Published : 10 Apr 2024 05:04 AM
Last Updated : 10 Apr 2024 05:04 AM

கேப்டனாக பேட்டிங் செய்வது முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை: சொல்கிறார் ருதுராஜ் கெய்க்வாட்

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. 138 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே 17.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 14 பந்துகளை மீதும் வைத்து 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிஎஸ்கேவுக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் சேர்த்தார்.

சுழலுக்கு சாதகமாக அமைந்திருந்த இந்த ஆடுகளத்தில் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக செயல்பட்டு 3 விக்கெட்களை வீழ்த்தியதுடன் கொல்கத்தா அணியின் ரன்குவிப்பை வெகுவாககட்டுப்படுத்தினார். அதேவேளையில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய துஷார் தேஷ்பாண்டே இறுதிக்கட்ட ஓவர்களில் ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோரை பெரிய அளவில் ரன்கள் குவிக்க விடாமல் வெளியேற்றினார்.

போட்டி முடிவடைந்ததும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:

2022-ம் ஆண்டில் தோனி என்னிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது, ‘அநேகமாக அடுத்த ஆண்டு (2023-ம் ஆண்டு) இல்லை, ஆனால் அதன் பிறகு, நீங்கள் அணியை வழிநடத்துவதற்கான வாய்ப்பை பெறலாம், எனவே அதற்கு தயாராக இருங்கள் என கூறியிருந்தார். இதன் பிறகு நான் எப்போதும் தயாராகவே இருந்தேன்.

இது எனக்கு ஒன்றும் புதிதல்ல, ஆச்சரியமோ அதிர்ச்சியோ இல்லை. ஆட்டத்தின் போக்கை எப்படி கட்டுப்படுத்துவது என்று எனக்குத் தெரியும். ஆட்டம் எவ்வாறு செல்கிறது, எந்தவிதமான மாற்றம் செய்ய வேண்டும், அதை எப்போது செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் மகாராஷ்டிரா அணிக்காக இவற்றை நான் செய்துள்ளேன்.

கடந்த வருடம் ஒவ்வொரு ஆட்டமும் முடிந்த பின்னர் நானும், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கும் கேப்டன்சி குறித்து விவாதித்தோம். ஆட்டத்தின் சூழ்நிலையை நான் உணர்ந்த விதம், எந்த மாதிரியான மாற்றங்கள் செய்திருக்கலாம் என்பது குறித்து பேசியுள்ளோம். ஒவ்வொரு ஆட்டமும் முடிந்ததும் நானும், அவரும் நேருக்கு நேர் உரையாடி உள்ளோம். இது உதவியாக உள்ளது.

கேப்டன்சி ரீதியாக, நான் ஒரு குறிப்பிட்ட வகையான கதாபாத்திரமாக இருக்க விரும்பவில்லை. சிஎஸ்கேவின் கலாச்சாரத்தை தொடர விரும்புகிறேன். நாங்கள் பெற்ற வெற்றி மற்றும் நாங்கள் செய்து வரும் விஷயங்களில் ஒரு துளியை கூட மாற்ற நான் விரும்பவில்லை. எனது சொந்த முடிவுகளை எடுக்க விரும்புகிறேன், முடிந்தவரை வீரர்களுக்கு சுதந்திரம் கொடுக்க விரும்புகிறேன், ஏனென்றால் நான் சிஎஸ்கேவில் சேர்ந்ததிலிருந்து அதுதான் நடந்து வருகிறது.

கேப்டனாக பேட்டிங் செய்வது என்பது முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை. நான் எனது முதல் போட்டியில் விளையாடும் போதும், சிஎஸ்கேவுக்காக நான் அடித்த முதல் அரைசதமும் இதேபோன்ற சூழ்நிலையாகவே இருந்தது என்று நினைக்கிறேன். நாங்கள் 138 ரன்களை துரத்திக் கொண்டிருந்தோம், நான் எப்போதும் கடைசி வரை நிலைத்து நின்று இன்னிங்ஸை முடிக்க விரும்புவேன். நான் கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதில் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x