Published : 22 Apr 2018 09:02 PM
Last Updated : 22 Apr 2018 09:02 PM

‘ராயுடு ராஜ்ஜியம்’: சன்ரைசர்ஸை சிதைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்: மீண்டும் முதலிடம்

ராயுடு, ரெய்னாவின் ஆர்ப்பரிப்பான, அர்பணிப்பான பேட்டிங், சாஹரின் மிரட்டல் பந்துவீச்சு ஆகியவற்றால், ஹைதராபாத்தில் இன்று நடந்த 20-வது ஐபிஎல் போட்டியின் பரபரப்பான லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

பவர்ப்ளேயில் 32 ரன்கள் மட்டுமே சேர்த்து, 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த சிஎஸ்கே அணியை ராயுடுவும், ரெய்னாவும் தூக்கி நிறுத்தினார்கள் என்றால் மிகையல்ல. இருவரின் கூட்டணி 100 ரன்களுக்கு மேல் சேர்த்து அணியின் ரன்குவிப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

நடுவரிசையில் இறங்கி பேட்டிங்கில் மிரட்டிய ராயுடு, 37 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தார். இவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

அதேசமயம், பந்துவீச்சில் சாஹர் தொடக்கத்திலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸ் சரிவுக்கு வித்திட்டார். ஒட்டுமொத்தத்தில் இது சிஎஸ்கே அணியின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

முதலிடம்

இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் ஒரு தோல்வி 4 வெற்றிகள், என 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 2 தோல்வி, 3 வெற்றிகள் என  6 புள்ளிகளுடன் 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இம்ரான் தாஹிருக்கு பதிலாக டூப்பிளசிஸ் சேர்க்கப்பட்டு இருந்தார். ஹைதராபாத் அணியில் ஷிகர் தவாணுக்கு பதிலாக ரிக்கி புயி, ஜோர்டானுக்கு பதிலாக ஸ்டான்லேக் ஆகியோர் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்தது. 183 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது.

திணறல்

சிஎஸ்கே வீரர்கள் வாட்ஸன், டூப்பிளசிஸ் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். புவனேஷ்குமாரும், ஸ்டான்லேக்கும் துல்லியமாகப் பந்துவீசி பவர்ப்ளே ஓவரில் சென்னை அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர்.

இதனால், தொடக்கத்திலேயே சென்னை அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. வாட்ஸனும், டூப்பிளசியும் தொடக்கத்தில் இருந்து ரன்சேர்க்க தடுமாறினார்கள். 3 ஓவர்களுக்கு 4 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற வலுகுறைந்த அணிக்கு எதிராக கடந்த போட்டியில் சிஸ்கர்களும், பவுண்டரிகளும் பறக்கவிட்ட வாட்ஸன் இந்த போட்டியில் ரன் அடிக்க முடியாமல் தத்தளித்தார்.

புவனேஷ்வர் வீசிய 4-வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்த வாட்ஸன், அடுத்த பந்தில் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா, டூப்பிளசியுடன் இணைந்தார். வேகப்பந்துவீச்சு மட்டுமல்லாமல், சஹிப் அல்ஹசன் பந்துவீச்சிலும் இருவராலும் ரன் சேர்க்க முடியவில்லை. பவர்ப்ளே ஓவரில் 27 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

ராஷித் கான் வீசிய 8-வது ஓவரில் 11 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், டூப்பிளசிஸ் ஆட்டமிழந்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டூபிளசி ஏமாற்றம் அளித்தார். அடுத்ததாக அம்பதிராயுடு களமிறங்கி, ரெய்னாவுடன் இணைந்தார். இதன் பின்தான் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.

திருப்புமுனை

3-வது விக்கெட்டுக்கு நங்கூரமாக நின்ற இந்த கூட்டணி, தொடக்கத்தில் நிதானமாகவும், பின்னர் தங்களின் அதிரடி ஆட்டத்தாலும் சன்ரைசர்ஸ் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர்.

