Last Updated : 26 May, 2018 04:28 PM

 

Published : 26 May 2018 04:28 PM
Last Updated : 26 May 2018 04:28 PM

பேட்டிங்கை மாற்றிய ‘பிரதர் டிவில்லியர்ஸ்’: விராட் கோலி புகழாரம்

 

பேட்டிங் முறையை மாற்றிய என் சகோதரரே டிவில்லியர்ஸ் என்று இந்திய அணியின் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார். அவருடைய ஓய்வு அறிவிப்புக்குப் பின் முன்னணி வீரர்கள், தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்கள் எனப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து இருந்தனர்.

ஆனால், ஐபிஎல் போட்டியில் ராயல் பெங்களூரு சேலஞ்சர்ஸ் அணியில் இணைந்து விளையாடிய கேப்டன் விராட் கோலி மட்டும் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காதது பெரும் வியப்பை அளித்து இருந்தது.

இந்நிலையில், டிவில்லியர்ஸைப் புகழ்ந்து விராட் கோலி இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

''உங்கள் எதிர்கால வாழ்க்கையில் அனைத்துவிதமான நலன்களையும் பெற வாழ்த்துகிறேன். நீங்கள் சர்வதேச கிரிக்கெட் விளையாடிய காலத்தில் பேட்டிங் முறையை மாற்றி இருக்கிறீர்கள் என்பதைக் காண முடிந்தது சகோதரரே. உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் எதிர்காலத்தில் அற்புதமான வாழ்க்கை இருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டிவில்லியர்ஸ் 8,765 ரன்கள் குவித்துள்ளார். இதில் 22 சதங்கள் அடங்கும். 228 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள டிவில்லியர்ஸ் 25 சதங்கள் உள்ளிட்ட 9,577 ரன்கள் சேர்த்துள்ளார். 78 டி20 போட்டிகளில் பங்கேற்று, 10 அரைசதங்கள் உள்ளிட்ட 1,672 ரன்கள் சேர்த்துள்ளார்.

விக்கெட் கீப்பரான டிவில்லியர்ஸ் சர்வதேசப் போட்டிகளில் 463 கேட்சுகளும், 17 ஸ்டெம்பிங்கும் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x