IPL 2024 | மும்பை அணியில் இணைந்த ஹர்திக் பாண்டியா: பூஜை போட்டு வழிபாடு!

பாண்டியா மற்றும் மார்க் பவுச்சர்
பாண்டியா மற்றும் மார்க் பவுச்சர்
Updated on
1 min read

மும்பை: வரும் 22-ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் சீசன் தொடங்க உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா. அந்த கையோடு டிரெஸ்ஸிங் ரூமில் சாமி படத்துக்கு பூ மாலை அணிவித்து, தீபம் ஏற்றி வழிபட்டார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார் ஹர்திக். கடந்த இரண்டு சீசன்களாக அவர், குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தி இருந்தார். அதில் ஒரு முறை சாம்பியன் பட்டமும், மற்றொரு முறை இரண்டாவது இடமும் அந்த அணி பிடித்தது. இந்த சூழலில் மீண்டும் அவர் மும்பை அணிக்கு திரும்பி உள்ளார். இந்த முறை அணியின் கேப்டனாக அவர் செயல்பட உள்ளார்.

30 வயதான ஹர்திக், கடந்த 2015 முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இதில் மும்பை அணிக்காக 92 போட்டிகளில் 85 இன்னிங்ஸ் ஆடி உள்ளார். அதன் மூலம் 1476 ரன்கள் எடுத்தார். 42 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தார். அதுவே குஜராத் அணிக்காக 30 இன்னிங்ஸ் ஆடி 833 ரன்கள் குவித்துள்ளார். இந்த நிலையில் தான் மீண்டும் தாய் வீடான மும்பை அணிக்கு அவர் திரும்பியுள்ளார்.

கடந்த உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக அவர் விலகினார். அதன் பிறகு இப்போது தான் தொழில்முறை கிரிக்கெட் போட்டியில் கம்பேக் கொடுத்துள்ளார். இடையில் உடற்தகுதியை நிரூபிக்க டிஒய் பாட்டீல் டி20 தொடரில் விளையாடி இருந்தார்.

திங்கள்கிழமை (மார்ச் 11) அன்று மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் இணைந்தார். அப்போது மும்பை அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் சாமி படம் வைத்து, அதற்கு பூ மாலை அணிவித்து, தீபம் ஏற்றி வழிபட்டார். அப்போது அவருடன் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் உடன் இருந்தார். அவர் தேங்காய் உடைத்து வழிபட்டார். ‘ஆட்டத்தை தொடங்குவோம்’ என சொல்லி மும்பை இந்தியன்ஸ் அணி இதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in