Published : 17 Apr 2024 06:20 AM
Last Updated : 17 Apr 2024 06:20 AM

குஜராத் - டெல்லி இன்று மோதல்

அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

இந்த ஆட்டத்தில் 72 ரன்கள் விளாசிய ஷுப்மன் கில்லிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த ஆட்டம்வெளிப்படக்கூடும். மேத்யூ வேட், அபினவ் மனோகர், விஜய் சங்கர், ஷாருக்கான் ஆகியோரும் பார்முக்கு திரும்பினால் அணி கூடுதல் வலுப்பெறும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிக்கட்ட ஓவர்களில் ராகுல் டெவாட்டியா, ரஷித் கான் ஆகியோர் மட்டை வீச்சில் சிறப்பாக செயல்பட்டிருந்தனர்.

இதில் ரஷித் கான் கடைசி பந்தில் பவுண்டரி விளாசியதன் காரணமாகவே வெற்றி சாத்தியமானது. இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் 7 விக்கெட்களை கைப்பற்றி உள்ள உமேஷ் யாதவ் தொடக்க வீரர்களில் விக்கெட்கள் கைப்பற்றி பலம் சேர்ப்பவராக உள்ளார். ஆனால் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுப்பது பலவீனமாக உள்ளது. ஸ்பென்சன் ஜான்சன், மோஹித் சர்மா ஆகியோரும் பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டும்.

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. கடைசியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த ஆட்டத்தில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 22 வயதான ஜாக் பிரேசர்-மெக்கர்க் 35 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதேபோன்று ரிஷப் பந்த் 24 பந்துகளில் 41 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். இவர்கள் இருவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.

கடைசி 3 ஆட்டங்களிலும் முறையே 18,10,8 ரன்களில் ஆட்டமிழந்த டேவிட் வார்னர் பார்முக்கு திரும்புவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். பந்து வீச்சை பொறுத்தவரையில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள குல்தீப்யாதவ், லக்னோ அணிக்கு எதிரான 3 விக்கெட்களை கைப்பற்றியதுடன் ரன் குவிப்பையும் வெகுவாக கட்டுப்படுத்தியிருந்தார். இன்றைய ஆட்டத்திலும் அவரிடம் இருந்து உயர்மட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும்.

தொடக்க ஓவர்களில் கலீல் அகமது, இஷாந்த் சர்மா பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். அதிக ரன்களை விட்டுக் கொடுக்கும் முகேஷ் குமார்எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாதது பின்னடைவாக கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x