Published : 04 Apr 2024 11:30 PM
Last Updated : 04 Apr 2024 11:30 PM

GT vs PBKS | ஷஷாங், அஷுதோஷ் அதிரடி பேட்டிங்: குஜராத்தை வென்ற பஞ்சாப்

படம்: பிசிசிஐ

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 17-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதில் பஞ்சாப் அணிக்காக ஷஷாங் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோர் சிறப்பாக பேட் செய்திருந்தனர்.

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி விரட்டியது. கேப்டன் ஷிகர் தவன் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். தவன், 1 ரன்னில் போல்ட் ஆனார். பேர்ஸ்டோ, 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். பிரப்சிம்ரன் சிங், 24 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். சாம் கரன் 5 ரன்களிலும், சிக்கந்தர் ரஸா 15 ரன்களிலும் வெளியேறினர்.

ஷஷாங் சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா இணைந்து 39 ரன்கள் சேர்த்தனர். ரஷித் கான் வீசிய 16-வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசி, மூன்றாவது சிக்ஸருக்கு முயன்று ஆட்டமிழந்தார் ஜிதேஷ். இம்பேக்ட் வீரராக அஷுதோஷ் சர்மா களம் கண்டார். அவருடன் இணைந்து ஷஷாங் சிங் இன்னிங்ஸில் அதிரடி காட்ட 43 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

17 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த அஷுதோஷ், கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. வெற்றிக்கான ரன்களை 19.5 பந்துகளில் பஞ்சாப் அணி எட்டியது. ஷஷாங் சிங், 29 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் குஜராத் அணியின் ஓப்பனர்களாக சுப்மன் கில், ரித்திமான் சாஹா களமிறங்கினர். பொறுமையாக தொடக்கம் கொடுத்த இந்த இணையை ரபாடா 3-வது ஓவரில் பிரித்தார். 11 ரன்களில் ரித்திமான் சாஹா அவுட்..

அடுத்து வந்த கேன் வில்லியம்சன் நிதானமான விளையாடி ரன்களைச் சேர்த்தார். அவரை ஹர்ப்ரீத் ப்ரார் 10வது ஓவரில் 26 ரன்களுக்கு விக்கெட்டாக்கினார். 10 ஓவர் முடிவில் குஜராத் 2 விக்கெட் இழப்புக்கு 83 ரன்களை சேர்த்திருந்தது.

சுப்மன் கில்லுடன் சாய் சுதர்சன் கைகோத்தார். ஆனால் அவரும் 33 ரன்களில் கிளம்பினார். அவரைத் தொடர்ந்து வந்த விஜய் சங்கரும் 8 ரன்களில் நிலைக்காமல் சென்றுவிட்டார்.

இதனிடையே கேப்டனாக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பஞ்சாப் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனாக திகழ்ந்தார் கில். 4 சிக்சர்களை விளாசி, 48 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். நடப்பு தொடரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் இதுவாகும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்த குஜராத் 199 ரன்களைச் சேர்த்தது. சுப்மன் கில் 89 ரன்களுடனும், ராகுல் தெவாட்டியா 23 ரன்களுடனும் இருந்தனர்.

பஞ்சாப் அணி தரப்பில் ராபாடா 2 விக்கெட்களையும், ஹர்ஷத் படேல், ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x