Published : 11 Apr 2018 04:13 PM
Last Updated : 11 Apr 2018 04:13 PM

‘டேக் இட் ஈஸி’: கேகேஆர் தோல்விக்குக் காரணமான வினய் குமார் கூல்

சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதல் ஓவரையும், கடைசி ஓவரையும் மோசமாக வீசி தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தாவுக்கு தோல்வி தேடித்தந்த வினய் குமார் தன்பவுலிங் குறித்து கூலாக டிவீட் செய்துள்ளார்.

சிஎஸ்கே அணி 203 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய போது முதல் ஓவரை வீசிய வினய் குமார் 16 ரன்களை கொடுத்தார். அதன் பிறகு அவரை தினேஷ் கார்த்திக் பந்து வீச அழைக்கவில்லை. பிறகு கடைசி ஓவரை வீச அழைக்கப்பட்டார், இது கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் அனுபவமின்மையைக் காட்டியதாக கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டாம் கரன் கடைசி ஓவர்களை நன்றாக வீசுபவர், ஆனால் சாம் பில்லிங்சும் இங்கிலாந்து என்பதால் டாம் கரனை நன்றாக அறிந்திருந்தார், ஆனால் புதிதாக இறங்கிய பிராவோ, தடுமாறிய ஜடேஜா நிச்சயம் டாம் கரனை அடித்திருக்க முடியாது என்ற கருத்துகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் டாம் கரன் தன் 4 ஓவர்கள் கோட்டாவை முடிக்கவில்லை, அவரை கடைசி ஓவர் வீசுமாறு தினேஷ் கார்த்திக் ஓவர்களை அளித்திருக்க வேண்டும், ஆனால் தினேஷ் கார்த்திக் அப்படிச் செய்யவில்லை.

ஒரு முறை ஷார்ஜாவில் ஜாவேத் மியாண்டட் கடைசி பந்தில் சேத்தன் சர்மாவை சிக்ஸ் அடித்து வென்ற போது கபில்தேவுக்கு கணிதப்பாடத்தில் டியூஷன் தேவை என்று கிண்டல் செய்யப்பட்டது. மேலும் வினய் குமார் பந்து வீச்சு வரலாறு தெரிந்தவர்கள் கடைசி ஓவரை அவரிடம் அளித்திருக்க மாட்டார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தோல்விக்குக் காரணமான வினய் குமார் தன் டிவிட்டர் பதிவில்,

“டேக் இட் ஈசி கய்ஸ். இது ஒரு கேம் அவ்வளவுதான். ஆர்சிபி அணிக்கு எதிராக 9 ரன்களை விட்டுக் கொடுக்காமல் தடுத்த போதும், மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 10 ரன்களை விட்டுக் கொடுக்காமல் தடுத்த போதும் இப்போது என்னை விமர்சிப்பவர்கள் எங்கு இருந்தீர்கள்? சில வேளைகளில் தவறுகள் ஏற்படுவது சகஜம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x