Published : 24 Apr 2018 09:56 AM
Last Updated : 24 Apr 2018 09:56 AM

வெற்றி நெருக்கடியில் மும்பை அணி: சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரில் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான மும்பை அணி 5 ஆட்டங்களில் விளையாடி 4 தோல்விகளுடன் வெறும் 2 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இதனால் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கேப்டன் ரோஹித் சர்மா, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வருவதற்கான வழிகளை கண்டறிய வேண்டிய நிலையில் உள்ளார். இந்த சீசனில் தொடர்ச்சியாக 3 தோல்விகளை பெற்ற மும்பை அணி அதன் பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக வெற்றி பெற்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது.

ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம் மீண்டும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளது மும்பை அணி. பிளே ஆப் சுற்றுக்கு முன்னதாக மும்பை அணிக்கு இன்னும் 9 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. இதில் குறைந்தது 7 ஆட்டங்களிலாவது வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்ப்பை மேம்படுத்திக் கொள்ள முடியும். எனவே ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற வேண்டியது அவசியமாகி உள்ளது.

தொடக்க வீரராக முன்னேற்றம் கண்டுள்ள சூர்யகுமார் யாதவ் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார். இந்த சீசனில் அவர், இதுவரை 196 ரன்கள் சேர்த்துள்ளார். மற்றொரு தொடக்க வீரரான எவின் லீவிஸூம் சிறந்த பார்மில் உள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 94 ரன்கள் விளாசிய ரோஹித் சர்மா அதன் பின்னர் சோபிக்கத் தவறினார். நேற்று முன்தினம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரன் அவுட் முறையில் எளிதாக தனது விக்கெட்டை தாரைவார்த்தார். இந்த ரன் அவுட் ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றியது. இதனால் அணிக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக ரோஹித் சர்மா பெரிள அளவிலான இன்னிங்ஸ் விளையாட வேண்டிய கட்டத்தில் உள்ளார்.

கெய்ரன் பொலார்டு, கிருனல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்த சீசனில் இதுவரை பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தாததும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதிலும் பொலார்டு இதுவரை 54 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் தனது இடத்தை இழக்கக்கூடும். மும்பை அணியின் பந்து வீச்சு இம்முறை பலவீனம் அடைந்துள்ளது. உலகத் தரம் வாய்ந்த வேகப் பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது போன்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அதிக ரன்களை தாரைவார்த்தார். 19-வது ஓவரை வீசிய அவர் 18 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். இதற்கு முந்தைய ஓவரை வீசிய முஸ்டாபிஸூர் ரஹ்மான் 15 ரன்களை தாரை வார்த்தார்.

இந்த ஒரு ஓவர்களும்தான் மும்பை அணியிடம் இருந்து ராஜஸ்தான் அணி வெற்றி கனியை பறித்ததில் பிரதான பங்கு வகித்தது. மற்றொரு வேகப் பந்து வீச்சாளரான மெக்லீனகனும் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பது அணியின் பந்து வீச்சை மேலும் பலவீனமாக்குவதாக உள்ளது. இதனால் பந்து வீச்சில் மும்பை அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

அதேவேளையில் இந்த சீசனை தொடர்ச்சியாக 3 வெற்றிகளுடன் தொடங்கிய ஹைதராபாத் அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளது. 6 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள அந்த அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் கிங்ஸ்லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி கண்டிருந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் சிறந்த பார்மில் உள்ளார். 5 ஆட்டங்களில் 230 ரன்கள் சேர்த்துள்ள அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். காயம் காரணமாக சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்காத ஷிகர் தவண் முழு உடல் தகுதியை எட்டியுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும்.

5 ஆட்டங்களில் வெறும் 62 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள விருத்திமான் சாஹாவுக்கு பதிலாக ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி களமிறக்கப்படக்கூடும். சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் யூசுப் பதான் 27 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து பார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

தீபக் ஹூடா, மணீஷ் பாண்டே ஆகியோரும் மட்டையை சுழற்றும் பட்சத்தில் மும்பை அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், ரஷித் கான் ஆகியோரை உள்ளடக்கிய பந்து வீச்சு கூட்டணி மும்பை அணிக்கு நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x