கேண்டிடேட்ஸ் தொடரின் மிக இளவயது ‘சேலஞ்சர்’ - செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கேண்டிடேட்ஸ் தொடரின் மிக இளவயது ‘சேலஞ்சர்’ - செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
Updated on
1 min read

சென்னை: கேண்டிடேட்ஸ் தொடரில் சாதனை படைத்துள்ள செஸ் விளையாட்டு வீரர் டி.குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றார். மொத்தம் 9 புள்ளிகள் பெற்றுள்ள அவர் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் இந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் தொடரில் மிக இளம் வயதில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை டி.குகேஷ் படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் அவர் எட்டியுள்ளார்.

திங்கட்கிழமை நடைபெற்ற 14-வது சுற்று ஆட்டத்தில் டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுராவுடன் மோதினார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் ஆட்டத்தை டிரா செய்தார்.

இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் குகேஷுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வியத்தகு சாதனையைப் புரிந்துள்ள குகேஷ் அவர்களுக்கு எனது பாராட்டுகள்!. வெறும் 17 வயதில், கேண்டிடேட்ஸ் தொடரின் மிக இளவயது 'சேலஞ்சர்'-ஆக வரலாறு படைத்துள்ளார். பதின்பருவத்தில் இத்தகைய வெற்றி வெறும் முதல் வீரராகச் சாதித்துள்ளார். அடுத்து, டிங் லிரன் உடனான உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கான போட்டியிலும் அவர் வெற்றிவாகை சூடிட எனது வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in