Published : 14 Mar 2024 06:20 PM
Last Updated : 14 Mar 2024 06:20 PM

“ரோகித் இன்னும் இந்திய அணி கேப்டன் என்பதை மறவாதீர்” - யுவராஜ் சிங் @ மும்பை அணி விவகாரம்

மும்பை: "ரோகித் சர்மா இன்னும் இந்தியாவின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதனை மறக்கக் கூடாது" என்று மும்பை அணியின் கேப்டன் மாற்றம் குறித்து முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

2013-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா இந்த சீசனில் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பைகளை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. தற்போது மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்தது. மும்பை பயிற்சியாளருக்கும் ரோகித்தின் மனைவிக்கும் கருத்து மோதல் உண்டானது. எனினும், இந்த விஷயம் குறித்து ரோகித் மவுனம் காத்து வருகிறார்.

ஐபிஎல் தொடர் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள இந்த நேரத்தில், ரசிகர்கள் ரோகித் சர்மாவை மீண்டும் கேப்டனாகக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை சமூக வலைதளங்களில் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் இந்த சர்ச்சை தொடர்பாக பேசியுள்ளார். அதில், “ரோகித் மும்பை அணிக்காக 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார். அவரை நீக்குவது பெரிய முடிவு.

என்னை கேட்டால், அவர்கள் ஹர்திக் பாண்டியாவை உள்ளே கொண்டு வந்ததுபோல நானும் ஏதாவது வீரரை கொண்டு வந்திருப்பேன். ஆனால் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவுக்கு இன்னும் ஒருவருடத்துக்கு கொடுத்திருப்பேன். ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக ஆட வைத்திருப்பேன். அப்படி செய்து மொத்த அணியும் எப்படி இருக்கிறது என்று பார்த்திருப்பேன்.

மும்பை அணி நிர்வாகத்தின் பார்வையில் இருந்து பார்க்கும் போது, அணியின் எதிர்காலம் முடிவுக்குப் பின்னால் இருப்பதை புரிந்துகொள்கிறேன். எனினும், ரோகித் சர்மா இன்னும் இந்தியாவின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதனை மறக்கக் கூடாது.

ஹர்திக் பாண்டியாவுக்கு திறமை இருக்கிறது. ஆனால், குஜராத் அணியின் கேப்டனாக இருப்பதும், மும்பை அணியின் கேப்டனாக இருப்பதும் ஒன்றல்ல. எதிர்பார்ப்புகள் அதிகம். மும்பை இந்தியன்ஸ் ஒரு பெரிய அணியாக இருக்கிறது" என்று யுவராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x