Published : 04 Apr 2018 08:35 AM
Last Updated : 04 Apr 2018 08:35 AM

இந்தியாவின் பதக்க வேட்டையாளர்கள்

21

-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் இன்று தொடக்க விழாவுடன் கோலாகலமாக தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா துப்பாக்கி சுடுதல், தடகளம், பாட்மிண்டன், குத்துச்சண்டை, மல்யுத்தம், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல் ஆகியவற்றில் பதக்கங்களை குவிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இது பற்றிய ஓர் பார்வை...

துப்பாக்கி சுடுதல்: காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா எப்போதுமே 2-வது இடத்தை பிடித்து வந்துள்ளது. இதனால் இம்முறையும் பதக்க வேட்டைக்கு பஞ்சம் இருக்காது.

ஹீனா சித்து: பஞ்சாப்பை சேர்ந்த வீராங்கனையான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 3 தங்கப் பதக்கங்களை வேட்டையாடிய நிலையில் தற்போது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கிறார். 25 மீட்டர் பிஸ்டல் மற்றும் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் பங்கேற்கிறார்.

மனு பாகர்: 16 வயதான பள்ளி மாணவியான இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார். காமன்வெல்த் தொடரில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் கலந்து கொள்கிறார்.

ஜிது ராய்: 30 வயதான இவர் ராணுவ வீரராக உள்ளார். கடந்த முறை காமன்வெல்த் தொடரில் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இம்முறை அதே பிரிவுடன், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும் தங்கப் பதக்கம் கைப்பற்றும் முனைப்புடன் உள்ளார்.

தடகளம்: பல்வேறு போட்டிகளை உள்ளடக்கிய தடகளத்தில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா தலா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தது.

நீரஜ் சோப்ரா: ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா ஜூனியர் பிரிவில் உலக சாதனை படைத்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் நடைபெற்ற சீனியர் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி சுற்றுக்கு தகுதி பெறத் தவறினார். அதிக எதிர்பார்ப்பே இவரது சறுக்கல்களுக்கு காரணமாகவும் அமைகிறது என்ற கருத்தும் உள்ளது.

சீமா பூனியா: வட்டு எறிதல் வீராங்கனையான சீமா பூனியா 2014-ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 34 வயதான இவர், 61.05 மீட்டர் தூரம் வட்டை எறியும் திறன் கொண்டவர். கடந்த மாதம் நடைபெற்ற பெடரேஷன் கோப்பையில் சாதனை படைத்திருந்தார்.

தேஜஸ்வின் சங்கர்: 19 வயதான இவர், உயரம் தாண்டுதல் வீரர் ஆவார். கடந்த மாதம் நடைபெற்ற பெடரேஷன் கோப்பையில் தேசிய சாதனை படைத்துள்ளார். மேலும் 2.26 மீட்டர் உயரத்தில் இருந்து 2.28 மீட்டர் உயரம் தாண்டும் அளவுக்கு தனது திறனை மேம்படுத்திக் கொண்டுள்ளார். கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் 2.28 உயரமே தாண்டியிருந்தார். இதனால் தேஜஸ்வின் சங்கர் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களில் ஒருவராக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாட்மிண்டன்: கிளாஸ்கோ காமன்வெல்த் தொடரில் இந்தியா பாட்மிண்டனில் ஒரு தங்கம் உட்பட 4 பதக்கங்களை கைப்பற்றியிருந்தது. இம்முறை நட்சத்திர வீரர், வீராங்கனைகள் களமிறங்குவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பி.வி.சிந்து: ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து நிச்சயம் பதக்கம் வெல்பவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். கடந்த முறை வெண்கலப் பதக்கம் கைப்பற்றிய சிந்து, இம்முறை தங்கப் பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளார்.

சாய்னா நெவால்: 2010-ம் ஆண்டு காமன்வெல்த் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற சாய்னா நெவால், கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள சாய்னா சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இவர் மீதும் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இல்லை.

