந்ததைக் கவனித்தார், அவரிடம் ஒரு அழகான பாஸைச் செய்ய இரண்டு ஜெர்மனி தடுப்பாட்ட வீரர்களுக்கு இடையே பந்தை மார்பில் தாங்கினார் டாய்வோனென், பிறகு முன்னேறி வந்த ஜெர்மன் கோல் கீப்பர் நூயரைத் தாண்டி தூக்கி விட்டார். பந்து கனவுக் காட்சி போல் கோலுக்குள் சென்றது. பந்தை தன் வசமிழந்த டோனி குரூஸ் தன் முகத்தில் கையை வைத்து கொண்டு குற்ற உணர்வில் தவித்தார். டோனி குரூஸ் ஒருவேளை அப்போது முடிவெடுத்திருப்பார் வெற்றி கோலை அடிக்கப்போவது தானே என்று!!

இடைவேளையின் போது ஸ்வீடன் மிக அபாயகரமாக 1-0 என்று முன்னிலையுடன் சென்றது.

இடைவேளைக்குப் பிறகு ஜெர்மனி வேறொரு அணியானது. இங்கிலாந்து போல் பின்களத்தில் 4 வீரர்கள், நடுக்களத்தில் 4 வீரர்கள் முன் களத்தில் 2 வீரர்கள் என்று நிலைநிறுத்தியிருந்தது.

இடைவேளை முடிந்து இறங்கியவுடன் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளவில்லை 48வது நிமிடத்தில் இடது புறம் வெர்னர் தாக்குதல் தொடுக்க பந்தை உள்ளுக்குள் தள்ளி 6 அடி பாக்சிற்குள் கிராஸ் செய்தார், கோம்ஸ் அதை சரியாகக் காலாளவில்லை, அவரிடமிருந்து சுழன்று சென்றது பந்து ஆனால் ஸ்வீடன் வீரரைக் கடந்து ரியூஸ் உள்ளே வந்து ஆல்சன் தள்ளி நிற்க கோலாக மாற்றினார், ஜெர்மனி சமன் செய்தது.

கோம்ஸைக் கொண்டுவந்ததும் ஜோக்கின் லோவின் அருமையான ஒரு முடிவாகும். கடந்த 26 போட்டிகளில் உட்கார வைக்கப்படாத ஓஸிலை உட்காரவைத்தது ஜோக்கிம் லோ-வின் தைரியமான முடிவாகும். மொத்தத்தில் கடுமையாக ஆடிய ஸ்வீடனை ஜெர்மனி 10 வீரர்களுக்குக் குறைக்கப்பட்டாலும் அபாரமான தனிநபர் திறமைகளினால் வென்றது. ஆனால் முல்லர் என்ன செய்கிறார்? அவர்பாட்டுக்கு வலது புறம் தெய்வமேனு ஆடப்பணிக்கப்பட்டிருப்பது ஏன்? ஒரு ஸ்ட்ரைக்கரைப் பூனைக்குட்டிப் போல் ஆக்கிவிட்டு விங்கில் ஜோக்கிம் லோ குட்டிப்போட்ட பூனை போல் அலைவது ஏன்? ஒருவேளை வரும் போட்டிகளில் இதற்கு விடை கிடைக்கலாம்.

கொரியாவை ஜெர்மனி வீழ்த்தி, மெக்சிகோவை ஸ்வீடன் வீழ்த்தினால் 3 அணிகளும் 6 புள்ளிகளுடன் இருக்கும், அப்போது கோல் வித்தியாசம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் 2 அணிகளைத் தீர்மானிக்கும். இந்த குரூப் எஃப் தான் ஊசி முனையில் தள்ளாடுகிறது.

ஜெர்மனி போன்ற அணிகளிடம் காணப்படும் முக்கிய குணாம்சம் என்னவெனில் பெரிய தொடர்களில் சரியான நேரத்தில் அவர்கள் ஆட்டம் உச்சம் பெறும் சூடுபிடிக்கும், நேற்று ஸ்வீடன் அணிக்கு எதிராக அதுதான் நடந்தது, ஆனால் ஸ்வீடன் அணி உண்மையில் கடும் அச்சுறுத்தலான அணியாகும், மெக்சிகோ தோற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x