Published : 11 May 2024 09:35 AM
Last Updated : 11 May 2024 09:35 AM

“நீங்கள் செங்கோட்டையில் கொடி ஏற்றவில்லை சஞ்சீவ் கோயங்கா!” - ஷமி ஆவேசம்

ஷமி | உள்படம்: சஞ்சீவ் கோயங்கா மற்றும் கே.எல்.ராகுல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 167 ரன்கள் இலக்கை 10 ஓவர்களுக்குள் சேஸ் செய்து 10 விக்கெட்டுகளில் லக்னோவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்துக்கு பிறகு லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுலிடம் மிகவும் கோபமாக பேசிய காட்சிகள் வெளியாகின.

இதையடுத்து பலதரப்பிலிருந்தும் சஞ்சீவ் கோயங்காவுக்கு விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இப்போது முகமது ஷமி, கோயங்காவின் நடத்தையை ‘வெட்கக்கேடானது’ என்று சாடியுள்ளார்.

ஷமி இது தொடர்பாகக் ஆங்கில ஊடகப் பேட்டியில் கூறியதாவது: கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சியிலும் நேரிலும் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். உங்கள் நடத்தை முன்னுதாரணமாக இருக்க வேண்டுமே தவிர, இப்படி இருக்கக் கூடாது. கேமரா முன்பு இப்படிப்பட்ட சம்பவம் நடக்கிறது என்றால், திரையில் உங்களது ரியாக்‌ஷன் தெரிகிறது என்றால் அது வெட்கக்கேடு.

எதற்கும் ஒரு எல்லை உண்டு. பேசுவதற்கென்று ஒரு முறை இருக்கிறது. இது தவறான அறிகுறியையே தெரிவிக்கிறது. வீரர்களுக்கு மரியாதை இருக்கிறது என்பது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அவரும் உரிமையாளர் என்ற முறையில் மரியாதைக்குரியவர்தான். திடீரென நீங்கள் பேசி விட முடியாது. தடாலடியாக அனைவரது முன்னிலையிலும் ஒரு கேப்டனை அப்படி கையாள முடியாது.

இதைச் செய்வதற்கு பல முறைகள் உள்ளன. ஓய்வறையிலோ, விடுதியிலோ தனிப்பட்ட முறையில் இப்படிச் செய்திருந்தால் கூட பரவாயில்லை. களத்தில் கோடிக்கணக்கானோர் முன்னிலையில் அவர் தன்னை இப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கிறது? இப்படி நடந்து கொண்டதன் மூலம் நீங்கள் ஒன்றும் செங்கோட்டையில் கொடி ஏற்றி விடவில்லை சஞ்சீவ் கோயங்கா!

கே.எல்.ராகுல் ஒரு கேப்டன், சாதாரணப்பட்ட வீரர் அல்ல. உங்கள் கேப்டன். அணியாக விளையாடும் ஆட்டம் இது. ஒரு நாளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தோல்விகள் சகஜம். நல்ல நாளோ, மோசமான நாளோ, கடைசியில் வீரர்கள் மதிக்கப்பட வேண்டும்.

ஆட்டத்தில் நிறைய கணங்களில் கோபங்கள் எழும். வீரர்களும் ஒருவர் மீது ஒருவர் சாடிக்கொள்வர். இது எந்த விளையாட்டிலும் நடக்கக் கூடாது, ஆனால் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு வீரர் இன்னொரு வீரரிடம் பேசுகிறார் என்பது வேறு. ஆனால், வெளியிலிருந்து ஒருவர் வீரரிடம் விவாதம் செய்கிறார் என்பது வேறு. நாம் பார்ப்பதை வைத்து இப்படி நடந்திருக்கலாம் என்று யூகிக்கிறோம். கோயங்கா என்ன பேசினார் என்பதை கே.எல்.ராகுல் சொன்னால்தான் தெரியும். எது எப்படியிருந்தாலும் இப்படிப்பட்ட எதிர்வினைகளுக்கு விளையாட்டில் இடமில்லை” என அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x