Published : 06 May 2018 11:03 AM
Last Updated : 06 May 2018 11:03 AM

வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் பஞ்சாப் அணி: ராஜஸ்தானுடன் இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு இந்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் அடுத்தடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 8 ஆட்டங்களில் 5 வெற்றி, 3 தோல்விகளுடன் பட்டியலில் 4-வது இடம் வகிக்கிறது. அதேவேளையில் முதல் சீசனில் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் 8 ஆட்டங்களில், 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இரு அணிகளும் தங்களது கடைசி இரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளன. எனினும் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்கக்கூடிய அணிகளுள் ஒன்றாகவே இருந்து வருகிறது.

அந்த அணி கடைசி ஆட்டத்தில் நேற்றுமுன்தினம் சொந்த மைதானத்தில் மும்பை அணியிடம் வீழ்ந்த போதிலும் மீண்டெழும் திறனை கொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது. தொடக்க வீரரான கிறிஸ் கெயில் சிறந்த பார்மில் இருப்பது அணிக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கிறது. மும்பை அணிக்கு எதிராக அரை சதம் விளாசிய அவர், மீண்டும் ஒரு முறை மட்டையை வலுவாக சுழற்றக்கூடும். மும்பை அணிக்கு எதிராக இறுதி கட்ட ஓவர்களில் பஞ்சாப் அணி அதிக ரன்களை தாரைவார்த்தது. இதனால் இந்த விஷயத்தில் அந்த அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

ராஜஸ்தான் அணியில் கவனிக்கப்பட கூடிய வீரராக திகழ்கிறார் ஜாஸ் பட்லர். டெல்லி அணிக்கு எதிராக 18 பந்துகளில் அரை சதம் விளாசிய அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். ராஜஸ்தான் அணி கடைசியாக ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பின்னர் ஹைதராபாத், டெல்லி அணிக்கு எதிராக வீழ்ச்சி கண்டிருந்தது. வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டுமென்றால் பேட்டிங்கில் ரஹானே, டி ஆர்சி ஷாட், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் ஒருங்கிணைந்த செயல்திறனை வெளிப்படுத்துவது அவசியம். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், குல்கர்னி, கவுதம் ஆகியோர் நெருக்கடி தரக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x