Published : 23 Mar 2024 11:53 AM
Last Updated : 23 Mar 2024 11:53 AM

ஐபிஎல் அலசல்: சேப்பாக்கத்தில் தேறாத ஆர்சிபி-யும், ருதுராஜ் கேப்டன்சி தருணங்களும்!

சிஎஸ்கே அணி இதுவரை தல தோனியின் அணி என்று அறியப்பட்ட நீண்ட நெடும் பாரம்பரியத்தில் இருந்து விடுபட்டு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியில் முதல் வெற்றியை நேற்று சேப்பாக்கத்தில் ருசித்தது. சேப்பாக்கத்தில் ஆர்சிபி அணி சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டங்களில் சொதப்பியதாகத்தான் வரலாறு இருக்கிறதே தவிர ஃபைட் கொடுத்ததாக இல்லை. நேற்றும் அதுதான் நடந்தது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்தது சரியே. ஆனால் விராட் கோலியை ஓப்பனிங்கில் இறக்கியது தவறு, கேமரூன் கிரீனைத்தான் இறக்கியிருக்க வேண்டும். கோலி ஒரே தடுமாற்றம். அவர் 20 பந்துகளில் வெறும் 21 ரன்களே என்பது அவருடைய திறமைக்கும் அனுபவத்திற்கும் சான்றாக இல்லை.

மேலும் தீபக் சாஹர் போன்ற பவுலர்களுக்கெல்லாம் கிரீசில் நின்று ஆடலாமா? என்பதுதான் நம் கேள்வி. அவரே காயத்திலிருந்து வந்து பயந்து பயந்து வீசிக் கொண்டிருக்கிறார். அவரையெல்லாம் கையிலிருந்தே பந்தைப் பிடுங்கி அடிக்க வேண்டாமா என்பதுதான் நம் கேள்வி.

சிஎஸ்கேவின் அறிமுக பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் திறமையான பவுலர் அவர். நேற்று தனது சிறந்த ஐபிஎல் ஸ்பெல்லை வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு ஐபிஎல் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2வது வங்கதேச பவுலராகவும் சாதனை புரிந்தார். இவரது கட்டர்கள் நேற்று அருமை.

ஆர்சிபி பேட் செய்த போது பந்துகள் நன்றாக மட்டைக்கு வந்தன.அப்போதே 200 ரன்களை எடுத்திருக்க வேண்டும். சென்னை பேட் செய்த போது பிட்ச் கொஞ்சம் ஸ்லோ ஆனது. ரச்சின் ரவீந்திரா தன் முதல் ஐபிஎல் ஆட்டத்திலேயே அசத்தினார். 15 பந்துகளில் 37 என்று 246 ஸ்ட்ரைக் ரேட்டுடன் பின்னி எடுத்தார்.

174 ரன்கள் இலக்கிற்கு ஆர்சிபியின் கேமரூன் கிரீன், அல்சாரி ஜோசப் திறமையாக வீசினர். கேமரூன் கிரீன் ஸ்லோ கட்டர்கள் வீசி சிஎஸ்கே வீரர்களை படுத்தினார். அதேபோல் அல்சாரி ஜோசப் பிட்ச் பற்றியெல்லாம் கவலையில்லாமல் ஷார்ட் பிட்ச் பந்துகளில் திறமையாக வீசி ஷிவம் துபே போன்ற வீரருக்கு கிரிக்கெட்னா சும்மா இல்ல தம்பி என்று பாடம் எடுத்தார். அவரது பாடிலைன் பவுலிங்கிற்கு ஷிவம் துபே கிரீசில் நடனமாடியதைத்தான் பார்க்க முடிந்தது. முதல் 13 பந்துகளில் 7 ரன்களையே ஷிவம் துபே எடுக்க முடிந்தது. ஆனால் அதன் பிறகு அடித்து ஆடினார், இவரும் ஜடேஜாவும் இலக்கை எட்ட உதவினர்.

டுபிளெசிஸ் அருமை: பேட்டிங் இறங்கியதும் முதல் 3 ஓவர்களில் 7 பவுண்டரிகளை விளாசினார் ஆர்சிபி கேப்டன் டுபிளெசிஸ். துஷார் தேஷ்பாண்டே, தீபக் சாஹர் அவரிடம் வாங்கினர். அப்போது ருதுராஜ் ஒரு நல்ல கேப்டன்சி செய்தார். டீப் எக்ஸ்ட்ரா கவரைக் கொண்டு வந்தார். டுபிளெசிஸ் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்ச் ஆனார். முஸ்தபிசுர் பிறகு ரஜத் படிதாரையும் எட்ஜ் ஆக்கி வீழ்த்தினார். கிளென் மேக்ஸ்வெல், தீபக் சாஹரிடம் விக்கெட்டைக் கொடுத்ததற்காகவே அவரை ஒரு மேட்ச் உட்கார வைக்க வேண்டும். 37 நோலாஸில் இருந்து 3 விக்கெட்டுகளை விரைவாக இழந்தது ஆர்சிபி.

ஆனால் அதன் பிறகு ஓல்ட் ஹார்ஸ் தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் இணைந்து 50 பந்துகளில் 95 ரன்களை 6வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் ஆர்சிபி 28 பந்துகள் பவுண்டரி இல்லாமல் இருந்தது. இந்த 28 பந்துகளில் 5 பவுண்டரிகளையேனும் அடித்திருந்தால் ஸ்கோர் 200 ஆகியிருக்கும். அங்கு தோனி இருந்தால் இதை சேஸ் செய்ய முடியாது, ரன் ரேட்டுக்கு ஆடுங்கள் என்று உபதேசித்திருப்பார். ஆனால் ஆர்சிபி சொதப்பியது.

சிஎஸ்கேவுக்கு டேரில் மிட்செல் இறங்கியவுடன் இரண்டு பெரிய சிக்சர்களை விளாசினார். ஆர்சிபியில் நல்ல ஸ்பின்னர்களே இல்லை. அஜிங்கிய ரஹானே 19 பந்துகளில் 27 ரன்களையும் டேரில் மிட்செல் 18 பந்துகளில் 22 ரன்களையும் எடுத்தனர். 8 பந்துகள் மீதமிருக்க சிஎஸ்கே வென்றது. நடுவில் அந்த 28 பந்துகள் பவுண்டரியே அடிக்காமல் ஆர்சிபி அணி ஆடியதுதான் தோல்விக்குக் காரணமானது. ருதுராஜ் கேப்டன்சியில் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது சிஎஸ்கே.

இன்றைய போட்டிகள்:

மதியம் 3:30
முல்லன்பூர்
பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ்

இரவு 7:30
ஈடன் கார்டன்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x