கிடாம்பி ஸ்ரீகாந்த்: கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற காஷ்யப் இம்முறை காயம் காரணமாக பங்கேற்கவில்லை. எனினும் சிறந்த பார்மில் உள்ள கிடாம்பி ஸ்ரீகாந்த் மீது அதிக நம்பிக்கை உள்ளது. கடந்த முறை கால் இறுதியுடன் வெளியேறிய இவர், இம்முறை பதக்கம் வெல்வதில் தீவிர முனைப்புடன் உள்ளார்.

குத்துச்சண்டை: கடந்த முறை குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு ஒரு தங்கப் பதக்கம் கூட கிடைக்கவில்லை. இம்முறை வீரர்கள் அறையில் மருந்து செலுத்தப் பயன்படுத்தப்படும் ஊசி கைப்பற்றப்பட்டுள்ளது பெரிய சர்ச்சையை உருவாக்கி உள்ள போதிலும் பதக்கம் வெல்லக்கூடிய போட்டியாளர்களாக இந்திய நட்சத்திரங்கள் உள்ளனர்.

எம்சி மேரி கோம்: இந்திய அளவில் மட்டும் அல்ல உலக அரங்கிலும் மகத்தான வீராங்கனையான வலம் வருபவர் 35 வயதான வீராங்கனையான மேரி கோம். 5 முறை உலக சாம்பியன் பட்டம் மற்றும் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள இவர், 48 கிலோ எடை பிரிவில் அறிமுக வீராங்கனையாக களமிறங்குகிறார்.

விகாஷ் கிரிஷன்: உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 4 இந்திய வீரர்களில் இவரும் ஒருவர். கடந்த பிப்ரவரி மாதம் பல்கேரியாவில் நடைபெற்ற தொடரில் தங்கப் பதக்கம் வென்ற உற்சாகத்தில் காமன்வெல்த் தொடரில் கலந்து கொள்கிறார். விகாஷ் கிரிஷன் அறிமுக வீரராக 75 கிலோ எடை பிரிவில் மோதுகிறார்.

அமித் பங்கல்: லைட் பிளைவெயிட் 49 கிலோ எடை பிரிவில் களமிறங்குகிறார் அமித் பங்கல். இவருக்கும் இது அறிமுக தொடர்தான். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பல்கேரியா போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

மல்யுத்தம்: காமன் வெல்த் தொடரில் மல்யுத்தத்தில் இந்தியா எப்போதும் 2-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டு வந்துள்ளது. இதனால் இம்முறையும் இந்தத் பிரிவில் இந்திய போட்டியாளர்கள் பதக்க வேட்டையை நிகழ்த்தக்கூடும்.

சுஷில் குமார்: கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சுஷில் குமார், பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு இம்முறை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள சுஷில் குமார் 74 கிலோ எடை பிரிவில் களமிறங்குகிறார்.

சாக்ஷி மாலிக்: ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் 62 கிலோ பிரிஸ்டைல் பிரிவில் கலந்து கொள்கிறார். கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் இம்முறை தங்கப் பதக்கம் வெல்ல காத்திருக்கிறார்.

வினேஷ் போகத்: கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகத், ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது பெரிய அளவில் காயம் அடைந்தார். எனினும் காயத்தில் இருந்து மீண்டு வந்து ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

ஸ்குவாஷ்: கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஜோடி தங்கப் பதக்கம் வென்றிருந்தது. இம்முறை இவர்கள், ஒற்றையர் பிரிவிலும் பதக்கம் வெல்லும் முனைப்புடன் உள்ளனர். ஆடவர் பிரிவில் சவுரவ் கோஷல் நம்பிக்கை அளிப்பவராக உள்ளார்.

பளு தூக்குதல்: உலக சாம்பியனும், காமன்வெல்த் போட்டியில் சாதனை படைத்துள்ள வருமான மீராபாய் சானு, இம்முறை பதக்கம் வெல்லக்கூடியவ ஒருவராக கருதப்படுகிறார்.

டேபிள் டென்னிஸ்: ஆடவர் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் சரத் கமல் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. காமன்வெல்த் தொடரில் இதுவரை 3 தங்கப் பதக்கங்களை சரத் கமல் வென்றுள்ளார். இதில் 2 பதக்கங்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியின்போது வென்றவை ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x