Published : 30 May 2024 08:22 AM
Last Updated : 30 May 2024 08:22 AM

T20 WC | இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து: குரூப் ஏ - ஒரு பார்வை

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் 9-வது பதிப்பு வரும் ஜூன் 2 முதல் 29-ம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. இதில் இடம் பெற்றுள்ள 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகள் குறித்து ஒரு பார்வை.

பாகிஸ்தான் (2009 சாம்பியன்) - 2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் அணி கடந்த இரு டி 20 உலகக் கோப்பை தொடரிலும் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருக்கிறது. இம்முறையும் பாபர் அஸம் தலைமையில் களமிறங்குகிறது. பேட்டிங்கில் அவருடன் முகமது ரிஸ்வான், சைம் அயூப், பஹர் ஸமான், இப்திகார் அகமது பலம் சேர்க்கக் கூடும். சுழற்பந்து வீச்சில் ஷதன் கான், இமாத் வாசிம், அப்ரார் அகமது ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் ஷாகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹரீஸ் ரவூஃப், முகமது அமிர், அப்பாஸ் அப்ரிடி ஆகியோரும் அணியை பலப்படுத்தக் கூடும்.

அணி: பாபர் அஸம் (கேப்டன்), அப்ரார் அகமது, அஸம் கான், ஃபஹர் ஸ்மான், ஹாரிஸ் ரவூஃப், இப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது அமீர், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், ஷதப் கான், ஷாஹீன் ஷா அப்ரிடி, உஸ்மான் கான்.

துருப்பு சீட்டு: பாபர் அஸம் - கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியதால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பாபர் அஸம், அதன் பின்னர் சில மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். டி 20 வடிவில் பாபர் அஸம் 118 ஆட்டங்களில் 41.10 சராசரியுடன் 3,987 ரன்கள் சேர்த்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 129.91 ஆக உள்ளது.

இந்தியா (2007 சாம்பியன்) - 2011-ம் ஆண்டு ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி அதன் பின்னர் சமீபகாலமாக உலகக் கோப்பை தொடர்களில் இறுதிக்கட்ட தடைகளை கடக்க முடியாமல் தடுமாற்றம் அடைந்து வருகிறது. இதற்கு இம்முறை தீர்வு காண்பதில் அதீத கவனம் செலுத்தக்கூடும் 2007-ம் ஆண்டு டி 20 சாம்பியனான இந்திய அணி. ரோஹித் சர்மா 2-வது முறையாக டி 20 உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்பட உள்ளார். டாப் ஆர்டரில் அவருடன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் அசத்த ஆயத்தமாக உள்ளனர்.

ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோர் தங்களது வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா இடம் பெற்றுள்ளனர். பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் என ஒட்டுமொத்த இந்திய அணியும் பலம் வாய்ந்ததாக உள்ளது.

அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ்.

துருப்பு சீட்டு: ஜஸ்பிரீத் பும்ரா - 2022-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் காயம் காரணமாக ஜஸ்பிரீத் பும்ரா விளையாடவில்லை. இதன் பின்னர் 2023-ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் களமிறங்கிய அவர், 11 ஆட்டத்தில் 20 விக்கெட்கள் கைப்பற்றி தாக்கத்தை ஏற்படுத்தினார். டி 20 வடிவில் சமீபத்தில் நிறைவந்த ஐபிஎல் தொடரில் 20 விக்கெட்களை சாய்த்திருந்தார். இதனால் அமெரிக்க மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளின் ஆடுகளங்களில் பும்ரா, மாயங்கள் நிகழ்த்தக்கூடும்.

அமெரிக்கா: டி 20 உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக அறிமுகம் ஆகும் அமெரிக்க அணி, தொடரை மேற்கு இந்தியத் தீவுகளுடன் இணைந்து நடத்துகிறது. 2004-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய அமெரிக்க அணி அதன் பின்னர் தற்போதுதான் ஐசிசி தொடரில் கால்பதிக்கிறது. மோனங்க் படேல் தலைமையிலான அமெரிக்க அணியில் பேட்டிங்கில் ஆரோன் ஜோன்ஸ், ஸ்டீவன் டெய்லர், கோரி ஆண்டர்சன் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். வேகப்பந்து வீச்சில் அலி கான், சவுரப் நேத்ராவல்கர், மிலிந்த் குமார். பலம் சேர்க்கக்கூடும்.

அணி: மோனங்க் படேல் (கேப்டன்), ஆரோன் ஜோன்ஸ், ஆண்ட்ரீஸ் கவுஸ், கோரி ஆண்டர்சன், அலி கான், ஹர்மீத் சிங், ஜெஸ்ஸி சிங், மிலிந்த் குமார், நிசர்க் படேல், நிதிஷ் குமார், நோஷ்டுஷ் கென்ஜிகே, சவுரப் நேத்ரால்வகர், ஷேட்லி வான் ஷால்க்விக், ஸ்டீவன் டெய்லர், ஷயான் ஜஹாங்கீர்.

