Published : 14 Apr 2024 11:34 PM
Last Updated : 14 Apr 2024 11:34 PM

MI vs CSK | இன்னிங்ஸை பற்ற வைத்த பதிரனா: மும்பையை வீழ்த்தியது சென்னை!

பதிரனா

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நடப்பு ஐபிஎல் சீசனின் 29-வது லீக் போட்டியில் 207 ரன்களை விரட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்தப் போட்டியில் சிஎஸ்கே பவுலர் பதிரனா சிறப்பாக பந்து வீசி இருந்தார். 4 விக்கெட்களை வீழ்த்தி சென்னை அணியின் வெற்றிக்கு அவர் உதவினார். நடப்பு சீசனில் அவே (வெளியூர்) போட்டியில் சிஎஸ்கே பதிவு செய்துள்ள முதல் வெற்றி இது. ரோகித் சர்மா இதில் சதம் விளாசி இருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அந்த கூட்டணியை சிஎஸ்கே பவுலர் பதிரனா பிரித்தார். இஷான் கிஷனை 8-வது ஓவரில் 23 ரன்களில் வெளியேற்றினார். அதே ஓவரில் சூர்யகுமார் யாதவை டக் அவுட் செய்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் எல்லை கோட்டுக்கு அருகே சிறப்பாக செயல்பட்டு அவரது கேட்ச்சை எடுத்தார். அந்த ஓவர் சிஎஸ்கேவுக்கு திருப்புமுனையாக அமைந்தது.

மறுமுனையில் 30 பந்துகளில் அரைசதம் கடந்தார் ரோகித். அதே நேரத்தில் திலக் வர்மாவுடன் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 31 ரன்கள் எடுத்திருந்த திலக் வர்மாவை பதிரனா 14-வது ஓவரில் வெளியேற்றினார். 16 மற்றும் 17-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ரொமாரியோ ஷெப்பர்ட் களத்துக்கு வந்தார்.

கடைசி மூன்று ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் ரொமாரியோ ஷெப்பர்டை போல்ட் செய்தார் பதிரனா. தொடர்ந்து முகமது நபி பேட் செய்ய வந்தார். கடைசி ஓவரில் ரோகித் சர்மா சதம் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது மும்பை. ரோகித், 63 பந்துகளில் 105 ரன்கள் எடுத்திருந்தார். நபி, 4 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

4 ஓவர்கள் வீசிய பதிரனா, 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். சென்னை அணிக்கு சரியான நேரத்தில் விக்கெட் வீழ்த்தி கொடுத்திருந்தார் அவர். நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றுள்ளது சிஎஸ்கே.

முதல் இன்னிங்ஸ்: மும்பை - வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரச்சின் ரவீந்திரா மற்றும் ரஹானே இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். 8 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே, 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் ருதுராஜ் களத்துக்கு வந்தார். பவர்பிளே ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்திருந்தது சிஎஸ்கே.

8-வது ஓவரில் 21 ரன்கள் எடுத்த நிலையில் ரச்சின் ரவீந்திரா வெளியேறினார். அவரை மும்பை அணியின் ஸ்ரேயஸ் கோபால் வெளியேற்றினார். தொடர்ந்து ஷிவம் துபே களத்துக்கு வந்தார். ஹர்திக் வீசிய 10-வது ஓவரில் மூன்று பவுண்டரிகளை துபே விளாசினார். 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது சிஎஸ்கே. 13-வது ஓவரில் அரைசதம் கடந்தார் ருதுராஜ். ரொமாரியோ ஷெப்பர்ட் வீசிய 14-வது ஓவரில் 22 ரன்கள், ஆகாஷ் மெத்வால் வீசிய 15-வது ஓவரில் 17 ரன்கள் எடுக்கப்பட்டது.

28 பந்துகளில் அரைசதம் கடந்தார் துபே. 40 பந்துகளில் 69 ரன்கள் எடுத்த ருதுராஜ் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை ஹர்திக் பாண்டியா கைப்பற்றினார். ஹர்திக் வீசிய 16-வது ஓவரில் 1 விக்கெட் கைப்பற்றி 2 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். 5-வது பேட்ஸ்மேனாக களம் கண்ட மிட்செல் இன்னிங்ஸை நிதானமாக அணுகினார். அடுத்த மூன்று ஓவர்களில் 29 ரன்கள் எடுக்கப்பட்டது.

14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த மிட்செல், கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரை ஹர்திக் வீசி இருந்தார். அடுத்ததாக தோனி களம் கண்டார். அவர் எதிர்கொண்ட முதல் மூன்று பந்துகளும் சிக்ஸர். அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அதோடு சென்னை சூப்பர் கிங்ஸின் பேட்டிங் இன்னிங்ஸ் முடிந்தது. 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார் தோனி. இறுதி வரை ஆடிய துபே 38 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார்.

மும்பை அணிக்காக 3 ஓவர்கள் வீசிய முகமது நபி 19 ரன்கள் கொடுத்திருந்தார். பும்ரா, 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்திருந்தார். கடைசி ஓவரில் 26 ரன்கள் கொடுத்திருந்தது மும்பை. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x