Published : 25 Aug 2014 04:59 PM
Last Updated : 25 Aug 2014 04:59 PM

கிளென் மேக்ஸ்வெல் அதிரடியில் ஜிம்பாப்வேயை வென்றது ஆஸ்திரேலியா

முத்தர்ப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் முதல் போட்டியில் ஜிம்பாவேயிற்கு எதிராக ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 350 ரன்களைக் குவித்தது.

ஜிம்பாவே, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று ஹராரேயில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாவே கேப்டன் எல்டன் சிகும்பரா ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்டிங் பற்றி அறியாமல் முதலில் பேட் செய்ய அழைத்தார்.

பிராட் ஹேடின், ஆரோன் ஃபின்ச் ஜோடி அதிரடியாகத் தொடங்கி 18 ஓவர்களில் 98 ரன்கள் சேர்த்து அபாரத் தொடக்கம் கண்டனர். பன்யாங்கரா, மற்றும் சடரா என்ற பவுலர்கள் சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டனர்.

48 ரன்களில் 2 பவுண்டரி 2 சிக்சர்கள் அடித்த பிராட் ஹேடின் முதலில் சிகும்பரா பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். ஆரோன் பின்ச் சரியான விளாசல் பார்மில் இருந்தார்.

அவர் 79 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்து நயும்பு பந்தில் அவுட் ஆனார். 30வது ஓவரில் 145 ரன்களுக்கு 2 விக்கெட் என்று இருந்தது ஆஸ்திரேலியா. கேப்டன் பெய்லி 14 ரன்களில் ஆட்டமிழக்க 36.2 ஓவர்களில் 1787/3 என்று இருந்தது.

அப்போது இணைந்த அதிரடி ஜோடி கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் ஜோடி 9 ஓவர்களில் 109 ரன்களை விளாசினர். மேக்ஸ்வெல் சிக்சர் மழை பொழியத்தொடங்கினார். ஒரு பந்தை மட்டையைத் திருப்பி ரிவர்ஸ் ஷாட் ஆடி பாயிண்ட் திசையில் சிக்சர் அடித்தது ஜிம்பாவேயை மிரளச் செய்தது.

28 பந்துகளில் அரைசதம் கண்டார் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் தன் பங்கிற்கு அடித்து ஆடி 83 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்சர்கள் சகிதம் 89 ரன்கள் எடுத்து 45.2வது ஓவரில் அவுட் ஆனார்.

ஆனால் மேக்ஸ்வெல் அதிரடி தொடர்ந்தது அவர் 46 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 93 ரன்கள் விளாசினார். ஒரு ஆஸ்திரேலிய அதிரடி சத சாதனை நிகழ்த்தப்படலாம் என்று எதிர்பார்த்த போது, அனைத்து சேதங்களையும் ஏற்படுத்திய மேக்ஸ்வெல் 48வது ஓவரில் அவுட் ஆனார்.
மேக்ஸ்வெல் அவுட் ஆகும் போது 47.4 ஓவர்களில் 317 ரன்களை எடுத்திருந்தது ஆஸ்திரேலியா, கடைசியில் மிட்செல் ஜான்சன் இறங்கி 10 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 20 ரன்களை எடுத்தார். கடைசி 5 ஓவர்களில் 69 ரன்களை விளாசினர் ஆஸ்திரேலியா. கடைசி 10 ஓவர்களில் 147 ரன்கள் விளாசப்பட்டது.

இந்த மைதானத்தின் அதிக பட்ச ஒருநாள் ஸ்கோரான 350 ரன்களை ஆஸ்திரேலியா எட்டியது. 300 ரன்களுக்கும் அதிகமாக ஆஸ்திரேலியா இதையும் சேர்த்து 76வது முறையாக எடுக்கிறது. இந்தியா 78 முறை 300 ரன்களைக் கடந்துள்ளது.

அடுத்து விளையாடிய ஜிம்பாப்வே 39.3 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. ஜிம்பாப்வே அணியில் மசகட்சா அதிகபட்சமாக 91 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில், ஸ்மித் மூன்று விக்கெட்டுகளையும், லயான் மற்றும் ஸ்டார் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவின் ஜான் மார்ஷ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இப்போட்டித் தொடரின் அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா அணிகள் நாளை மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x