Published : 09 Apr 2024 10:18 AM
Last Updated : 09 Apr 2024 10:18 AM

கிரிக்கெட்டை ஒற்றைப் பரிமாணத்துக்கு ஒடுக்கும் சிஎஸ்கே, ஆர்சிபி!

டி20 என்ற குறைந்த ஓவர் வடிவமாகட்டும், 50 ஓவர்களாகட்டும் டெஸ்ட் போட்டியாகட்டும் ஒரு விளையாட்டு என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. இதை வெற்றிக்காக ஒற்றைப் பரிமாணத்துக்குக் குறுக்கக் கூடாது. சிஎஸ்கே வெற்றிகள் பெரும்பாலும் மிகவும் மந்தமான இடுப்புக்குக் கீழே மட்டுமே பந்துகள் வருமாறான ஸ்லோ பிட்சில்தான் நடந்தேறுகின்றன.

இதனால்தான் சிஎஸ்கே-யிடமிருந்து இந்திய அணிக்கு பெரிய பேட்டர்கள் யாரும் கிடைப்பதில்லை, அதேபோல் தமிழ்நாட்டிலிருந்து புதிய வீரர்கள், பல பரிமாண திறமையுடைய வீரர்கள் இருந்தும் சிஎஸ்கே அவர்களை ஏலத்தில் எடுப்பதில்லை என்பதெல்லாம் எதேச்சையானது அல்ல. எவ்வளவு தமிழக வீரர்களுக்கு சிஎஸ்கே வாய்ப்பளித்தது?

வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்ஷன், சாய் கிஷோர் ஆகியோரை ஏன் இந்த சிஎஸ்கே சீந்துவதில்லை என்பதெல்லாம் பெரிய கேள்வி. அதேபோல் பாபா அபாராஜித் குறைந்தது 4 சீசன்களாவது தோனியுடன் இருந்திருப்பார் ஒரு போட்டியில் வாய்ப்புப் பெற்றாரா? இல்லை.

நேற்றையப் போட்டியில் கொல்கத்தா என்னும் பவர் ஹவுஸ் என்பதைத் தெரிந்து கொண்டே மிகவும் ஸ்லோ ரகப் பிட்சைப் போட்டு வெல்வது என்பது சிஎஸ்கே தனது பவுலர்களுக்கோ, பேட்டர்களின் பல் பரிமாணத் திறமைகளை வளர்த்தெடுப்பதற்கோ அல்லது வெளிப்படுத்துவதற்கோ வாய்ப்பை ஏற்படுத்தாது.

இது போன்ற பிட்ச்களின் மூலம் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற திறமையான வீரர்கள் நல்ல கிரீன் டாப் பிட்சில், பவுலிங் பிட்சில் ஆடத் திறமையற்றவராகவே ஆக்கப்படுவார். வெறும் டி20 அதுவும் சிஎஸ்கேவுக்கு மட்டும் சோபிக்கும் ஒற்றைப்பரிமாண வீரராக்கப்படுவார்.

இதே கதிதான் ஷிவம் துபேவுக்கும் ஏற்படும் எப்படி டெவன் கான்வே போன்ற ஆகச்சிறந்த வீரர் ஒற்றைப் பரிமாணத்துக்குக் குறுக்கப்பட்டு அவர் சிஎஸ்கேவுக்கு ஆடிய பிறகு ஆடிய சர்வதேசப் போட்டிகளில் அவரது ஆட்டம் எப்படி சீரழிந்து போனது என்பதைப் பார்த்தாலே புரியும்.

ரச்சின் ரவீந்திரா அடுத்து நல்ல பிரமாதமான ஒரு வீரர். ஆனால் சிஎஸ்கேவுக்கு ஆடிவிட்டு சர்வதேச கிரிக்கெட் ஆடினால் அவரது ரிஃப்ளெக்ஸ் இத்தகைய ஸ்லோ பிட்ச்களுக்கு டெய்லரிங் செய்யப்பட்டு விடுவதால் சோபிக்க முடியாமலே போகும். இறுதிப் போட்டியை சென்னையில் வைத்ததிலிருந்தே பைனலில் ஒரு அணியின் இடம் உறுதி என்பதாகவே நாம் ஊகிக்க இடமளிக்கிறது.