துருப்பு சீட்டு: அலி கான் - வேகப்பந்து வீச்சாளரான அலி கான், தொழில்முறை டி 20 போட்டிகளில் பரிச்சயமானவர். கரீபியன் பிரிமீயர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆகியவற்றில் விளையாடி உள்ளார். 2016ம் ஆண்டு கரீபியன் பிரிமீயர் லீக்கில் குமார் சங்ககராவை தான் வீசிய முதல் பந்திலேயே போல்டாக்கியதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். யார்க்கர் பந்துகளை திறம்பட வீசும் அலிகான், சொந்த நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடும்.

கனடா: டி 20 உலகக் கோப்பையில் அறிமுக அணியாக கனடா களமிறங்குகிறது. எனினும் அந்த அணிக்கு பெரிய அளவிலான அரங்கு புதிதல்ல. 50 ஓவர் உலகக் கோப்பையில் அந்த அணி 1979, 2003, 2007 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் விளையாடி உள்ளது. அனுபவம் வாய்ந்த வீரர்களை அதிகம் உள்ளடக்கிய கனடா அணி சாத் பின் ஜாபர் தலைமையில் களமிறங்குகிறது. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள கன்வர்பால் தத்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கூடுதலாக, வேகப்பந்து வீச்சாளர் ஜெர்மி கார்டன் மற்றும் அனுபவம் வாய்ந்த 39 வயதான ஆல்ரவுண்டர் ஜுனைத் சித்திக் ஆகியோரின் வருகை கனடா அணிக்கு பலம் சேர்க்கக்கூடும்.

அணி: சாத் பின் ஜாபர் (கேப்டன்), ஆரோன் ஜான்சன், ரவீந்தர்பால் சிங், நவ்னீத் தலிவால், கலீம் சனா, திலோன் ஹெய்லிகர், ஜெர்மி கார்டன், நிகில் தத்தா, பர்கத் சிங், நிக்கோலஸ் கிர்டன், ரேயன்கான் பதான், ஜுனைத் சித்திக், தில்பிரீத் பஜ்வா, ஷ்ரேயாஸ் மோவ்வா, ரிஷிவ் ஜோஷி.

துருப்பு சீட்டு: சாத் பின் ஜாபர்- கேப்டன், பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர் என பன்முகத்திறனுடன் சாத் பின் ஜாபர் கனடா அணியை வழிநடத்த உள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், 43 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மட்டை வீச்சில் 19 ஆட்டங்களில் 272 ரன்கள் சேர்த்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 133.99 ஆகும்.

அயர்லாந்து: இதுவரை நடைபெற்ற அனைத்து டி 20 உலகக் கோப்பையிலும் பங்கேற்றுள்ள அயர்லாந்து தற்போது 8-வது முறையாக களமிறங்குகிறது. கடந்த இரு உலகக் கோப்பையில் ஆண்ட்ரூ பால்பிர்னி தலைமையில் விளையாடிய அயர்லாந்து இம்முறை பால் ஸ்டிர்லிங் தலைமையில் களமிறங்குகிறது. பேட்டிங் வரிசையில் இந்நாள் மற்றும் முன்னாள் கேப்டனுடன் ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், ராஸ் அடேர், கர்டிஸ் கேம்பர் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். மார்க் அடேர், ஜோஷ் லிட்டில் ஆகியோர் வேகப்பந்து வீச்சு தாக்குதலுக்கு தலைமை தாங்குகிறார்கள், கிரஹாம் ஹியூம், கேம்பர், பாரி மெக்கார்த்தி கிரேக் யங் ஆகியோரும் உறுதுணையாக இருக்கக்கூடும். சுழற்பந்து வீச்சாளர்களாக பென் ஒயிட், கரேத் டெலானி ஆகியோர் உள்ளனர்.

அணி: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), மார்க் அடேர், ராஸ் அடேர், ஆண்ட்ரூ பால்பிர்னி, கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், கிரஹாம் ஹியூம், ஜோஷ் லிட்டில், பாரி மெக்கார்த்தி, நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் ஒயிட், கிரேக் யங்.

துருப்பு சீட்டு: பால் ஸ்டிர்லிங்- அயர்லாந்தின் கிரிக்கெட் அணியின் தூணாக திகழ்கிறார் பால் ஸ்டிர்லிங். 33 வயதான அவர், டி 20 வடிவில் 142 ஆட்டங்களில் விளையாடி 3,589 ரன்கள் குவித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 135.43 ஆக உள்ளது. அயர்லாந்து கிரிக்கெட் வரலாற்றில் டி 20-ல் 3 ஆயிரம் ரன்களை கடந்துள்ள முதல் வீரர் இவர் மட்டுமே. ஆண்ட்ரூ பால்பிர்னியுடனான அவரது வலிமையான கூட்டணி அயர்லாந்தின் வெற்றிக்கு பல்வேறு ஆட்டங்களில் கருவியாக இருந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x