ராயுடு வந்தவுடன் ராஷித் கான் பந்துவீச்சில் பவுண்டரி அடித்தார். புவனேஷ் குமாரை ஓவரை எதிர்பார்த்துக் காத்திருந்த ரெய்னா அவரின் 10 வது ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து சவால் விட்டார். 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 2 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் சேர்த்திருந்தது.

ராஷித் கான் வீசிய 12-வது ஓவரில் ரெய்னா தொடர்ந்து இரு சிக்ஸர்கள் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். ராயுடு நிதானமாக பேட் செய்து தனக்குரிய வாய்ப்புக்காக காத்திருந்தார்.

ராயுடு வாய்ப்பு வந்தது. ஸ்டான்லேக், சஹிப் அல் ஹசன், ராஷித் கான் ஆகியோரின் ஓவரை நொறுக்கி அள்ளிய ராயுடு 27 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

14-வது ஓவரை ஸ்டான்லேக் வீசினார். இந்த ஓவரில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 18 ரன்கள் அடித்து ஸ்டான்லேக்குக்கு கிலி ஏற்படுத்தினார் ராயுடு.

ஹசன் வீசிய 15-வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி, ராஷித்கான் வீசிய 16-வது ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரி என ராயுடு வெளுத்து வாங்க, ரெய்னாவும் ஒரு பவுண்டரி அடித்து வெறுப்பேற்றினார். இவர்களின் அதிரடியைப் பார்த்த வில்லியம்ஸன் கையை பிசைந்தார்.

16-ல் 48 ரன்கள்

கவுல் வீசிய 17-வது ஓவரில் ராயுடு ரன்அவுட் செய்யப்பட்டார். 37 பந்துகளைச் சந்தித்த ராயுடு 79 ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும். ராயுடு தான் சந்தித்த கடைசி 16 பந்துகளில் மட்டும் 48 ரன்கள் சேர்த்தார். இதில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.

3-வது விக்கெட்டுக்கு ரெய்னா, ராயுடு கூட்டணி 112 ரன்கள் சேர்த்து, பிரிந்தனர்.

காதைப் பிளந்த விசில்

4-வது வீரராக தோனி களமிறங்கினார். தோனி களத்தில் வரும்போதே விசில் சத்தமும், ரசிகர்களின் கரகோஷமும் காதைப் பிளந்தது.

முதல் அரைசதம்

ராஷித்கான் வீசிய 18-வது ஓவரை தோனி சந்தித்தார். 2-வது பந்தில் பவுண்டரி அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். கவுல் வீசிய 19-வது ஓவரில் பவுண்டரி அடித்து ரெய்னா, ஐபிஎல் சீசனில் முதல் சதத்தை 39 பந்துகளில் பதிவு செய்தார்.

கவுல் ஓவரில் பைல் லெக் திசையிலும் தேர்டுமேன் திசையும் இரு பவுண்டரிகளை தோனி அடித்தார். ஸ்டான்லேக் வீசிய கடைசி ஓவரில் தோனி ஒரு சிக்ஸர் அடித்தார்.

20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்தது. ரெய்னா 54 ரன்களுடனும், தோனி 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

சன்ரைசர்ஸ் அணி தரப்பில் புவனேஷ்குமார், ராஷித்கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ராஷித்கான் 4 ஓவர்கள் வீசி 49 ரன்கள் வழங்கினார்.

கடைசி 10 ஓவர்களில் 129

ஒருகட்டத்தில் 10 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் சேர்த்திருந்த சிஸ்கே அணி, அடுத்த 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 129 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் மைதானத்தில் கடந்த 3 ஐபிஎல் சீசனில் சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 148 ரன்கள் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏமாற்றிய தொடக்கம்

183 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. அறிமுக வீரர் ரிக்கி புயி, வில்லியம்ஸன் களத்தில் இறங்கினர். சிஸ்கே பந்துவீச்சாளர் சாஹர் தனது துல்லியத்துடன் கூடிய லென்த்தில் வீசி, முதல் ஓவரில் புயிக்கு படம் காட்டினார். 5-வது பந்தில் புயி ரன் ஏதும் சேர்க்காமல் பர்ஸ்ட் ஸ்லிப்பில் நின்றிருந்த வாட்ஸனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்ற புயி, சர்வதேச அனுபவம் இல்லாதவர். அவரைத் தொடக்க வீரராக களமிறக்கி ஆடவைத்தது மிகப்பெரிய தவறாகும். அதற்கு தண்டனை முதல் ஓவரிலேயே கிடைத்துவிட்டது.

