Published : 16 Apr 2024 10:05 AM
Last Updated : 16 Apr 2024 10:05 AM

தெறிக்கவிடும் தினேஷ் கார்த்திக்... டாப் ஸ்கோரில் 10-ம் இடம், ஸ்ட்ரைக் ரேட்டிலோ நம்பர் ஒன்!

டி20 கிரிக்கெட்டை வேற லெவலுக்கு உயர்த்திய அணி என்றால் அது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தான். அன்று மும்பை இந்தியன்ஸை வறுத்தெடுத்து 277 ரன்களை விளாசினர். நேற்று சின்னசாமி ஸ்டேடியமே சிக்சர்கள் மழையில் நனையும் வண்ணம் 287 ரன்களைக் குவிக்க, ஆர்சிபியில் தினேஷ் கார்த்திக், சின்னசாமி ஸ்டேடியத்தில் பல கார்த்திகை தீபங்களை ஏற்றினார்.

35 பந்துகளில் 83 ரன்களை விளாசிய தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரிகள் 7 சிக்சர்களை அதில் அடித்தார். சன் ரைசர்ஸின் டிராவிஸ் ஹெட்டிற்கோ, ஹென்றிக் கிளாசனுக்கோ, அபிஷேக் சர்மாவுக்கோ தான் சளைத்தவன் அல்ல என்று ஆடினார் தினேஷ் கார்த்திக். பல ஆண்டுகள் 360 டிகிரி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸை கண்டு களித்த ஐபிஎல் ரசிகர்களுக்கு இப்போது தினேஷ் கார்த்திக்தான் புதிய ஏ.பி.டிவில்லியர்ஸ்.

உண்மையில் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட வேண்டியவர்தான் தினேஷ். ஏனெனில் ரிஷப் பண்ட் இப்போதுதான் வந்துள்ளார், அதற்குள் ஹை பிரஷர் ஆட்டங்களை அவருக்கு அளித்து அவர் தோல்வி கண்டால் அவரது மனநிலை ஆட்டம் கண்டு விடும், எனவே அவரை டெஸ்ட் மேட்ச் பொக்கிஷமாகக் கருதிப் பாதுகாத்து டி20 உலகக் கோப்பையில் தினேஷ் கார்த்திக்கிற்கு இன்னொரு வாய்ப்புக் கொடுத்து பார்க்கலாம்.

ஏனெனில் மே.இ.தீவுகளில் நடைபெறுவதால் கிட்டத்தட்ட இந்தியப் பிட்ச்கள் போல்தானிருக்கும். கடந்த முறை ஆஸ்திரேலிய பிட்ச்கள் தினேஷ் கார்த்திக்கிற்கு பிடித்தமானதாக அமையவில்லை.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் கோலியின் சுயநல இன்னிங்ஸ்களை விடுத்துப் பார்த்தால் தினேஷ் கார்த்திக்கின் இன்னிங்ஸ்தான் கோலியை விடவும் ஒரு படிமேலே நிற்கிறது. அதாவது இன்றைய டி20 தேவைகளுக்கு ஏற்ப ஆர்சிபியில் இவரால் மட்டும்தான் ஆட முடிகிறது.

2021 ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் 223 ரன்கள், 2022 கொஞ்சம் அதிரடி கூடி 16 போட்டிகளில் 330 ரன்கள். 2023 தேறவில்லை 13 போட்டிகளில் 140. 2024- இது வரை 7 போட்டிகளில் 226 ரன்கள். அதுவும் சந்தித்த பந்துகள் 110 பந்துகள்தான் ஸ்ட்ரைக் ரேட் 205.45.

நடப்பு ஐபிஎல் தொடரில் டாப் 10-ல் உள்ள வீரர்கள் விவரம்: கோலி 361 ரன்கள், ரியான் பராக் 284 ரன்கள், சஞ்சு சாம்சன் 264 ரன்கள், ரோஹித் சர்மா 261 ரன்கள், கில் 255 ரன்கள், கிளாசன் 253 ரன்கள், ஷிவம் துபே 242, டிராவிஸ் ஹெட் 235, ஃபாப் டு பிளெசிஸ் 232, தினேஷ் கார்த்திக் 226.

இதில் விசேஷம் என்னவெனில் டாப் 10 வீரர்களில் 10 நிலையில் இருக்கும் தினேஷ் கார்த்திக்கின் ஸ்ட்ரைக் ரேட் 205.45 என்று நம்பர் ஒன் ஆக உள்ளது. டாப்பில் பவர் ப்ளெ போன்ற வசதிகள் இருந்தும் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 147 தான். காட்டடி மன்னன் ட்ராவிஸ் ஹெட்டின் ஸ்ட்ரைக் ரேட் 199 தான். தினேஷ் கார்த்திக் இத்தகைய பெரிய ஹிட்டர்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

இன்னும் சொல்லப்போனால் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை இதுவரை எடுத்துள்ள டாப் 20 வீரர்களின் ஸ்ட்ரைக் ரேட்டை விட தினேஷ் கார்த்திக் ஸ்ட்ரைக் ரேட் அதிகம், ஆகவே டாப் 20-யிலும் இவதான் நம்பர் ஒன்.

ஆனால் தினேஷ் கார்த்திக்கை வெகுசிலரே கொண்டாடுகின்றனர். வெகுஜன சினிமாவின் போக்கை இதற்கு ஒரு ஒப்புமையாகக் கூற வேண்டுமென்றால் ரஜினி முடியை ஸ்டைலாக ஒதுக்கிக் கொண்டு சிகரெட்டைத் தூக்கிப் போட்டு பிடித்தே ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்தவர், கமல்ஹாசன் பல வேடங்களில் பல கடினமான ரோல்களில் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகப் பட்டாளத்தை ஈர்த்தவர்.

ஆகவே, ஒரு பொருந்தாத ஒப்புமை என்றாலும் சுவாரஸ்யமான ஒப்புமையாக தோனி ரஜினி என்றால் தினேஷ் கார்த்திக் கமல்ஹாசன் என்று சொல்லலாம். தினேஷ் மாங்கு மாங்கென்று பிரமாத இன்னிங்ஸ்களை ஆடினாலும் தோனியின் 3 சிக்சர்கள் அளவுக்கு தினேஷ் கார்த்திக் பேசப்படுவதில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x