Published : 29 May 2024 07:20 AM
Last Updated : 29 May 2024 07:20 AM

27 நாட்கள், 55 ஆட்டங்கள்: டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை ஜூன் 2-ல் தொடக்கம் 

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் 9-வது பதிப்பு வரும் ஜூன் 2 முதல் 29-ம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. 27 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

இந்த சுற்றில் உள்ள 8 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்படும். இதில் இடம் பெறும் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவிலும் தலா முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்று ஜூன் 19 முதல் 25-ம் தேதி வரையும் அரை இறுதி ஆட்டங்கள் ஜூன் 27-ம் தேதியும் நடைபெறுகின்றன. அரை இறுதி சுற்றில் வெற்றி பெறும் அணிகள் சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் ஜூன் 29-ம் தேதி பார்படாஸில் பலப்பரீட்சை நடத்தும். தொடரின் தொடக்க ஆட்டத்தில் ஜூன் 2-ம் தேதி அமெரிக்கா - கனடா அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 5-ம் தேதி அயர்லாந்தை சந்திக்கிறது.

2007-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி தொடரை வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு இது கடைசி டி 20 உலகக் கோப்பை தொடராக அமையக்கூடும். 2013-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி இதுவரை ஐசிசி தொடர்களை வெல்லவில்லை. இதற்கு இம்முறை தீர்வு காண இந்தியஅணி வீரர்கள் முயற்சிக்கக்கூடும்.

கடந்த ஆண்டில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற உற்சாகத்துடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. சீனியர் பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித் அணியில் இருந்து நீக்கப்பட்டாலும் பேட்டிங், பந்து வீச்சில் வலுவான நிலையில் தொடரை சந்திக்கிறது ஆஸ்திரேலிய அணி. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் இல்லாமல் விளையாடுகிறது.

தொடரை இணைந்து நடத்து உள்ள இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் டி 20 வடிவில் அபாயகரமான அணியாக திகழ்கிறது. சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் அந்த அணி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் தாக்கத்தை ஏற்படுத்த ஆயத்தமாக உள்ளன. ஐசிசி தொடர்களில் அதிர்ச்சி வைத்தியம் அளிக்கக் கூடிய வங்கதேசம், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளும் தயாராகி உள்ளன.

அமெரிக்காவில் போட்டிகள் ஏன்? - கிரிக்கெட் விளையாட்டை வளர்ப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்த அமெரிக்காவில் தற்போது முதன்முறையாக டி 20 உலகக் கோப்பை தொடரின் ஒரு பகுதியை நடத்துகிறது ஐசிசி. அமெரிக்காவின் புளோரிடா, டெக்சாஸ், நியூயார்க் ஆகிய 3 இடங்களில் லீக் சுற்றின் 16 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் நியூயார்க் நகரின் லாங் ஐலேண்ட் பகுதியில் நடைபெறுகிறது.

அமெரிக்காவில் கிரிக்கெட் ஒரு பொழுதுபோக்கு மட்டத்தில் பரவலாக விளையாடப்பட்டு வருகிறது. எனினும் தற்போது டி 20 உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மூன்று நகரங்களிலும் இந்த விளையாட்டை நோக்கி அமெரிக்க ரசிகர்களை வெகுவாக இழுக்க முடியும் என போட்டி அமைப்பாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் கிரிக்கெட்டை நேசிக்கும் பின்னணியில் இருந்து வந்துள்ள புலம்பெயர்ந்த சமூகங்கள், குறிப்பாக ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் போட்டி நடைபெறும் மைதானங்களை பெருவாரியாக நிரப்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் 2028-ம் நடைபெற உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் டி 20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளதால் அதை பிரபலப்படுத்துவதற்கான தளமாகவும் தற்போது அமெரிக்காவில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பைபை தொடரை எதிர்நோக்குகிறது ஐசிசி.

புதியவர்கள்... ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் இம்முறை அமெரிக்கா, கனடா, உகாண்டா ஆகிய 3 அணிகள் அறிமுகமாகின்றன. இவர்களுடன் நேபாளம், பப்புவா நியூ கினியா, ஓமன் ஆகிய அணிகளும் ஒப்பீட்டளவில் பெரிய அரங்கிற்கு புதியவரவாக உள்ளன. இவை வலுவான சில அணிகளுக்கு அதிர்ச்சி தோல்விகளை அளிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

பிரிவுகள் - குரூப் ஏ: இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா
குரூப் பி: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்
குரூப் சி: மே.இ.தீவுகள், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினியா
குரூப் டி: தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாளம்

போட்டி நடைபெறும் இடங்கள்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்காவில் 3 நகரங்களிலும், மேற்கு இந்தியத் தீவுகளில் 6 இடங்களிலும் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அமெரிக்காவில் உள்ள லாடர்கில், டல்லாஸ், நியூயார்க் ஆகிய 3 நகரங்களிலும் கூட்டாக 16 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் ஜூன் 9-ம் தேதி நசாவு கவுன்டி சர்வதேச மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் நடைபெறுகிறது. மேற்கு இந்தியத் தீவுகளில் 41 ஆட்டங்கள் 6 இடங்களில் நடைபெறுகின்றன. அரை இறுதி ஆட்டங்கள் டிரினிடாட் அன்ட் டோபாகோ மற்றும் கயானாவில் நடைபெறுகிறது. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஜூன் 29-ல் பார்படாஸில் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x