அடுத்து பாண்டே களம் புகுந்தார். முதல் ஓவரில் ரன் ஏதும் கொடுக்காமல் மெய்டன் விக்கெட் வீழ்த்தினார் சாஹர்.

தாக்கூர் வீசிய 2-வது ஓவரில் வில்லியம்ஸன் 2 பவுண்டரிகள் அடித்து அணிக்கு ரன்கள் சேர்த்தார். சாஹர் வீசிய 3-வது ஓவரின் முதல்பந்தில் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து பாண்டேவும் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.

 

விக்கெட் சரிவு

இரு முக்கியமான விக்கெட்டுகள் சன்ரைசர்ஸ் அணி தொடக்கத்திலேயே இழந்தது பெரும் இக்கட்டான நிலைக்கு தள்ளியது.

அடுத்து வந்த தீபக் ஹூடா, வில்லியம்சனுடன் இணைந்தார். ஹூடா நிதானம் காட்ட வில்லியம்சன் அடித்து ஆடினார். சாஹர் வீசிய 5-வது ஓவரில் ஹூடாவும் ஒரு ரன்னில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால், சன்ரைசர்ஸ் அணி விக்கெட் சரிவில் சிக்கி விழிபிதுங்கி நின்றது. சன்ரைசர்ஸ் அணி பவர்ப்ளே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து, 40 ரன்கள் சேர்த்தது.

4-வது விக்கெட்டுக்கு சஹிப் அல்ஹசன், வில்லியம்சனுடன் இணைந்தார். வில்லியம்சன் அவ்வப்போது சிக்ஸர்களும், பவுண்டரிகளும் அடித்து ரன் விகிதத்தை உயர்த்தினார்.

சர்மா வீசிய 10-வது ஓவரில் நிதானமாக பேட் செய்துவந்த சஹிப் அல்ஹசன் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 51 ரன்கள் சேர்த்தனர்.

வில்லியம்சன் போராட்டம் வீண்

அடுத்து வந்த யூசுப் பதான், வில்லியம்சனுடன் சேர்ந்தார். சர்மா வீசிய 15-வது ஓவரில் வில்லியம்சன் 3 சிக்சர்களை அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். பதான் தன் பங்கிற்கு பிராவோவின் ஓவரில் இரு சிக்ஸர்கள் விளாசினார். இதனால், ஆட்டத்தின் முடிவு மதில் மேல் பூனையாக இருந்தது.

பிராவோ வீசிய 18-வது ஓவரில் திருப்புமுனை ஏற்பட்டது. நங்கூரமிட்டு பேட் செய்த வில்லியம்சன் 84 ரன்களில் (51 பந்துகள்) ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர், 5 பவுண்டரி அடங்கும்.

தாக்கூர் வீசிய 19-வது ஓவரில் பதான் 45 ரன்களில் (27 பந்துகள்) பெவிலியன் திரும்பினார். இவரின் கணக்கில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கும்.

போராடி தோல்வி

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. ராஷித்கான், சாஹா களத்தில் இருந்தனர். பிராவோ வீசிய பந்தில் சாஹா ஒரு பந்தை வீணாக்கினார். 2-வது பந்தில் 2 ரன்களும், 3-வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்து ராஷித்கானிடம் கொடுத்தார். சரியாக வாய்ப்பை பயன்படுத்திய ராஷித்கான் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்ததால் டென்ஷன் எகிறியது.

கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராஷித்கான் ஒரு ரன் எடுக்க சன்ரைசர்ஸ் போராடி தோல்வி அடைந்தது.

20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது. ராஷித்கான் 17 ரன்களிலும், சாஹா 5 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் சாஹர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x