Published : 31 Mar 2024 05:52 AM
Last Updated : 31 Mar 2024 05:52 AM

‘ரசிகர்கள் வீரர்களை அவமதிக்கக்கூடாது’ - ஹர்திக் பாண்டியாவுக்கு அஸ்வின் ஆதரவு

ஹர்திக் மற்றும் அஸ்வின்

சென்னை: ஐபிஎல் தொடரில் இந்த சீசனுக்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் மும்பை அணி தனது முதல் ஆட்டத்தை அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது.

கடந்த இரு சீசன்களிலும் பாண்டியா குஜராத் அணிக்காக விளையாடிய நிலையில் தற்போது மும்பை அணிக்காக களமிறங்கியதை ரசிகர்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர் விமர்சித்ததுடன் போட்டியின் போது அவருக்கு எதிராக கூச்சலிட்டனர். மும்பை தனது 2-வது ஆட்டத்தை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடி போதும் ஹர்திக்பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்களின் கூச்சல் தொடர்ந்தது.

இந்நிலையில் இந்த விஷயம் குறித்து இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராஜஸ்தான் ராயஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் மனம் திறந்து பேசியுள்ளார். இதுதொடர்பாக தனது யூடியூப் சானலில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அஸ்வின் கூறியதாவது:

வீரர்கள் எந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். இது நமது நாடு. ரசிகர் சண்டைகள் இப்படி ஒரு அசிங்கமான பாதையில் செல்லக் கூடாது, இது சினிமா கலாச்சாரம், இங்கு மட்டும்தான் இதுபோன்று நடக்கும். இந்த சண்டைகள் வேறு எந்த நாட்டிலாவது நடந்ததை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

விளையாட்டில் உண்மையான உணர்வுகளுடன் கூடிய உண்மையான வீரர்கள் உள்ளனர், எதுவும் ஸ்கிரிப்ட் செய்யப்படவில்லை. ஹீரோவை கொண்டாடுவது சிறந்ததுதான், ஆனால் விளையாட்டை ஒருபோதும் சினிமாவுடன் ஒப்பிடக்கூடாது. உங்களுக்கு பிடித்த வீரர்கள் அல்லது அணியைப் பற்றி நீங்கள் விரும்புவதை கூற உங்களுக்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் மற்றொரு வீரரை தாழ்த்தி பேசக்கூடாது. இது நம் நாட்டில் மறைந்து போவதை நான் காண விரும்புகிறேன். இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x