Published : 19 Apr 2024 04:58 AM
Last Updated : 19 Apr 2024 04:58 AM

கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: 11-வது சுற்றில் விதித் குஜராத்தி, பிரக்ஞானந்தா தோல்வி

விதித் குஜராத்தி

டொராண்டோ: பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 11-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஃபேபியானோ கருனாவுடன் மோதினார்.

இந்த ஆட்டம் 40-வது காய் நகர்த்தலின்போது டிராவில் முடிவடைந்தது. மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி, ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சியுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் விதித் குஜராத்தி 67-வது காய் நகர்த்தலின்போது அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா 54-வது காய் நகர்த்தலின் போது அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுராவிடம் தோல்வி கண்டார். மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரோஸ்ஜா 24-வது காய் நகர்த்தலின் போது அஜர்பைஜான் கிராண்ட் மாஸ்டரான நிஜாத் அபாசோவை தோற்கடித்தார். 11 சுற்றுகளின் முடிவில் இயன் நெபோம்னியாச்சி 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

குகேஷ் 6.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஹிகாரு நகமுரா 6.5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். ஃபேபியானோ கருனா 6 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், அலிரேசா ஃபிரோஸ்ஜா 4.5 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், நிஜாத் அபாசோவ் 3 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும் உள்ளனர். இந்த தொடரில் இன்னும் 3 சுற்றுகளே உள்ளன.

மகளிர் பிரிவில் நடைபெற்ற 11-வது சுற்றில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, பல்கேரியாவின் நூர்கியுல் சலிமோவாவை தோற்கடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஆர்.வைஷாலி, ரஷ்யாவின் அலெக்ஸாண்ட்ரா கோரியாச்கினாவை வீழ்த்தினார்.

11 சுற்றுகளின் முடிவில் சீனாவின் டான் ஸோங்கி 7.5 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். இந்தியாவின் கொனேரு ஹம்பி 5.5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ஆர்.வைஷாலி 4.5 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x