Published : 24 May 2018 08:09 AM
Last Updated : 24 May 2018 08:09 AM

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 169 ரன்கள் குவிப்பு: தினேஷ் கார்த்திக் அரை சதம் விளாசல்

ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் அஜிங்க்ய ரஹானே பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது. கிருஷ்ணப்பா கவுதம் வீசிய முதல் பந்தில் பவுண்டரி அடித்த சுனில் நரேன் அடுத்த பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். இதையடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா 7 பந்துகளில், 3 ரன்கள் சேர்த்த நிலையில் கிருஷ்ணப்பா கவுதம் வீசிய 3-வது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய நித்திஷ் ராணா 5 பந்தில், 3 ரன்கள் எடுத்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தை மிட்விக்கெட் திசையில் தூக்கி அடிக்க உனத்கட்டிடம் கேட்ச் ஆனது.

24 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் கிறிஸ் லினுடன் இணைந்த கேப்டன் தினேஷ் கார்த்திக், உனத்கட் வீசிய 6-வது ஓவரில் இரு பவுண்டரிகளை விரட்ட பவர் பிளேவில் 46 ரன்கள் சேர்க்கப்பட்டது. நிதானமாக பேட் செய்த கிறிஸ் லின் 22 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்ரேயஸ் கோபால் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது ஸ்கோர் 8 ஓவர்களில் 51 ஆக இருந்தது. இதையடுத்து சுப்மான் கில் களமிறங்க 10 ஓவர்களில் 63 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஸ்ரேயஸ் கோபால் வீசிய 14-வது ஓவரில் சுப்மான் கில்லும், தினேஷ் கார்த்திக்கும் தலா ஒரு சிக்ஸர் விளாச அந்த ஓவரில் 20 ரன்கள் எடுக்கப்பட்டது.

மட்டையை சுழற்ற ஆரம்பித்த சுப்மான் கில், ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய நிலையில் 2-வது பந்தில் ஹென்ரிச் கிளாசெனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். சுப்மான் கில் 17 பந்துகளில், 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 28 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய ஆந்த்ரே ரஸ்ஸல் அதே ஓவரில் சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டார். உனத்கட் வீசிய 17-வது ஓவரில் இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 19 ரன்கள் விளாசப்பட்டது. அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 38 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் பென் லாக்லின் வீசிய 18-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதே ஓவரில் ஆந்த்ரே ரஸ்ஸல் டீப் மிட்விக்கெட், பைன் லெக் திசை என இரு சிக்ஸர் விளாசினார். இதைத் தொடர்ந்து ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய அடுத்த ஓவரிலும் ரஸ்ஸல், ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார்.

2 பந்துகள் எஞ்சிய நிலையில் சியர்லஸ் (2), பென் லாக்லின் பந்தில் வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. ஆந்த்ரே ரஸ்ஸல் 25 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் தரப்பில் கிருஷ்ணப்பா கவுதம், ஜோப்ரா ஆர்ச்சர், பென் லாக்லின் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 170 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ராஜஸ்தான் அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x