Published : 26 Mar 2018 04:17 PM
Last Updated : 26 Mar 2018 04:17 PM

ஸ்மித் நீக்கம்: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக ரஹானே நியமனம்

 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயலஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக, அஜிங்கியா  ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது கேமிராவில் பதிவானது. இதையடுத்து பேட்டி அளித்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதற்காக திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தினோம் என்று ஒப்புக்கொண்டார்.

இதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவி ஸ்டீவ் ஸ்மித்திடம் இருந்தும், துணைக் கேப்டன் பதவி டேவிட் வார்னரிடம் இருந்தும் பறிக்கப்பட்டது. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி தார்மீக ரீதியான நம்பிக்கையை இழந்ததால், படுதோல்வி அடைந்தது.

ஸ்மித்துக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும், 100 சதவீதம் அபராதமும் விதித்து ஐசிசி உத்தரவிட்டது. மேலும், பான்கிராப்டுக்கு 75 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டித் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித் அதில் தொடர்வாரா அல்லது நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அதற்கு தெளிவாக பதில் சொல்லாமல், ராஜஸ்தான் ராயலஸ் அணி நிர்வாகம் இருந்தது.

இதற்கிடையே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இன்று அறிவித்தார். இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இந்திய வீரர்  ரஹானே நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது.

இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவர்களில் ஒருவரான ஜூபின் பஹருச்சா கூறுகையில், ‘ கேப்டவுனில் நடந்த போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கிரிக்கெட் உலகமே அதிர்ந்துள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐயுடன் தொடர்ந்து தகவல் தொடர்பில் இருந்து வருகிறோம்.

2 ஆண்டுகள் தடைக்கு பின் ஐபிஎல் போட்டிக்கு வந்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நலன் கருதி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார். அவர் அணியில் தொடர்ந்து இருப்பார், அவருக்கு அனைத்து வகையான ஆதரவும் தரப்படும்.

அதேசமயம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இந்திய வீரர் ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். அணியோடு நீண்டகாலம் தொடர்பில் இருந்த வீரர். ராஜஸ்தான் அணிக்கு சிறந்த கேப்டனாக அவர் இருப்பார் என நம்புகிறோம்.

கிரிக்கெட்டின் கண்ணியத்தை காக்க ராஜஸ்தான் அணி அனைத்து பணிகளையும் செய்யும். ஸ்டீவ் ஸ்மித் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகியதே நாங்கள் வரவேற்கிறோம்’ எனத் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐபிஎல் போட்டியில், ஜெய்பூரில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.

ஜெய்பூரைச் சேர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வாட்ஸனுக்கு(2,474ரன்கள்)பின், சிறந்த பேட்ஸ்மனாக ரஹானே இருந்து வருகிறார். ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள ரஹானே, இதுவரை 72 ஆட்டங்களில் விளையாடியுள்ள ரஹானே 2,333 ரன்கள் சேர்த்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ரஹானே, அதன்பின் 2011 முதல் 2015-ம் ஆண்டுவரை ராஜஸ்தான் ராயலஸ் அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x