Published : 21 Apr 2018 01:30 AM
Last Updated : 21 Apr 2018 01:30 AM

இது சென்னை சூப்பர் கிங்ஸ், புனே சூப்பர் கிங்ஸ் அல்ல: வெற்றிக்குப் பிறகு கேப்டன் தோனி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ‘கேக்வாக்’ வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் வெற்றி குறித்தும், ரசிகர்கள் குறித்தும் புனே மைதானம் குறித்தும் பேசினார்.

ரஹானேயால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ஷேன் வாட்சனின் புரட்டல் சதத்துடன் 204 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்திலிருந்தே நிகர ரன் விகிதத்துக்கு ஆடுவது போல் ஆடி 140 ரன்களுக்குச் சுருண்டது.

இந்தப் போட்டி குறித்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் தோனி கூறும்போது,

“பொதுவாக பின்னால் இருந்து வந்து வெற்றி பெறுவோம், இந்தப் போட்டியில் நாங்கள் முன்னிலை வகித்தோம், இது எங்களுக்கு அன்னியமாகத் தோன்றுகிறது. எங்களில் பலர் 30 வயதுக்கு மேற்பட்டவ்ர்கள் எனவே உடற்தகுதி மிக முக்கியம்.

அனுபவம் கைகொடுக்கும், எங்களிடம் நல்ல பீல்டர்கள் உள்ளனர், ஆனால் உடல் தகுதியில் சிறப்பாகத் திகழ வேண்டும். மைதான மாற்றத்தைப் பற்றி கூற வேண்டுமெனில் நான் இங்கு புனே அணிக்காக ஆடும்போது ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவளித்தனர், இப்போது அவர்கள் அளித்த ஆதரவுக்கு அவர்களுக்கு மீண்டும் எங்களால் திருப்பி அளிக்க முடிகிறது என்பது திருப்தி அளிக்கிறது.

ஆம் இது சென்னை சூப்பர் கிங்ஸ்தான் புனே சூப்பர் கிங்ஸ் அல்ல. ஆனால் 7வது போட்டி முடிவில் இங்கு அதிகம் மஞ்சளைப் பார்க்கலாம். பிட்சைப் பொறுத்தவரை நான் உறுதியாக இல்லை. பவுன்ஸ் கொஞ்சம் முன்னேபின்னே இருந்தது. ஒரு மாதிரியான பஞ்சு போன்ற பவுன்ஸ். பேக் ஆஃப் லெந்த் பந்துகளை அடிப்பது சில வேளைகளில் கடினம்.

இன்று பேட்ஸ்மென்கள் பவுலர்களுக்கு பணியை எளிதாக்கினர். 200 ரன்கள் எடுத்தது பவுலர்கள் பணியை குறைக்கிறது, ஆனாலும் லைன் அண்ட் லெந்த், வேகத்தைக் கூட்டுவது குறைப்பது என்று ஸ்பின்னர்கள் வித்தியாசமாகச் செய்து கொண்டுதான் இருக்க வேண்டும். விரட்டும் போது முதல் 6 ஓவர்கள் முக்கியம்.

பிட்ச் நன்றாக இருந்தால் எந்த அணியும் முதலில் பேட் செய்யத் தயங்காது” என்றார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x