Published : 11 May 2018 07:33 AM
Last Updated : 11 May 2018 07:33 AM

டெஸ்ட்டில் கால் பதிக்கிறது அயர்லாந்து: பாகிஸ்தான் அணியுடன் இன்று மோதல்

அயர்லாந்து அணி தனது அறி முக டெஸ்ட்டில் இன்று டப்ளின் நகரில் உள்ள மலாஹைடு மைதானத்தில் இளம் வீரர்களை உள்ளடக்கிய பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

2000-ம் ஆண்டு முழுநேர டெஸ்ட் அந்தஸ்து பெற்ற வங்கதேச அணிக்கு பிறகு கடந்த ஆண்டு அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கியிருந்தது. அயர்லாந்தில் 1731-ம் ஆண்டுகளிலேயே கிரிக்கெட் விளையாடப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் 1830-ம் ஆண்டு அந்த நாட்டில் தொடங்கப்பட்ட டப்ளின் போனிக்ஸ் கிரிக்கெட் கிளப் இன்றும் செயல்பட்டு வருகிறது.

அயர்லாந்து அணி முதன்முறையாக உலக கிரிக்கெட்டின் பார்வையை தன் மீது ஈர்த்தது 1969-ம் ஆண்டுதான். மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந் தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக சீயோன் மில்ஸ் மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் விளையாடியது. ஒரே நாளில் இரு இன்னிங்ஸ்கள் விளையாடப்பட்ட இந்த ஆட்டத்தில் முத லில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியை வெறும் 25 ரன்களுக்குள் சுருட்டியது அயர்லாந்து அணி. இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 100 ரன்கள் முன்னிலை பெற்றதால் அயர்லாந்து வெற்றி பெற்றது.

இதன் பின்னர் கவுண்டி ஒரு நாள் போட்டி தொடர்களில் அயர்லாந்து அணி சிறப்பாக விளையாடியது. மேலும் தொடர்ச்சியாக 3 முறை முயற்சி செய்து தோல்வியடைந்த நிலையில் 2007-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்று அனைவரையும் வியக்க வைத்தது அயர்லாந்து. மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தை ஜிம்பாப்வேக்கு எதிராக டையில் முடித்த நிலையில் அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரமிக்க வைத்தது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 132 ரன்களில் சுருட்டியிருந்தது அயர்லாந்து. அதன் பின்னர் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கும் அதிர்ச்சி கொடுத்தது அயர்லாந்து அணி.

327 ரன்கள் இலக்கை துரத்திய அயர்லாந்து ஐந்து பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வாகை சூடியிருந்தது. அந்த ஆட்டத்தில் கெவின் ஓ’பிரையன் 50 பந்துகளில் சதம் விளாசியதுதான் இதுவரையிலும் உல கக் கோப்பையில் அதிவிரைவாக எடுக்கப்பட்ட சதமாக உள்ளது. குறுகிய வடிவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடிய அயர்லாந்து அணி தற்போது டெஸ்ட் போட்டியில் தனது அறிமுக ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்குகிறது. கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு, தொடக்க வீரரான எட் ஜாய்ஸ், ஆல்ரவுண்டர்களான பால் ஸ்டிர்லிங், கெவின் ஓ’பிரையன், வேகப்பந்து வீச்சாளர் டிம் முர்டாஹ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தங்களது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்குகின்றனர்.

இவர்கள் ஒருநாள் போட்டிக் கான ஐசிசி-யின் தரவரிசையில் குறிப்பிடத்தகுந்த இடங்களில் இருப்பது கூடுதல் அம்சம். பேட்டிங் வரிசையில் ஸ்டிர்லிங் 35-வது இடத்திலும், ஜாய்ஸ் 42-வது இடத்திலும், ஓ’பிரையன் 51-வது இடத்திலும், போர்ட்டர்பீல்டு 58-வது இடத்திலும் உள்ளனர். இதேபோல் பந்து வீச்சு தரவரிசையில் முர்டாஹ் 20-வது இடத்திலும், மெக்ரின் 42-வது இடத்திலும், பாய்ட் ரேங்கின் 58-வது இடத்திலும் ஜார்ஜ் டாக்ரெல் 63-வது இடத்திலும் உள்ளனர்.

இவர்களில் பேட்ஸ்மேனான எட் ஜாய்ஸ் இங்கிலாந்து அணிக்காகவும் சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். 254 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் கொண்ட அவர், 47 சதங்களுடன் 18,414 ரன்கள் குவித்துள்ளார். பந்து வீச்சாளர்களில் முர்டாஹ் 210 முதல்தர போட்டிகளில் பங்கேற்று 712 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார். பெரும்பாலான வீரர்கள் போதிய அளவிலான அனுபவம் கொண்டிருப்பதால் நிச்சயம் பாகிஸ்தானுக்கு அயர்லாந்து சவால் அளிக்கும் என்றே கருதப்படுகிறது. அயர்லாந்து அணி வெற்றி பெற்றால் அந்த அணிக்கு 90 புள்ளிகள் கிடைக்கும். அதேவேளையில் ஆட்டம் டிராவில் முடிந்தால் 40 புள்ளிகளை அயர்லாந்து பெறும். எனினும் 8 ஆட்டங்களில் விளையாடிய பின்னரே அயர்லாந்து அணியால் ஐசிசி தரவரிசை பட்டியலுக்குள் நுழைய முடியும்.

அதேவேளையில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள பாகிஸ்தானுக்கு இந்த ஆட்டம் சாதகமாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. பேட்டிங்கில் அசார் அலி, ஆசாத் ஷபிக், ஷமி இஸ்லாம், கேப்டன் சர்ப்ராஸ் அகமது ஆகியோர் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர். பந்து வீச்சில் யாஷிர் ஷா, முகமது அப்பாஸ், முகமது அமீர் மிரட்ட காத்திருக்கின்றனர். இதற்கிடையே வரலாற்று சிறப்பு மிக்க இந்த டெஸ்ட் போட்டிக்கு வானிலை அச்சுறுத்தல் எழுந்துள்ளது. டப்ளின் நகரில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அணிகள் விவரம்

அயர்லாந்து: வில்லியம் போர்ட்டர்பீல்டு (கேப்டன்), ஆன்ட்ரூ பால்பிரினி, எட் ஜாய்ஸ், டைரோன் கேன், ஆன்ட்ரூ மெக்பிரின், டிம் முர்டாஹ், கெவின் ஓ’பிரையன், நியால் ஓ’பிரையன், பாய்ட் ரேங்கின், ஜேம்ஸ் ஷானன், கிரெய்க் யங், பால் ஸ்டிர்லிங், ஸ்டூவர் தாம்ப்சன், கேரி வில்சன்.

பாகிஸ்தான்: சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), அசார் அலி, இமாம் உல்-ஹக், ஷமி இஸ்லாம், ஹரிஸ் சோகைல், பாபர் அஸாம், பஹர் ஸமான், ஷாத் அலி, ஆசாத் ஷபிக், உஸ்மான் சலாஹூதின், ஷதப் கான், முகமது அமீர், முகமது அப்பாஸ், ஹசன் அலி, ரகத் அலி, பகீம் அஸ்ரப். - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x