தோனி என்னும் ஒரு சிங்கிள் ஆளுமைக்காக அவரது கிராண்ட்-கலா பிரியாவிடைக்காக கிரிக்கெட்டை ஒற்றைப் பரிமாணத்துக்குக் குறுக்குவது ஒடுக்குவது நல்லதல்ல.

நேற்று முஸ்தபிசுர் ரஹ்மான் இடது கை ஸ்பின்னர் போன்று பந்துகளை வீசுகிறார். வேகப்பந்து வீச்சாளர்களை ஸ்பின்னர்களாகவும் மட்டைப் பிட்சைப் போட்டு ஸ்பின்னர்களை வேகமாகவும் வீச வைத்து அவர்களின் ஸ்பின் திறமையைக் காலி செய்வதில் தான் இது போய்க்கொண்டிருக்கிறது.

பேட்டர்கள் இடுப்புக்குக் கீழ் வரும் பந்துகளின் மீது கத்தி வீசி வீராவேசம் காட்டுவது நல்ல பிட்ச்களில் ஆட முடியாத நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தி விடும். சிஎஸ்கேவுக்கு ஆடும் வீரர்களுக்கு இந்த அசாதக அம்சங்கள் எப்போதுமே உண்டு. ஆகவே தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள்தான் சிஎஸ்கேவின் கிரிக்கெட் மந்திராவுக்கு சரியான ஆட்களாக இருப்பார்கள்.

ஆர்சிபி இன்னொரு அணி. கோலி ஆடும் இன்னிங்ஸ்களையெல்லாம் அவரது ரசிகர்கள் பரமார்த்த குருவின் சீடர்கள் போல் கொண்டாடு கின்றனர். ஆனால் ஆர்சிபியின் தோல்விக்குக் காரணம், ஹை வோல்ட்டேஜ் வர்த்தக வீரர், அதி ஸ்பான்சர் வணிக வீரர் விராட் கோலி என்று நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.

ஏனெனில் கோலி ஆடும்போது எதிர்முனையில் ஆடும் வீரர்கள் அவருக்கு சிங்கிள் எடுத்து ஸ்டரைக் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படா கட்டளையாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது, இது தெரியாமல் சீடர்கள் கோலியைத் தவிர யாரும் ஆட மாட்டேன் என்கிறார்கள் என்று கதைக்கின்றனர்.

சிஎஸ்கே மந்தமான பிட்ச்கள் மூலம் வீரர்களின் பன்முகத்திறமையையும் கிரிக்கெட் ஆட்டத்தின் பன்முகத்தன்மையையும் பல்பரிமாணத்தையும் காலி செய்வது போல் ஆர்சிபி கோலி என்ற வர்த்தக ஒளிவட்டம் நிரம்பிய ஒரு வீரரைச் சுற்றி பிம்பக் கட்டுமானம் எழுப்பி வருகிறது. இது ஒற்றை வீரருக்கேற்ப கிரிக்கெட்டை ஒடுக்குவதாகும்.

சிஎஸ்கேவின் வெற்றிகள் இத்தகைய குறுக்கங்களினால் ஆனது என்றால் ஆர்சிபியின் தோல்விகள் கோலி என்னும் தனிநபரின் பிம்பக் கட்டுமானத்தினால் ஏற்படுகின்றது. கிரிக்கெட் ஆட்டத்தின் வீரர்களின் பல்பரிமாணத் திறன்களைக் காலி செய்வது விளையாட்டின் தாத்பர்யத்திற்கே எதிரானது என்ற முடிவுக்கு நாம் வருவது தவிர்க்க முடியாததே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x