Published : 15 May 2018 04:50 PM
Last Updated : 15 May 2018 04:50 PM

எங்கள் ஸ்பின்னர்கள் இந்திய பேட்ஸ்மென்களை திணறடிப்பார்கள்: ஆப்கான் கேப்டன் ஸ்டானிக்ஸய் உறுதி

தங்கள் அணியில் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள், இதனால் இந்திய பேட்ஸ்மென்களுக்கு இவர்கள் சவாலாகத் திகழ்வார்கள் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் அச்கர் ஸ்டானிக்சய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

கோலி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்திய அணி சிறந்த அணியே, உள்நாட்டில் இன்னும் கூடுதல் பலத்துடன் திகழ்வதாகும். கோலி ஒரு மிகப்பெரிய வீரர், அவர் ஆடினால் அதுவும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.

யார் விளையாடுகிறார்கள், அல்லது விளையாடவில்லை என்பதை மீறி இந்திய அணி சவாலான அணி என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நிச்சயம் எங்களுக்கு இது கற்றுக்கொள்ளும் அனுபவம்தான், ஆனாலும் நாங்கள் இந்திய அணியைப் பார்த்து மிரளவில்லை. நாங்கள் வெற்றி பெறத்தான் ஆடுகிறோம். எங்களிடம் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் உள்ளனர், அவர்கள் இந்தியாவுக்கு சிக்கல்களை ஏற்படுத்துவர்.

அவர்களின் வீரர்களிடமிருந்து கற்றுக் கொள்வோம், அவர்களும் எங்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். ஆம் நாங்கள் முதல் டெஸ்ட் போட்டியில்தான் ஆடுகிறோம், ஆனால் முதல் தர கிரிக்கெட்டின் போதுமான அனுபவங்களும் எங்களிடம் உள்ளது.

ஆண்டுக்கு பத்து 4 நாட்கள் போட்டிகளில் ஆடுகிறோம், ஐசிசி இண்டர்காண்டினெண்டல் கோப்பையை இருமுறை வென்றிருக்கிறோம். டெஸ்ட் வித்தியாசமானதுதான், ஆனால் பெரிய வித்தியாசம் என்று நான் நினைக்கவில்லை.

ஸ்பின் பந்து வீச்சுதான் எங்கள் பக்கபலம், அதில் சந்தேகமேயில்லை. வேகப்பந்து வீச்சாளர்களும் உள்ளனர், தவ்லத், ஷபூர் ஸத்ரான் இருவரும் 140 கிமீ வேகம் வீசக்கூடியவர்கள், எனவே எங்களிடம் போதிய பலம் உள்ளது.

ஸ்பின்னர்கள் ஏன் அதிக அளவில் வருகின்றனர் என்றால் ஆப்கானிஸ்தான் பிட்ச்கள் இந்திய பிட்ச்கள் போல்தான், ஸ்பின்னர்களுக்குத்தான் அதிக உதவி செய்யும். இது ஒருகாரணமாக இருக்கலாம். இதே காரணத்தினால்தான் எங்கள் பேட்ஸ்மென்களும் ஸ்பின்னை நன்றாக ஆடுகின்றனர்.

வரவிருக்கும் ஆப்கான் டி20 லீக் மூலம் 10 ஆண்டுகளில் நாங்கள் சாதிப்பதை 3 ஆண்டுகளில் சாதிப்போம். எங்கள் வீரர்கள் உலகின் சிறந்த வீரர்களுடன் சரிசமமாக ஆடுவார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் அழுத்தத்தை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம், சர்வதேச வீரர்களுடன் ஆடும்போது எங்கள் வீரர்கள் அதையும் கற்றுத் தேர்வார்கள்” என்றார் ஸ்டானிக்சய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x