Published : 09 Jun 2018 05:50 PM
Last Updated : 09 Jun 2018 05:50 PM

சேவாக் அணிக்கு வந்த புதிதில் என்னுடன் பேசமாட்டார்: சச்சின் ருசிகரப் பதிவு

 

இப்போது ட்விட்டரில் கலக்கி வரும் அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் உண்மையில் ஒரு கூச்ச சுபாவமான மனிதர், அதிகம் பேச மாட்டார் என்று கூறினால் அது இப்போது நம்பும்படியாக இருக்காது, ஆனால் கூட இருந்த சச்சின் சேவாக் பேசமாட்டார் என்பதை தற்போது வெளியிட்டுள்ளார்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சச்சின், சேவாக் இருவரும் தங்களது கால பழக்கங்களை சுவாரசியமாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தொடக்க வீரர்கள் களத்தில் மட்டுமல்ல களத்துக்கு வெளியேயும் தங்களுக்கிடையே பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வது வழக்கம், இதே போல்தான் ஹெய்டன், லாங்கர் ஜோடி, அந்தக் காலத்தில் மஜீத் கான், சாதிக் மொகமட், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், கார்டன் கிரீனிட்ஜ் என்று பிணைப்புள்ள ஜோடிகளை உதாரணமாகக் கூற முடியும்.

அதே போல்தான் ஒருநாள் போட்டிகளில் சச்சின், சேவாக் ஜோடி இறங்கினாலே உலக பவுலர்கள் நடுநடுங்கிய காலம் நினைவுக்கு வரும்.

இந்நிலையில் சேவாக் அணியில் நுழைந்த அந்த ஆரம்ப காலங்கள் பற்றி சச்சின் கூறியதாவது:

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, விரூ முதலில் அணியில் வந்த போது என்னிடம் பேச மாட்டார். அப்போதுதான் நான் இது வேலைக்கு உதவாது என்று எண்ணி அவரை என் வழிக்குக் கொண்டு வர முயற்சி செய்தேன். இருவரும் களத்தில் இறங்கும்போது ஒருவருக்கொருவர் இணக்கமாக உணர வேண்டும்.

அப்போது அவரிடம் நானே சென்று ‘வா இருவரும் உணவருந்தப் போவோம்’ என்றேன். என்ன பிடிக்கும் என்றேன். அவர் ‘பா ஜி.. நான் வெஜிடேரியன் என்றார். ஏன் என்றேன் நான் அதற்கு அவர் சிறுவயது முதலே வீட்டில் இறைச்சி சாப்பிட்டால் உடம்பு பெருத்து விடும் என்று கூறியதாகத் தெரிவித்தார். சிக்கன் சாப்பிட்டால் உடல் பருமனடையும் என்று தனக்கு கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார். உடனே ‘நான் சாப்பிடுகிறேன் அதனால் குண்டாக இருக்கிறேனா?’ என்றேன், அவரை நான் சிக்கன் சாப்பிட வைத்தேன் அன்று முதல் சேவாக் சிக்கன் சாப்பிடத் தொடங்கினார்.

இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

 

சேவாக் தன் நினைவுகளைப் பகிர்ந்த போது, “முதன் முதலில் சச்சினை சந்தித்தபோது அவர் என் கையைக் குலுக்கி விட்டு நகர்ந்து சென்றார். என்ன இது எனக்குப் பிடித்த ஆளுமை கையை மட்டும் குலுக்கி விட்டுச் செல்கிறார் என்று எனக்குள்ளேயே நான் ஆச்சரியமடைந்தேன். ஆனால் பிறகு நான் மூத்த வீரர் ஆனபோது இளம் வீரர்களிடம் நானும் இதே போக்கைத்தான் கடைபிடித்தேன் என்பது வேறு விஷயம். ஒருவரைப் பற்றி தெரியாமல் அவருடன் நெருங்குவது கடினம் என்பதை உணர்ந்தேன். அணியில் நுழைந்த போது நான் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவனாக இருந்தேன்.

சச்சின் பற்றி கூற வேண்டுமெனில் யார் கேப்டனாக இருந்தாலும் அது தாதாவாக இருந்தாலும் ராகுலாக இருந்தாலும் ஏன் தோனியாக இருந்தாலும் அவர் அறிவுரைகள் வழங்குவார், ஆனால் நேரடியாக எதையும் கூறமாட்டார் ஒரு மெசஞ்சர் மூலமே அவர் தன் பங்களிப்பை அறிவுறுத்துவார். தோனி கேப்டன்சியில் ஒரு முறை ‘லாலா இதை அவரிடம் போய்ச் சொல்’ என்றார் சச்சின், அப்போது நான் கூறுவேன் தோனி தூது வருபவரை என்ன கொலையா செய்து விடுவார், நான் தகவலைத் தெரிவிக்கிறேன் என்பேன்.

ஏன் நான் கேப்டனாக ஒரேயொரு போட்டியில் இருந்த போது கூட சச்சின் களவியூகத்தில் இவரை இங்கே நிறுத்து அவரை அங்கே நிறுத்து என்று ஆலோசனைகளை வழங்குவார்” என்றார் சேவாக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x