Last Updated : 08 Apr, 2018 12:24 PM

 

Published : 08 Apr 2018 12:24 PM
Last Updated : 08 Apr 2018 12:24 PM

வெற்றிக்கு பொறுப்பேற்று பிராவோ விளையாடியது மகிழ்ச்சி: தோனி பெருமிதம்

 மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டிவைன் பிராவோ பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தெரிவித்தார்.

11-வது சீசன் ஐபிஎல் போட்டியில் முதல் ஆட்டம் மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் மும்பை அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் கடைசிப் பந்து மீதமிருக்கையில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஒருகட்டத்தில் 118 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், டிவைன் பிராவோ களத்தில் நின்று விளையாடி பந்துகளை நாலாபுறமும் சிக்சர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டார். இவரின் அதிரடி ஆட்டமே அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. 30 பந்துகளைச் சந்தித்த பிராவோ 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆட்டநாயகன் விருதையும் பிராவோ பெற்றார்.

இந்தப் போட்டியின் வெற்றிக்குப் பின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைக் காண ஒவ்வொரு ரசிகரும் காத்திருந்தார்கள். அதிலும் நாங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விளையாட வருகிறோம் என்பதால், எங்கள் மீது ஒரு விதமான எதிர்பார்ப்பு இருந்தது.

மும்பை மைதானத்தில் பார்வையாளர்கள் மிகவும் நன்றாக ஆதரவு கொடுத்தனர். அதிலும், எங்கள் அணியில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தபோதிலும், மனம் தளராமல் டிவைன் பிராவோ பேட் செய்ததும், வெற்றிக்கு பொறுப்பேற்று விளையாடியதையும் பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது.

எங்கள் அணியில் அனைத்து வீரர்களும் நன்றாகவே பேட்டிங் செய்தார்கள். ஆனால், இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்தப் போட்டியில் ஏராளமான சாதகமான விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறோம். பல திறமை வாய்ந்த வீரர்கள் அணியில் கலந்திருப்பது இன்னும் வலு சேர்க்கிறது. எங்கள் அணியில் வீரர்கள் காயம் அடையாமல் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்வோம். அணியில் உள்ள அனைவரும் முக்கியமானவர்கள்.''

இவ்வாறு தோனி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x