Published : 15 Apr 2024 04:43 PM
Last Updated : 15 Apr 2024 04:43 PM

“வெளியே சிரிப்பு... உள்ளே வருத்தம்!” - ஹர்திக் மனநிலையை விவரித்த கெவின் பீட்டர்சன்

மும்பை: “ஹர்திக் பாண்டியா மகிழ்ச்சியாக இருப்பதுபோல தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார். ஆனால், அவர் உண்மையில் வருத்தத்தில் இருக்கிறார்” என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் என்ற அறிவிப்பு வெளியானது முதல் ரோகித் ரசிகர்கள், அபிமானிகள், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் என பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அது தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்களின் இந்த முழக்கங்கள், ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் கெவின் பீட்டர்சன். நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் வீழ்ந்தது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஹர்திக் வீசிய கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசியிருந்தார் தோனி. அப்போது தோனியின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஹர்திக் தடுமாறினார்.

இதை வைத்து கெவின் பீட்டர்சன் பேசுகையில், “டாஸ் போட வரும்போதும், பேட்டிங் செய்ய வரும்போதும் ஹர்திக் பாண்டியா அதிகமாக சிரித்த முகத்துடன் இருக்கிறார். மகிழ்ச்சியாக இருப்பது போல தன்னைக்காட்டி கொள்ள முயற்சிக்கிறார். ஆனால், உண்மையில் அவர் மகிழ்ச்சியாக இல்லை. வருத்தத்தில் உள்ளார். ரசிகர்கள் அவருக்கு எதிராக முழக்கமிடுவது போன்ற விஷயங்கள் ஹர்திக்கை மிகவும் பாதித்துள்ளது.

அவரது ஆட்டத்தையும், கேப்டன்சியையும் பாதித்துள்ளது. நானும் இதேபோன்ற சூழ்நிலையில் இருந்துள்ளேன். அவர் இப்படி நடத்தப்படுவதை விரும்பவில்லை. இதுபோன்ற விஷயங்கள் ஹர்திக் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால், பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x