Published : 06 May 2018 11:09 AM
Last Updated : 06 May 2018 11:09 AM

வான்கடே மைதானத்தில் இன்று பலப்பரீட்சை: கொல்கத்தாவை சமாளிக்குமா மும்பை?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டம் ஒன்றில் மறுஎழுச்சி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, வலுவான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் நேற்றுமுன்தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அந்த அணியின் நம்பிக்கையானது இன்னும் ஊசலாடிய நிலையில்தான் உள்ளது. அதேவேளையில் கடைசியாக கிடைத்த வெற்றியானது அந்த அணியை புள்ளிகள் பட்டியலில் கணிசமான இடத்துக்கு முன்னேறச் செய்துள்ளது. 9 ஆட்டங்களில், 3 வெற்றி, 6 தோல்விகள் கண்டுள்ள மும்பை அணி கடைசி இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு தாவியுள்ளது.

எனினும் எஞ்சியுள்ள 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு வசப்படும். பஞ்சாப் அணிக்கு எதிராக இறுதிக்கட்டத்தில் கிருணல் பாண்டியா, ரோஹித் சர்மா ஜோடி 21 பந்துகளில் 56 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. இதேபோல் தொடக்க வீரரான சூர்யகுமார் யாதவும் அரை சதம் விளாசி சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார். மற்றொரு தொடக்க வீரரான எவின் லீவிஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்திருந்தார். சொந்த மைதானத்தில் அவர், அதிரடி பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜேபி டுமினி ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர். பந்து வீச்சில் இறுதிகட்ட ஓவர்களில் அதிக ரன்ளை வாரி வழங்குவது இன்னும் தொடர்கதையாக உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிராக மெக்லீனகன் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களை வாரி வழங்கினார். அதேபோல் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் 20 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசையை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஜஸ்பிரித் பும்ரா, பென் கட்டிங், மயங்க் மார்க்கண்டே ஆகியோர் சிறப்பாக செயல்படுவது அவசியம். இவர்களுடன் பாண்டியா சகோதரர்களும் பந்து வீச்சில் வலுசேர்க்க முயற்சிக்க வேண்டும். மும்பை அணி இந்த சீசனில் தனது சொந்த அணியில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடிய ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் சொந்த மண்ணில் விளையாடினாலும் அந்த அணி கூடுதலாக மெனக் கெட வேண்டியதுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தனது பாணியில் சிறப்பாக வழி நடத்தி வருகிறார் தினேஷ் கார்த்திக். 9 ஆட்டத்தில் விளையாடிய உள்ள அந்த அணி 10 புள்ளிகளை பெற்று வலுவாகவே உள்ளது. கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. தினேஷ் கார்த்திக் 280 ரன்கள் குவித்து இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த முதல் 10 வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இதேபோல் 260 ரன்கள் சேர்த்துள்ள கிறிஸ் லின், 207 ரன்கள் எடுத்துள்ள ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோரும் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக உள்ளனர்.

டாப் ஆர்டரில் சுனில் நரேன் தனது அதிரடியால் சிறப்பான தொடக்கம் கொடுப்பது பலமாக உள்ளது. இளம் வீரரான சுப்மான் கில், சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் வரிசையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். 36 பந்தில் 57 ரன்கள் விளாசிய அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். ராபின் உத்தப்பாவிடம் இருந்து மட்டுமே இதுவரை பெரிய அளவிலான இன்னிங்ஸ் வெளிப்படவில்லை.

சுழற்பந்து வீச்சில் சுனில் நரேன், பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். முதுகுவலியில் இருந்து குணமடைந்துள்ள நித்திஷ் ராணா இன்று களமிறங்கும் பட்சத்தில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் கூடுதல் வலுப்பெறும். வேகப்பந்து வீச்சில் டாம் குர்ரன், மிட்செல் ஜான்சன், சிவம் மாவி ஆகியோர் கூடுதல் திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x