Published : 06 Mar 2024 08:16 PM
Last Updated : 06 Mar 2024 08:16 PM

ஐபிஎல் 2024 வல்லவர்கள் | சமீர் ரிஸ்வி - சிஎஸ்கேவின் ‘ரூ.8.4 கோடி’ டொமஸ்டிக் கில்லி எப்படி?

சமீர் ரிஸ்வி | கோப்புப்படம்

ஐபிஎல் 2024 சீசனுக்காக ரூ.8.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ள வீரர்தான் சமீர் ரிஸ்வி. 20 வயதான இவர் உள்ளூர் அளவில் மட்டுமே கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலது கையில் பேட் செய்யும் சுரேஷ் ரெய்னா என வர்ணிக்கப்படுகிறார். அதிரடி பாணி ஆட்டத்துக்கு சொந்தக்காரர்.

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனாக பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மாஸ்டர் மைண்ட் ஆன தோனி, முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு பங்கேற்று விளையாடவுள்ள போட்டித் தொடராக இந்த சீசன் அமைந்துள்ளது. வழக்கம் போலவே அவரது கடைசி சீசன் இதுவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ், கான்வே அணியின் நம்பிக்கை. இதில் கான்வே காயம் காரணமாக சில வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.

ருதுராஜ், வழக்கம்போலவே ரன் குவிப்பில் இந்த முறையில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜடேஜா, ஆல்ரவுண்ட் பர்ஃபாமென்ஸ் கொடுத்து மிரட்டுவார். டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திராவை வாங்கியது, ஷர்துல் தாக்குரின் ரிட்டர்ன் போன்றவை டிசம்பரில் நடந்த மினி ஏலத்தின் மூலம் அணிக்கு பலம் சேர்க்கிறது. பதிரனா, தீக்‌ஷனா, மிட்செல் சான்ட்னர், மொயீன் அலி, ஷிவம் துபே, ரஹானே, தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சவுத்ரி, முஸ்தபிசுர் ரஹ்மான், ஹங்கர்கேகர் என பெரிய பட்டாளமே அணியில் அங்கம் வகிக்கின்றனர். இதில் ஒருவராக சமீர் ரிஸ்வி இடம்பெற்றுள்ளார்.

சமீர் ரிஸ்வி: சிறு வயது முதல் தொழில்முறை கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் ரிஸ்வி, டொமஸ்டிக் கிரிக்கெட்டில் உத்தரப் பிரதேச அணிக்காக கடந்த 2020 முதல் விளையாடி வருகிறார். அவரது ஆரம்பகால பயிற்சியாளர் அவரது மாமா தன்கிப் அக்தர்தான். மீரட் நகரில் அவரது பயிற்சி தொடங்கியது. கடந்த ஆண்டு நடைபெற்ற யுபி டி20 லீக் கிரிக்கெட் தொடர் மூலம் லைம்லைட்டுக்குள் வந்தவர்.

அந்த சீசனில் கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக 10 போட்டிகளில் விளையாடி 455 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 188. ஆவரேஜ் 50+. சராசரியாக 11 பந்துகளுக்கு ஒரு சிக்ஸரை பறக்க விடும் திறன் கொண்ட நடுவரிசை நாயகன். கடந்த சீசனில் மட்டும் 35 சிக்ஸர்களை விளாசி இருந்தார்.

நடப்பு சிகே நாயுடு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். காலிறுதியின் முதல் இன்னிங்ஸில் முச்சதம், அடுத்த இன்னிங்ஸில் அரைசதம் மற்றும் மும்பை அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 89 ரன்களும் குவித்துள்ளார். தற்போது யுபி அணி இந்த தொடரில் இறுதிப் போட்டியில் கர்நாடகாவை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் யுபி அணியை கேப்டனாக ரிஸ்வி வழிநடத்தி வருகிறார்.

அபார ஃபீல்டிங் திறன் கொண்டவர். இதை நேரில் பார்த்த ரெய்னா, அவரை பாராட்டியதாகவும் தகவல். ரெய்னாவும் உத்தர பிரதேச அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியவர்தான். ரிங்கு சிங், இவரது சீனியர். இருவரும் யுபி அணிக்காக விளையாடி வருகிறார்கள். இருந்தும் களத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சில கடினமான தருணங்களை அவர் கடந்து வந்துள்ளார்.

சிஎஸ்கே-வில் என்ன ரோல்? - ஏற்கெனவே சிஎஸ்கே அணியின் ஆடும் லெவனில் இடம்பிடிக்க போட்டா போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலில் ரிஸ்விக்கு சிஎஸ்கே-வில் என்ன ரோல் என்ற கேள்வியும் எழவே செய்கிறது. சுரேஷ் ரெய்னா, ராயுடு போன்ற இந்திய பேட்டர்கள் அணியில் இல்லாத சூழலில் ரிஸ்வி அந்த இடத்தை நிரப்ப சரியான தேர்வாக இருப்பார் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ரூ.8.40 கோடிக்கு வாங்கிய வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் பெஞ்சில் உட்கார வைக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சுழலுக்கு எதிராக அபார ஸ்ட்ரைக் ரேட் கொண்ட ரிஸ்வியின் திறன், சென்னை - சேப்பாக்கம் ஆடுகளத்தில் சிஎஸ்கேவுக்கு வலு சேர்க்கும். பேட்டிங் ஆர்டரில் ஜடேஜா மற்றும் தோனிக்கு முன்னதாக அவர் பேட் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இம்பேக்ட் பிளேயராக கூட விளையாட வாய்ப்பு உள்ளது.

“எனது ஆட்டத்தை ரெய்னாவின் ஆட்டத்துடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். அந்த வகையில் அவர் சிஎஸ்கே அணிக்காக செய்ததை நானும் செய்ய விரும்புகிறேன். நான் எனது அனைத்து திறனையும் வெளிப்படுத்துவேன். பதற்றம் இல்லாமல் ஆடினால் ரன் சேர்க்கலாம் என ரிங்கு சிங் சொன்னார். சென்னை விக்கெட் எப்படி இருக்கும் என நான் அறிவேன். அதற்கு ஏற்ப தயாராவேன்” என நம்பிக்கையுடன் ரிஸ்வி சொல்கிறார். நிச்சயம் இந்த ஸ்பார்க் சிஎஸ்கே-வின் ஆறாவது கோப்பைக்கு ஒளி சேர்க்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x