Published : 12 Mar 2024 08:46 PM
Last Updated : 12 Mar 2024 08:46 PM

ரச்சின் ரவீந்திரா - மஞ்சள் படையின் ரட்சகன் I ஐபிஎல் 2024 வல்லவர்கள்

ரச்சின் ரவீந்திரா

நடப்பு ஐபிஎல் சீசனில் பேட்டிங் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இவர் சென்னை அணிக்கு ஏலத்தில் கிடைத்த ஜாக்பாட் வீரர் என பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை ரச்சின் வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இந்த சீசனுக்கு தயாராகும் வகையில் கேப்டன் தோனி உட்பட சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் சிலர் சென்னையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அணியின் பலங்களில் ஒன்று அதன் தொடக்க ஆட்டக்காரர்கள். மேத்யூ ஹேடன், பிளெம்மிங், மைக் ஹஸ்ஸி, முரளி விஜய், டுவைன் ஸ்மித், மெக்கல்லம், ஷேன் வாட்சன், டூப்ளசி என அபார ஆட்டக்காரர்கள் ஆடிய இடம்.

கடந்த 2022-ல் நடைபெற்ற மெகா ஏலத்தின் போது சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய டூப்ளசி விடுவிக்கப்பட்டார். அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. அந்த அணியின் கேப்டனாக அவர் தற்போது இயங்கி வருகிறார். அவருக்கு மாற்றாக நியூஸிலாந்து வீரர் டேவன் கான்வே, அவரது அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு வாங்கப்பட்டார்.

கடந்த இரண்டு சீசன்களிலும் 23 போட்டிகளில் ஆடி 924 ரன்கள் அவர் எடுத்திருந்தார். அவரது பேட்டிங் சராசரி 48.63. கடந்த சீசனில் 672 ரன்கள் குவித்திருந்தார். ருதுராஜ் உடன் சேர்ந்து சிறப்பாக இன்னிங்ஸை ஓப்பன் செய்திருந்தார். தற்போது அவருக்கு பெருவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக 8 வார காலம் ஐபிஎல் 2024 சீசனை மிஸ் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக ரச்சின் ரவீந்திரா விளையாட வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த சீசனில் சிஎஸ்கே-வின் Most Valuable Player-ஆக அவர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கான்வேவுக்கு மாற்றாக சிஎஸ்கே நிர்வாகம் யாரையும் ஒப்பந்தம் செய்யாமல் உள்ள நிலையில் இது சொல்லப்பட்டு வருகிறது.

ரச்சின் ரவீந்திரா: சர்வதேச கிரிக்கெட்டில் நியூஸிலாந்து அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர். இடது கை பேட்டிங் ஆல்ரவுண்டர். இடது கை சுழற்பந்து வீசும் திறன் கொண்டவர். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் 10 இன்னிங்ஸ் ஆடி 578 ரன்கள் குவித்தார். 3 சதம் மற்றும் 2 அரை சதம் இதில் அடங்கும். 5 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தார்.

உலகக் கோப்பை தொடரில் நான்கு போட்டிகளில் இன்னிங்ஸை ஓப்பன் செய்திருந்தார். இதில் ஒரு சதமும் அடங்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரராக 7 இன்னிங்ஸ் ஆடியுள்ளார். மொத்தமாக 21 ஒருநாள் இன்னிங்ஸ் இதுவரை ஆடியுள்ளார்.

டி20 கிரிக்கெட்டிலும் 6 முறை தொடக்க ஆட்டக்காரராக நியூஸிலாந்து அணிக்காக பேட் செய்துள்ளார். இதை வைத்து பார்க்கும்போது அவரே கான்வேவுக்கு மாற்றாக ருதுராஜ் உடன் இன்னிங்ஸை ஓப்பன் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. சுழற்பந்து வீச்சை திறம்பட சமாளித்து ஆடுவார். அவரது பேட்டிங் புள்ளி விவரங்களை ஒப்பிட்டு பார்க்கையில் பவுண்டரிகளை அதிகம் விரட்டும் வீரர் என அறிந்து கொள்ள முடிகிறது.

இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 18 இன்னிங்ஸ் ஆடியுள்ளார். அதில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே பதிவு செய்துள்ளார். இருந்தாலும் அவரது ஒருநாள் கிரிக்கெட் செயல்பாடு காரணமாக சிஎஸ்கே-வில் அசத்தல் ஆட்டத்தை இந்த சீசனில் வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் சேப்பாக்கத்தில் அவரது ஆட்டம் அமர்க்களமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x