Last Updated : 30 May, 2018 02:05 PM

 

Published : 30 May 2018 02:05 PM
Last Updated : 30 May 2018 02:05 PM

‘டீவில்லியர்ஸை தெ.ஆப்பிரிக்கா இழந்தது என்பது இந்திய அணியில் கோலி இல்லாதது போன்றது’: கிரேம் ஸ்மித் உருக்கம்

தென் ஆப்பிரிக்க அணி ஏபி டி வில்லியர்ஸை இழந்தது, இந்திய அணியில் விராட் கோலி இல்லாததற்குச் சமமாகும், இருவரின் இடத்தையும் யாராலும் நிரப்பமுடியாது என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் திடீரென அறிவிப்பு வெளியிட்டார். 15 ஆண்டுகள் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடிய டிவில்லியர்ஸ் 8765 ரன்கள் சேர்த்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் அதிகபட்ச ரன் சேர்ந்தவர்களில் 4-ம் இடத்தை டிவில்லியர்ஸ் பெறுகிறார்.

ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 16 பந்துகளில் அரை சதத்தையும், 31 பந்துகளில் சதத்தையும் டிவில்லியர்ஸ் நிறைவு செய்து சாதனைப் புரிந்துள்ளார். 360 டிகிரி கோணத்திலும் பந்தை விளாசும் திறமைபடைத்தவர் டவில்லியர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

டிவில்லியர்ஸ் ஓய்வு அறிவிப்பு குறித்து முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் சியட் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது, அவர் ராய்டர்ஸ் நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

தென் ஆப்பிரிக்க அணியில் ஏபி டி வில்லியர்ஸ் இல்லாததை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. டில்லியர்ஸ் விளையாடாதது, தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய இழப்பாக அமையும். ஆதலால், உலகக்கோப்பைப் போட்டிக்குள் தென் ஆப்பிரிக்க பல்வேறு சவால்களைச் சந்திக்கும் வகையில் தன்னைத் தயார் செய்து கொள்வது அவசியமாகும்.

நான் டிவில்லியர்ஸை பற்றி அதிகமாகக் கற்பனை செய்து வைத்திருந்தேன். 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை வரை அணியில் நீடித்துஇருப்பார் என எண்ணினேன். ஆனால், அவரின் ஓய்வுஅறிவிப்பு என்னை அதிர்ச்சியடையச் செய்தது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த கிரிக்கெட்டிலும், ஐபிஎல் போட்டியிலும் டிவில்லியர்ஸ் சிறப்பாகவே விளையாடினார்.

டிவில்லியர்ஸ் இல்லாத அணியைப் பார்க்கும்போதெல்லாம் மக்கள் மிகுந்த வேதனை அடைவார்கள். ஏனென்றால், ஏபியின் பேட்டிங் அந்த அளவுக்குச் சிறப்பாக இருக்கும். அவர் ஆட்டமிழந்துவிடக்கூடாது, பேட் செய்து கொண்டே இருக்க வேண்டும், அதைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றும்.

டிவில்லியர்ஸ் இருந்திருந்தால், டி20 போட்டிகளில் மக்களுக்கு பேட்டிங் என்பது பொழுதுஅம்சமாக நிறைந்திருக்கும், அவர்களை மகிழ்விக்கும் வகையில் டிவில்லியர்ஸ் போன்றோர் பேட் செய்வார்கள். ஆனால், இனிமேல் ஐசிசிக்கு டி20 போட்டியைச் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகக் கொண்டு செல்வதில் சிக்கல் இருக்கும்.

15 ஆண்டுகளுக்கு மேல் கிரிக்கெட் விளையாடும்வீரர்கள் ஆண்டுக்கு 9 மாதங்கள் வரைவெளிநாட்டில் போட்டிக்காகத் தங்கி விடுகிறார்கள். அப்போது குடும்பத்தை இழப்பது, தனிப்பட்ட வாழ்க்கையை இழப்பது உள்ளிட்ட பல்வேறு அழுத்தங்களைச் சந்திக்கிக்கிறார்கள். இது மிகமிக கடினமான ஒன்றாகும்.

தென் ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தென் ஆப்பிரிக்க அணி டிவில்லியர்ஸை இழந்தது என்பது இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது போன்றதாகும்.

ஒவ்வொருவரும் டிவில்லியர்ஸ் ஓய்வை மிகப்பெரிய இழப்பு என்கிறார்கள். தென் ஆப்பிரிக்க அணி இக்கட்டான தருணத்தில் இருந்த போட்டிகளில் எல்லாம் தனிமனிதராக இருந்து வெற்றிக் கொடுத்துள்ளார்.

அணியில் மூத்த வீரர்களாக இருக்கும் ஹசிம் அம்லா, டூபிளசிஸ் ஆகியோர் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு விளையாடுவார்கள் எனத் தெரியவில்லை. அவர்களும் சென்றுவிட்டால், உலகக்கோப்பைக்கு அணியைத் தயார் செய்யவது கடினமாகும்.

அம்லாவும், டூப்பிளசியும் என்னைப் பொறுத்தவரை 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை வரை, அல்லது அதற்கு அடுத்து சில ஆண்டுகள் வரை அணியில் நீடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு சவால்களைத் தென் ஆப்பிரிக்க சந்திக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’’ என கிரேம் ஸ்மித் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x