Published : 11 May 2018 02:50 PM
Last Updated : 11 May 2018 02:50 PM

புவனேஷ்வர் குமாரை 11 பந்துகளில் 43 ரன்கள் விளாசிய ரிஷப் பந்த்: சுவையான தகவல்கள்

டெல்லியின் சிறிய மைதான அனுகூலத்தைத் தனக்குச் சாதகமாக்கிய ரிஷப் பந்த் 63 பந்துகளில் 15 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 128 ரன்கள் விளாசி தனி நபராக டெல்லியை முன்னுக்கு இட்டுச் சென்றார், ஆனால் ஷிகர் தவன், கேன் வில்லியம்சன் டெல்லியின் 188 ரன்கள் வெற்றி இலக்கை 18.5 ஓவர்களில் வெறும் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து சன் ரைசர்ஸ் அபார வெற்றி பெற்றது.

ஷிகர் தவண் 50 பந்துகளில் 92 ரன்களையும் கேப்டன் வில்லியம்சன் 53 பந்துகளில் 88 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர்.

இந்தப் போட்டியில் ரிஷப் பந்த் ஏற்படுத்திய சாதனைத்துளிகளிl சிலவும் பிறவும்..

ரிஷப் பந்த் எடுத்த 128 ரன்கள் டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவர் எடுக்கும் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். இதற்கு முன்னால் முரளி விஜய் 2010 ஐபிஎல்-ல் ராஜஸ்தானுக்கு எதிராக 127 ரன்களை எடுத்ததுதான் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும்.

டெல்லி டேர் டெவில்ஸ் எடுத்த 187 ரன்களில் பந்த் பங்களிப்பு 68%. ஐபிஎல் தொடக்க போட்டியில் 2008ம் ஆண்ட் பிரெண்டன் மெக்கல்லம் பெங்களூரு அணிக்கு எதிராக விளாசிய 158 ரன்கள் கொல்கத்தாவின் 222/3 என்பதில் 71% பங்களிப்பாகும்.

புவனேஷ்வர் குமாரை இந்த ஐபிஎல் தொடரில் வெளுத்து வாங்கிய ஒரே வீரர் ரிஷப் பந்த் என்றால் அது மிகையல்ல. 11 பந்துகளில் பண்ட் அவரை 43 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடங்கும். புவனேஷ்வர் குமாரை இவ்வளவு ரன்கள் அடித்த ஒரே வீர்ர் ரிஷப் என்ற சாதனைக்கும் சொந்தக் காரரானார்.

அதே போல் டைட்டாக வீசி முக்கிய விக்கெட்டுகளுடன் சன் ரைசர்ஸ் வெற்றியில் பெரும் பங்கு செலுத்தி வரும் ரஷீத் கான் ஓவரில் ரிஷப் 13 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் அடங்கும்.

மொத்தம் புவனேஷ்வர், ரஷீத்தின் 24 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார் ரிஷப் பந்த்.

மணீஷ் பாண்டே முதலில் ஐபிஎல் கிரிக்கெட்டில் சதம் கண்ட இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர் அப்போது அவருக்கு வயது 19 ஆண்டுகள் 253 நாட்கள். ரிஷப் பந்த் இந்த அதிகபட்ச தனிப்பட்ட ஐபிஎல் ஸ்கோரை எடுக்கும் போது வயது 20 ஆண்டுகள் 218 நாட்களாகும்.

128 ரன்கள் கடைசியில் வெற்றிக்கு உதவவில்லை, இது போன்று இன்னும் 3 அதிரடி இன்னிங்ஸ்கள் தோல்வியில் முடிந்துள்ளன. கிறிஸ் கெய்ல் 2015-ல் கெண்ட் அணிக்கு எதிராக சோமர்செட் அணிக்கு எடுத்த 151 ரன்கள் தோல்வியில் முடிந்த அதிகபட்ச அதிரடி ஸ்கோராகும். ஒருமுறை கேமரூன் பேங்க்ராப்ட் இதே சோமர்செட் அணிக்கு எடுத்த 141 ரன்களும் தோல்வியில் முடிந்தது. டேனியல் கிறிஸ்டியனின் 129 ரன்கள் மிடில்செக்ஸ் அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தரவில்லை. ஐபிஎல் கிரிக்கெட்டில் சைமண்ட்ஸ் டெக்கான் சார்ஜர்சுக்காக 2008-ல் ராஜஸ்தானுக்கு எதிராக அடித்த 117 நாட் அவுட்டும் தோல்வியில்தான் முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x