Published : 01 May 2018 08:33 AM
Last Updated : 01 May 2018 08:33 AM

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 211 ரன்கள் குவிப்பு: வாட்சன், தோனி அதிரடி அரை சதம் விளாசல்

ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது.

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியில் டு பிளெஸ்ஸிஸ், லுங்கி நிகிடி, கே.எம்.ஆசிப், கரண் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். இதையடுத்து சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியது.

ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ் ஜோடி நிதானமாக விளையாடியது. முதல் 4 ஓவர்களில் 25 ரன்கள் சேர்க்கப்பட்டது. லயிம் பிளங்கெட் வீசிய 5-வது ஓவரில் வாட்சன் 2 சிக்ஸர்களும், டு பிளெஸ்ஸிஸ் ஒரு சிக்ஸரும் விளாச அந்த ஓவரில் 20 ரன்கள் சேர்க்கப்பட்டது. அவேஷ் கான் வீசிய அடுத்த ஓவரில் இருவரும் தலா ஒரு பவுண்டரிகள் விரட்ட பவர்பிளேவில் சென்னை அணி 56 ரன்கள் சேர்த்தது. பிளங்கெட் வீசிய 7-வது ஓவரிலும், ராகுல் டிவாட்டியா வீசிய 9-வது ஓவரிலும் வாட்சன் தலா 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். அதிரடியாக விளையாடிய வாட்சன் 25 பந்துகளில் அரை சதம் அடித்தார். 10 ஓவர்களில் சென்னை அணி 96 ரன்கள் சேர்த்தது.

மறுபுறம் நிதானமாக விளையாடிய டு பிளெஸ்ஸிஸ் 33 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் விஜய் சங்கர் பந்தில் லாங் ஆஃப் திசையில் நின்ற டிரென்ட் போல்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு அவர், வாட்சனுடன் இணைந்து 10.5 ஓவர்களில் 102 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா (1) மோசமான வகையில் ஸ்வீப் ஷாட் விளையாடி மேக்ஸ்வெல் பந்தில் போல்டானார். இதைத் தொடர்ந்து அம்பாட்டி ராயுடு களமிறங்கினார். விஜய் சங்கர் வீசிய 13-வது ஓவரில் வாட்சன் இரு பவுண்டரிகளும், அம்பாட்டி ராயுடு ஒரு பவுண்டரியும் விரட்டினர்.

அதிரடியாக விளையாடிய வாட்சன் 40 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் விளாசிய நிலையில் அமித் மிஸ்ரா பந்தை தூக்கி அடித்த போது லாங் ஆஃப் திசையில் நின்ற பிளங்கெட்டிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து களமிறங்கிய தோனி, அமித் மிஸ்ரா வீசிய 16-வது ஓவரில் லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் விளாசினார். டிரென்ட் போல்ட் வீசிய அடுத்த ஓவரில் தோனி தொடர்ச்சியாக 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி மிரளச் செய்தார்.

இந்த ஓவரில் 19 ரன்கள் விளாசப்பட்டது. பிளங்கெட் வீசிய 18-வது ஓவரில் அம்பாட்டி ராயுடு 2 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் விளாசினார். அவேஷ் கான் வீசிய 19-வது ஓவரில் முதல் 5 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் சேர்க்கப்பட கடைசி பந்தை சிக்ஸராக மாற்றிய தோனி டிரென்ட் போல்ட் வீசிய கடைசி ஓவரில் தலா ஒரு சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் விரட்டினார். ஒரு பந்து எஞ்சிய நிலையில் அம்பாட்டி ராயுடு ரன் அவுட் ஆனார். அவர் 24 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சேர்த்தார்.

கடைசி பந்தில் தோனி 2 ரன்கள் எடுத்து அரை சதம் கடந்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. தோனி 22 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து 212 ரன்கள் இலக்குடன் டெல்லி பேட் செய்ய ஆயத்தமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x