Published : 02 Mar 2024 06:12 AM
Last Updated : 02 Mar 2024 06:12 AM

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் | அரை இறுதியில் மும்பையுடன் தமிழக அணி இன்று மோதல்

தமிழ்நாடு அணி வீரர்கள்

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின்அரை இறுதி ஆட்டத்தில் மும்பை–தமிழகம் அணிகள் இன்று மோதுகின்றன.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி சுற்று இன்று தொடங்குகிறது. இதில் மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் 41 முறை சாம்பியனான மும்பையுடன் தமிழகஅணி பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பை அணியில் இந்திய பேட்ஸ்மேனான ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்குகிறார். இந்தத் தொடரில் தமிழக அணி சுழற்பந்து வீச்சில் வலுவாக செயல்பட்டு வருகிறது. இதைசமாளிக்கவே ஸ்ரேயஸ் ஐயர்அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

கால் இறுதி சுற்றில் தமிழகம், மும்பை ஆகிய இரு அணிகளுமே தாக்கத்தை ஏற்படுத்தின. பரோடா அணிக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் மும்பை அணியின் முஷீர் கான் 203 ரன்கள் விளாசினார். அதேவேளையில் 2-வது இன்னிங்ஸில் 10 மற்றும் 11-வது வீரர்களாக களமிறங்கிய தனுஷ் கோட்டியன், துஷார் தேஷ் பாண்டே ஆகியோர் சதம் விளாசி சாதனை படைத்திருந்தனர். அதேவேளையில் தமிழக அணி கால் இறுதி சுற்றில் நடப்பு சாம்பியனான சவுடிராஷ்டிராவை தோற்கடித்திருந்தது.

தனித்துவமான அம்சமாக இந்த சீசனில் தமிழக அணி விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் எதிரணியை இரண்டு முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளது. லீக் சுற்றில் தமிழகம், மும்பை அணிகள் தலா ஒரு தோல்வியை மட்டுமே பெற்றன.

தமிழக அணியில் பேட்டிங்கில் நாராயண் ஜெகதீசன், பாபா இந்திரஜித் ஆகியோர்சிறந்த பார்மில் உள்ளனர். முச்சதம்,இரட்டை சதம் என 821 ரன்களை வேட்டையாடி உள்ள நாராயண் ஜெகதீசனிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.

29 வயதான பாபா இந்திரஜித் ஒரு சதம் உட்பட 686 ரன்கள் குவித்துள்ளார். கடந்த 3 ஆட்டங்களில் அவர், முறையே 80, 187, 98 மற்றும் 48 ரன்கள் சேர்த்தார். தொடர்ச்சியாக சீரான செயல் திறனை வெளிப்படுத்தி வரும் பாபா இந்திரஜித்திடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் பிரதோஷ் ரஞ்ஜன் பால், விஜய் சங்கர் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்கள். ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் அணிக்கு திரும்பி இருப்பது கூடுதல் வலுசேர்க்கக்கூடும்.

மும்பை அணியானது நீண்டபேட்டிங்கை வரிசையை உள்ளடக்கியதாக திகழ்கிறது. டாப் ஆர்டரில் பிரித்வி ஷா, பூபேன் லால்வானி, முஷீர் கான் ஆகியோர் பலம் சேர்க்கும் நிலையில் நடுவரிசையில் ஷம்ஸ் முலானி, சூர்யான்ஷ்ஷெட்ஜ், ஹர்திக் தாமோர், ஷர்துல் தாக்குர் ஆகியோரும் நம்பிக்கையுடன் செயல்படக்கூடியவர்கள் என்பதால் மட்டை வீச்சுக்கு சாதகமான பாந்த்ரா குர்லா மைதானத்தில் மும்பை அணி பெரிய அளவில் ரன்வேட்டை நிகழ்த்துவதில் கவனம் செலுத்தக்கூடும்.

அதேவேளையில் இந்த தொடரில் 47 விக்கெட்களை வீழ்த்தி உள்ள சாய் கிஷோர், 41 விக்கெட்களை கைப்பற்றிய அஜித் ராம் ஆகியோரது சுழற்பந்து வீச்சு மும்பை அணிக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x