

ராகுல் திராவிட் பதவிக்காலம் முடியவுள்ளதை அடுத்து இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடி, அமித் ஷா, ஷாருக் கான் மற்றும் தோனி பெயரில் 3400 போலி விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
அந்தப் போலி விண்ணப்பங்கள் பலவும் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, வீரேந்திர சேவாக், ஷாருக்கான், சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி உள்ளிட்ட பலரின் பெயர்களில் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தன. இதில் தோனி பெயர் இடம் பெறவும், அவரை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
தலைமைப் பண்புக்காக பெயர் பெற்ற தோனி, இந்திய அணியின் பயிற்சியாளர் ஆக தகுதியான நபர் தானே? என்ற கேள்விகளுக்கும் எழுப்பப்பட்டன. தோனி சரியான நபர் தான், ஆனாலும் அவரால் தற்போதைக்கு பயிற்சியாளர் ஆக முடியாது. ஏனென்றால், பிசிசிஐ விதி அப்படி உள்ளது. பிசிசிஐ விதிப்படி, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றிருக்க வேண்டும். இந்த விதியின்படி, தோனி பயிற்சியாளர் ஆவதற்கு தகுதியான நபர் கிடையாது.
ஏனென்றால், தோனியை பொறுத்தவரை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020-ம் ஆண்டே ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆக்டிவாக விளையாடி வருகிறார். நடந்த முடிந்த ஐபிஎல் சீசனில் நல்ல ஃபார்மில் இருந்த தோனி, விளையாடிய 11 இன்னிங்ஸ்களில் மூன்று முறை மட்டுமே ஆட்டமிழந்தார். அதிலும், 220 ஸ்டிரைக் ரேட்டில் ரன்கள் எடுத்திருந்தார். இந்த தொடரே அவரின் கடைசி தொடர் பலர் சொல்லிவந்தாலும், தோனி இதுவரை அதிகாரபூர்வமாக தனது ஓய்வை அறிவிக்கவில்லை. இதனால், அவர் அடுத்த ஐபிஎல் சீசனிலும் விளையாடக்கூடும் என்றே பேச்சுக்கள் எழுந்துள்ளன.
இந்த காரணங்களால் தான் தோனியை தற்போதைக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்ய முடியாது. இதற்கிடையே, கடந்த 2021ம் ஆண்டு எமிரேட்ஸில் நடந்த டி20 உலகக் கோப்பைக்கு தோனி இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.