Published : 26 Mar 2024 11:55 PM
Last Updated : 26 Mar 2024 11:55 PM

CSK vs GT | குஜராத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

சென்னை அணி வீரர்கள்

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 7-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 63 ரன்களில் வீழ்த்தியுள்ளது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது. சென்னை அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. ரச்சின் ரவீந்திரா 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ருதுராஜ் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஷிவம் துபே, 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். 6 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து அசத்தினார் சமீர் ரிஸ்வி. மிட்செல் 24 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். குஜராத் அணி சார்பில் ரஷித் 2 விக்கெட் கைப்பற்றி இருந்தார். சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன், மோகித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குஜராத் விரட்டியது. கேப்டன் கில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு சீரான இடைவெளியில் குஜராத் அணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். சாஹா, விஜய் ஷங்கர், மில்லர், சாய் சுதர்ஷன், ஓமர்ஸாய், ரஷித், தெவாட்டியா ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 37 ரன்கள் எடுத்திருந்தார்.

20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. அதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் 2 போட்டிகளில் விளையாடி அந்த இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது சிஎஸ்கே. தீபக் சஹர், முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்களை இந்தப் போட்டியில் கைப்பற்றி இருந்தனர். மிட்செல் மற்றும் பதிரனா தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். ஷிவம் துபே ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

டைவ் அடித்த தோனி: போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் 7.3-வது ஓவரில் மிட்செல் வீசிய ஓவரில் ஆட்டமிழந்தார் விஜய் ஷங்கர். மிட்செல் வீசிய பந்து எட்ஜ் ஆக விக்கெட் கீப்பர் பணியை கவனித்த தோனி, தனது வலது பக்கம் சுமார் 2 மீட்டர் தூரம் டைவ் அடித்து பந்தை பிடித்து அசத்தி இருந்தார். அப்போது சேப்பாக்கம் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் உற்சாக ஒலி எழுப்பி இருந்தனர். நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் தோனி பேட் செய்யவில்லை. இருந்தும் விக்கெட் கீப்பிங் பணி சார்ந்த அவரது செயல்பாடு அபாரமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x